Published:Updated:

வேண்டாமே வீண்செலவு! - புவனா ஶ்ரீராம்

சேமிப்பும் சிக்கனமும்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தைவிட, இந்தச் சூழல் எப்போது சரியாகும், இனி வாழ்க்கை சூழல் எப்படி மாறும் என்ற பய உணர்வையும், கவலையையும் சராசரி மக்களிடம் இயல்பாகப் பார்க்க முடிகிறது.

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் 20 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பு இழப்பையும், 40 சதவிகிதம் பேர் ஊதிய குறைப்பையும் சந்தித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் பொருள்களில் விலை ஒருபுறம் அதிகரித்துவருவதால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நேரத்தில் குடும்பத்துக்கான எதிர்கால சேமிப்புக்கு எப்படி திட்டமிட வேண்டும். குடும்ப பட்ஜெட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை வழங்குகிறார் `ப்ளான் 2 ப்ராஸ்பர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புவனா ஶ்ரீராம்.

புவனா ஶ்ரீராம்
புவனா ஶ்ரீராம்

நிதி நிலை

வேலையிழப்பு, ஊதிய குறைப்பு ஏற்பட்டு, குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்கும் சூழல் உள்ளதால், சேமிப்பு பற்றி யோசிக்காமல், கையில் இருக்கும் பணத்தை மிக, மிக அவசியத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருப்பதால் போக்குவரத்து செலவுகள், வார விடுமுறை நாள் செலவுகள் போன்றவை இல்லாமல் இருக்கிறது. இந்தத் தொகையையெல்லாம் உங்களின் அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் வேலையிழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், வீண் செலவுகளைக் குறைத்து, அவசர கால வைப்பு நிதியை உருவாக்கத் திட்டமிடுவது அவசியம்.

அவசர கால நிதி

உண்டியல் பணம், வங்கிகளில் சேமித்திருக்கும் தொகைகள்கூட, அவசர கால வைப்பு நிதிகளே. அவசர கால வைப்பு நிதி, சரியான திட்டமிடலின்படி இருந்தால், குடும்பத்துக்கு வரும் எந்த இடர்பாடுகளையும் கடந்துவிட இயலும். ஒரு குடும்பத்தின் அவசர கால நிதி என்பது, குறைந்தபட்சம் குடும்பத்தின் மாதச் செலவைப்போல சுமார் மூன்று மடங்காவது இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டு வாடகை, மளிகை, மின்கட்டணம், இதர பிற அத்தியாவசிய செலவுகள் சேர்த்து, ஒரு குடும்பத்தின் மாத செலவு 20,000 ரூபாய் எனில் அந்தக் குடும்பம் 60,000 ரூபாயை அவசர கால வைப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு சேமிப்பு இதுவரை இல்லையென்றாலும் மற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டு, அவசர கால வைப்பு நிதியை உருவாக்க திட்டமிடுங்கள். அவ்வாறு நீங்கள் உருவாக்கும் நிதியை வீட்டிலோ அல்லது வங்கி சேமிப்புக் கணக்கிலோ வைத்துக்கொள்வதைவிட லிக்விட் ஃபண்டுகளில் வைத்துக்கொள்ளும் போது, அந்தத் தொகைக்கான வட்டியும் கிடைக்கும்.

வேண்டாமே வீண்செலவு! - புவனா ஶ்ரீராம்

இலக்குகளைத் தீர்மானியுங்கள்

உங்கள் குடும்பத்தின் மாத வருமானத் தொகையை, நேற்று இன்று நாளை என்பதன் அடிப்படையில் 30, 40, 30 என்ற சதவிகிதத்தின் மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். நேற்றைக்கான தொகை உங்களின் கடன் நிலுவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைக்கான பிரிவில் இருக்கும் தொகை உங்களின் அன்றாடத் தேவைக்களுக்கானது. நாளைக்கான பிரிவில் இருப்பது உங்களின் சேமிப்புக்கானது.

சேமிப்புக்காகத் திட்டமிடுபவர்கள் சொந்த வீடு, குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், ஓய்வுக் காலம் போன்ற உங்களின் இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இலக்குகளுக் கேற்பவே உங்களின் சேமிப்புத் திட்டமிடல் இருக்க வேண்டும்.

எப்படிச் சேமிக்கலாம்?

குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்காக சேமிக்கிறீர்கள் எனில் ஐந்து வயதிலிருந்தே சேமிப்பைத் தொடங்கலாம். இதுபோன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்டில் சிறந்த வழிகாட்டுதலின்படி முதலீடு செய்வது அவசியம். வட்டி குறைவாக இருந்தாலும் வங்கி, தபால் நிலையங்கள் மூலம் சேமிப்பைத் தொடங்குங்கள். பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ போன்ற அரசின் திட்டங்கள் மூலம் சேமிக்கலாம். பெரும்பாலான பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விருப்பமாகக் கொள்வார்கள். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களில் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வதைக் கூடுமானவரை தவிர்க்கலாம். குழந்தைகளின் திருமணத்துக்காக சேமிப்பவர்கள் தங்களின் மொத்த சேமிப்பில் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்யப் பயன்படுத்தலாம். தங்கமாக வாங்காமல் பேப்பர் கோல்டாக வாங்கினால், செலவு குறைவதுடன் பாதுகாப்பாகவும் இருக்கும்.

இன்ஷூரன்ஸ் அவசியம்

எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும்போது, குடும்பத்தின் பொருளாதாரம் நிலைகுலைந்து ஆட்டம் கண்டுவிடும். இதைத் தடுக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை அவரவரின் பொருளாதாரச் சூழலுக்கேற்ப, பாலிசிகளை எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தில் ஒருவர் மட்டும் சம்பாதிக்கும் சூழல் இருந்தால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபரின் எதிர்பாராத இழப்புக்கு பின்பும்கூட அந்தக் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை ஈடுகட்ட முடியும்.

கடன்களைத் தவிர்க்கலாம்

ஆடம்பர செலவுகளுக்காக கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அனாவசிய கடன்கள் உங்களுக்குத் தெரியாமலே வட்டி என்கிற பெயரில் உங்களின் எதிர்கால சேமிப்புக்கான பணத்தை காலி செய்துவிடும். எனவே, ஆடம்பர செலவுகளுக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வங்கிகள் இ.எம்.ஐ கட்டும் காலத்தை நீடித்து இருந்தாலும், காலம் தாழ்த்தி கட்டும் தொகைக்கும் நீங்கள்தான் வட்டி கட்ட வேண்டும் என்பதால் அதுபோன்ற சலுகைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்காக ஒவ்வொரு மாதமும் கடன் வாங்குகிறீர்கள் என்றால் குடும்பத்தில் இருக்கும் வீண்செலவுகளைக் கண்டறிந்து குறைத்துக் கொள்வது நல்லது. சிக்கன செலவீனம் சேமிப்பை அதிகரித்து உங்கள் எதிர்காலத்தை மகிழ்ச்சியாக்கும் என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு