Published:Updated:

பெற்றோர்களே... பணத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சரியாகத்தான் சொல்லித்தருகிறீர்களா?

பெற்றோராகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும், பணத்தை ஒரு கருவியாக பாவிக்கும் மன நிலையை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிறு வயது முதலே நிதிக் கல்வி அவசியம் என்னும் கருத்து உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. 2014-ல் எடுக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் & புவர் சர்வேயில், இந்தியர்களில் 76% பேர் நிதிக்கல்வி பெறாதவர்கள் (Financially Illiterate) என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. உலக அளவிலான சராசரியாக 67% பேர்தான் நிதிக் கல்வி இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில், நம் நாட்டில் அதிகமான மக்கள் நிதிக் கல்வி இல்லாமல் இருப்பது மாற்றப்பட வேண்டிய விஷயமே!

முதல் தேதியானால் செலவுகள் வரிசை கட்டி நிற்பதையும், அப்பா சம்பளக் கவரைத் தந்ததும் அம்மா எல்லாச் செலவுகளுக்கும் பணத்தைப் பங்கீடு செய்வதையும் மீதமிருக்கும் பணத்தை கவர்களில் போட்டு வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் குழந்தைகள் படிப்பு, கல்யாணம் என்று திட்டமிடுவதையும் வேடிக்கை பார்த்து வளர்ந்த தலைமுறை நம்முடையது. பணம் எப்படிச் சம்பாதிக்கப்படுகிறது, எவ்வாறு செலவாகிறது, எப்படியெல்லாம் கை மாறுகிறது என்பதையெல்லாம் யாரும் எடுத்துச் சொல்லாமலேயே கண்கூடாக நம்மால் பார்த்து யூகிக்க முடிந்தது.

ஆனால், இன்று? வருமானத்தை வரவு வைக்க ஒரு பேங்க் அக்கவுன்ட், பணத்தை எடுக்க ஏடிஎம், கடனில் பொருள் வாங்க க்ரெடிட் கார்ட், பணத்தைச் சேமிக்க ஆன்லைன் ஆப்ஸ்கள் என்று வரவு, செலவு, கடன், சேமிப்பு எல்லாம் கம்ப்யூட்டருக்குள் அடங்கிவிட்டது. பணம் வீட்டுக்கு வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் குழந்தைகளின் கண்ணுக்கு மறைவாகவே செயல்படுகிறது. ஆகவே, பணத்தின் இந்தச் செயல்பாடுகளை குழந்தைகளுக்கு விளக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இருப்பதாகக் குழந்தைகளுக்கான சைக்காலஜிஸ்ட்கள் சொல்கிறார்கள்.

நிதிக் கல்வியை சிறு வயதில் இருந்தே ஆரம்பிப்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கவலையற்று பட்டாம்பூச்சியாகத் திரிய வேண்டிய வயதில் பணக் கல்வியா என்று ஆட்சேபிப்பவர்கள் சிலர். பொருளாதார மயமாகிவிட்ட உலகில், பிழைக்கும் வழியை பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் என்ன தவறு என்று தட்டிக் கேட்பவர்கள் சிலர். எப்போது ஆரம்பிப்பது, என்ன சொல்லித் தருவது, போன்ற கேள்விகளோடு இருப்பவர்கள் பலர். ஆனால், இதையெல்லாம்விட முக்கியம் எப்படிச் சொல்லித் தரப் போகிறோம் என்பதுதான்.

Money
Money

பொம்மை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கும் 4 வயதுக் குழந்தையிடம் ``அடிக்கடி பொம்மை வாங்கப் பணம் என்ன, மரத்திலா காய்க்கிறது?” என்று நாம் கேட்கும்போதே நிதிக் கல்வி துவங்கிவிடுகிறது. ``மரத்தில் காய்க்கவில்லையா? அப்போ பணம் எங்கிருந்துதான் வருகிறது?” என்ற கேள்விகள் அவர்கள் மனதில் கண்டிப்பாகத் தோன்றும். அதை அவர்கள் வெளிப்படையாகக் கேட்கத் தயங்கலாம். ஆனால், அதை யூகித்து நாமே அந்தக் கேள்விக்கும் பதில் சொல்வதன் மூலம் அவர்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இதை நாம் எப்படிக் கையாளப்போகிறோம் என்பது மிக முக்கியம். ஏனெனில், நம் வார்த்தைகளும் செயல்களும் பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிகிறது. பணம் பற்றிய பாசிட்டிவ் எண்ணங்களையும் அறிவையும் அவர்களுக்குள் வளர்ப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். நம் பணக் கவலைகளை அவர்களிடம் கடத்துவது, மற்றவர்களைப் பற்றிய அவநம்பிக்கைகளை அவர்கள் மனதில் விதைப்பது போன்ற செயல்களை அறவே தவிர்க்க வேண்டும். நன்கு சம்பாதித்து வசதியாக வாழும் ஒருவர், ``நான் என் பிள்ளைகளுக்கு சரியான நிதிக் கல்வி கற்பித்து உள்ளேன். பண விஷயத்தில் யாரையுமே நம்பக் கூடாது; கடன் தருவது என்ற பேச்சே ஆகாது என்று நன்கு புரியும்படி சொல்லித் தந்திருக்கிறேன்” என்றெல்லாம் பெருமையாகக் கூறுவதைக் கேட்க நேர்ந்தது. இதுவா நிதிக் கல்வி?

money
money

பெற்றோராகட்டும், ஆசிரியர்கள் ஆகட்டும், பணத்தை ஒரு கருவியாக பாவிக்கும் மன நிலையை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டும்.

  1. இதில் முதல் கட்டமாக 3 - 4 வயதுக் குழந்தைகளிடம் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களைத் தர வாரியாகப் பிரிக்கும் விளையாட்டை சொல்லித் தரலாம்.

  2. ஒரு சார்ட் பேப்பரில் நாணயங்கள் படம் வரைந்து கையில் உள்ள நாணயங்களை அவற்றுடன் பொருத்துமாறு கூறலாம்.

  3. வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு ஒரு சிறு கடை அமைத்து அந்தப் பொருள்களுக்கு வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யலாம். பழைய / உடைந்த பொம்மைகளுக்கு விலை குறைவாக நிர்ணயித்து ``சேல்” என்று அறிவிக்கலாம். குழந்தைகள் தன் கையில் இருக்கும் காசுகளை வைத்து பொம்மைகளை வாங்க, விற்க முயலும்போது அவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்.

`சிறு வயதினருக்கு நிதிக் கல்வி’ என்பது எளிதான காரியமல்ல - கம்பி மேல் நடக்கும் சமாசாரம். குழந்தைகளுக்கு பணம் பற்றி அதிக மோகம், ஏக்கம், கவலை அல்லது பெருமை வருவதைத் தவிர்க்க வேண்டும். பணத்திற்கு அதீத மரியாதையோ, கறுப்பு வண்ணமோ கொடுக்காமல் அதை ஒரு கருவியாக மட்டும் கையாளச் சொல்லித் தருவதே மனி மேனேஜ்மென்ட் மந்திரங்களில் அதி முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு