மும்பை கோரேகாவ் ஆரேகாலனி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அதிகமான மரங்கள் வெட்டப்பட்டன. அத்துடன் கட்டமைப்பு பணிகளுக்காகவும் ஆயிரக்கணக்கான மரங்கள் மும்பையில் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்த நிலையில், அதற்கு நிகராக மரங்களை புதிதாக நட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஜப்பான் தொழில்நுட்பமான மியாவாகி முறையில் குறைந்த இடத்தில் அதிகப்படியான மரங்களை நடும் திட்டத்தை மும்பை முழுவதும் அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் தலைமையில் கூடிய கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதன்படி 10,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களில் 5 சதவிகித நிலத்தை மரங்கள் வளர்ப்பதற்காக பில்டர்கள் ஒதுக்க வேண்டும். அதுவும் அந்த இடத்தில் மியாவாகி முறையில் மரங்கள் நட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த உத்தரவை மீறும் பில்டர்களின் கட்டுமான அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இது தொடர்பாக அனைத்து பில்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும். பில்டர்கள் தாங்கள் கட்டடம் கட்டும் இடத்தில் 20 சதவிகித இடத்தை காலியாக விட்டு வைக்க வேண்டும். அதில் 5 சதவிகிதத்தில் மியாவாகி காடு உருவாக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் மியாவாகி காடுகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தில் நடப்படும் மரங்கள் வெகு விரைவில் வளர்ந்து இடத்தை பசுமையாக்குவதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் கூட இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் 64 இடங்களில் 4 லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இது குறித்து மாநகராட்சியின் பூங்கா கண்காணிப்பு அதிகாரி ஜிதேந்திரா அளித்த பேட்டியில், ``மாநகராட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டினால் அதில் குறிப்பிட்ட இடத்தில் கட்டாயம் மரக்கன்றுகள் நட வேண்டும். 10,000 சதுர மீட்டருக்கும் அதிகமான இடத்தில் கட்டடங்கள் கட்டினால் சம்பந்தப்பட்ட பில்டர் 5 சதவிகித நிலத்தில் மியாவாகி காடுகளை உருவாக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்து கொடுக்கும்" என்று தெரிவித்தார்.
மும்பையில் காலியாக இருக்கும் 61 இடங்களில் மியாவாகி முறையில் மரக்கன்றுகளை நட 2019-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்தது. இம்முறையில் வளர்க்கப்படும் மரங்கள் வழக்கமானதைவிட 10 மடங்கு வேகமாக வளரக்கூடியது. மும்பை மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காக்களில் சிறிய வனப்பகுதியை உருவாக்க இந்தப் புதிய மியாவாகி முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மும்பை மாநகராட்சி சார்பாக 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கிறது.

இந்த முறையில் வடாலா பக்தி பார்க் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில் 57,000 மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கிறது. அவை இப்போது சிறிய காடு போன்று காட்சியளிக்கிறது. இதே போன்று மும்பைக்குள் ஓடும் மித்தி ஆற்றங்கரையோரத்தில் கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள நிலப்பரப்பில் 9.36 சதவிகித நிலம் வனப்பகுதிகளை கொண்ட தாகும். நாட்டில் வனப்பகுதி அதிகம் இருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா 5வது இடத்தில் இருக்கிறது. நாட்டில் அதிக மரங்கள் இருக்கும் நகரங்கள் பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்தில் இருக்கிறது.