Published:Updated:

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! #MyVikatan

என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல், அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர வயது ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார். பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில் விழுந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சகோதரி குடும்பம், நண்பர்கள் குடும்பத்துடன் ஒரு சுற்றுலா தலத்துக்குச் சென்றிருந்தோம். இப்படியோர் அரிதான நாள், மூன்றாண்டுகளுக்குப் பின் எங்களுக்கு அமைந்திருந்தது. இரண்டு எஸ்.யூ.வி கார்களில், அந்த இரண்டு நாள் சுற்றுலாவுக்குக் கிளம்பினோம். முதல் நாள் பகல் இனிதாகக் கழிந்தது. எங்கள் பிள்ளைகளுடன் ஒரு குட்டித்தீவு போன்ற இடத்தில் கடலில் குளித்து, மணலில் ஆடி, வகை வகையாகத் திண்பண்டங்கள் உண்டு மகிழ்ந்தோம்.

மாலையில் ஒரு பூங்காவில் கூடினோம். அது விளையாட்டுத் திடல் அல்ல. இருந்தும் சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு அதையே விளையாட்டுத் திடலாக மாற்றி, அமர்ந்திருந்த மக்களுக்கு இடையே ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர். என் மகன்களும் உறவினர் பிள்ளைகளும் அதையே செய்தனர்.

family / Representational Image
family / Representational Image

ஒரு சிறிய இடைவெளியில் நான் திண்பண்டம் வாங்கச்சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினேன். எங்கள் பிள்ளைகள் விளையாடுமிடத்துக்கு அருகில் அந்தக் காட்சியைப் பார்த்தேன். என் மகன் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுடன் எறிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு ரப்பர் பந்து, அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரிடையே போய் விழுந்தது. அதை வாங்கச் சென்ற என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல், அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர வயது ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார். பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில் விழுந்தது. அந்த இருட்டில் அதைத் திரும்ப எடுக்க முடியாது.

எப்போதோ ஒருமுறை என் மகன்களுடன் விளையாடும் அந்த மகிழ்வான தருணத்தையும், அந்தச் சிறுவர்களுக்குக் கிடைத்த அந்த சிலமணி நேர பொழுதுபோக்கையும் கெடுத்துவிட்டாரே அந்த மனிதன். எனக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. அவரிடம் சென்று சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டேன். அவரோ, 'பந்து போய் விழுந்த இடத்தில் எடுத்துக்கொள்' என்றார்.

எனக்கு மேலும் கோபம் தலைக்கேறியது. `நீயேன்டா தூக்கிப்போட்ட..?' என்று ஒருமையில் சாடினேன். `என் அம்மாவின் மேல் பந்து பலமுறை விழுந்தது, பிள்ளைகளை எச்சரித்தேன். மீண்டும் பந்து விழுந்ததால் எடுத்தெறிந்தேன்' என்றார் அவர்.

மேலும் மேலும் தலைக்கேறிய என் கோபத்தில் அவர் `பலமுறை’ என்று சொன்னதை மனதிலேற்றவில்லை. என் பிள்ளைகளுக்குக் கிடைத்த மகிழ்வான நேரத்தை வீணடித்துவிட்டாரே என்பது மட்டுமே என் மனதில் ஓடியது. என் வார்த்தைகள் தடித்தன.

குழந்தைகள்/ Representational Image
குழந்தைகள்/ Representational Image
Pixabay

ஆக்ரோஷமாக அவரை நோக்கிக் கத்தினேன். அவரின் தொடர்ந்த அலட்சிய பதிலால், அவரை அடிக்கப் பாய்ந்தேன். அவரை அவரின் குடும்பத்தார் தள்ளிக் கூட்டிச் சென்றனர். என் குடும்பத்தார் என்னை இழுத்து சமாதானப்படுத்த முயன்றனர்.

இன்னும் என் கோபம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு பெரிய கூட்டம் கூடிவிட்டது. அப்போதும் நான் அவரை நோக்கிக் கத்திக்கொண்டே இருந்தேன். என் கோபத்தில் வரைமுறையற்ற வார்த்தைகள் வந்துவிழுந்தன. அதனால், அங்கே கூடியவர்கள் நானே அங்கு நடக்கும் குழப்பத்துக்குக் காரணம் என்று தீர்மானித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போதுதான் நான் நிதானத்துக்கு வந்தேன். பெரும் சிக்கலானது சூழல். என்னை உடனே காவல்நிலையத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் காவலர்கள் கூறினர். நேரம் பின்னிரவைக் கடந்திருந்தது. என் குடும்பத்தார் கடும் முயற்சியெடுத்து எனக்காக மன்னிப்புக் கோரி என்னைக் காவல்நிலையம் கொண்டு செல்லாமல் பாதுகாத்தனர்.

எல்லோரும் ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம். அந்த சில நிமிடங்கள் எனது நடவடிக்கையால், நான் எந்த அரிதான நேரம் வீணாகப்போகிறது எனக் கோபப்பட்டேனோ, அதற்கு மேலும் நேரம் வீணானதை உணர்ந்தேன். அதோடு, நான் காவல்நிலையம் சென்றிருந்தால், அந்த இரவு முழுவதும், ஏன் மறுநாள் நாங்கள் தீர்மானித்திருந்த பொழுதுகளும் வீணாகியிருக்கக்கூடும்.

கோபம்/ Representational Image
கோபம்/ Representational Image

அந்த சில விநாடி நிதானம் ஏன் எனக்குத் தவறியது? `நான்' என்ற எண்ணத்தால். `என்னிடமேவா...' என்ற ஆணவத்தால். நாம் நமக்குள் என்னவாக இருக்கிறோம் என்பது இப்படிப்பட்ட திடீர் வலியை எதிர்கொள்ளும்போதுதான் நமக்கே புரியும். அந்தக் கணநேர வலியை எதிர்கொள்ளும்வரை, நாம் எல்லோரும் நல்ல குணமுடையவராகவே தெரிவோம். அதற்கு மேலும் நாம் நற்குணத்தைக் காக்க முடியும். நாம் நம்மை அந்த விநாடி கவனிக்க வேண்டும்.

தெருவில் அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது நம் கால், வழியில் கிடக்கும் ஒரு கூரான கல்லில் தட்டிவிடுகிறது. ரத்தம் வழிகிறது, வலி தலைக்கு விர்ரென்று ஏறுகிறது. அடுத்த கணம் நாம் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் நம் வலியை வெளிப்படுத்துவோம்.`ஸ்ஸ்ப்பா… சே கல்லு கிடக்கிறத பாக்கலயே', `சனியன் இந்தக் கல்லு எங்கிருந்து வந்துச்சு', `ஸ்ஸ்… வேற யாராவது இதே மாதிரி இடிச்சா என்னாகுறது'.

நாம் எப்படிப்பட்டவரென தெரியும் அப்போது!

- மு.அகிலன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு