’நெடுவாசலில் ஒரு செய்தி தீயாய் பரவியது...!’ - வரலாற்று போராட்டத்துக்கு வித்திட்ட அந்த அறிவிப்பு | One Year of Neduvasal - Protests against ONGC will continue in Neduvasal

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (15/02/2018)

கடைசி தொடர்பு:18:52 (15/02/2018)

’நெடுவாசலில் ஒரு செய்தி தீயாய் பரவியது...!’ - வரலாற்று போராட்டத்துக்கு வித்திட்ட அந்த அறிவிப்பு

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டதுக்கு மத்திய அரசு அனுமதியளித்து இன்றோடு ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால், போராட்டத்தின் சுவடுகள் மறையவில்லை.

நெடுவாசல்

இந்தியாவின் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், மத்திய அமைச்சரவைக் குழு இந்தியாவில் 31 இடங்களில் ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, எண்ணெய் நிறுவனங்கள் அந்த 31 இடங்களில் 15 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு என்று கூறப்படும் ஹைட்ரோ கார்பன் எடுத்துக்கொள்ளலாம். மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 31 இடங்களில் 13 இடங்கள் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு நெடுவாசல் கிராமத்தில் தீயாய் பரவியது. கடந்த ஆண்டு இதேநாள் மாலையில்தான் மத்திய அரசின் அறிவிப்பு வெளியானது. 

நெடுவாசல்

மறுநாள் காலையில், நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷை சந்தித்தனர். ' இத்திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள்' என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த கையோடு போராட்டத்தில் குதித்தனர். அடுத்தடுத்த நாள்களில் போராட்டம் தீவிரமடைந்தது. நெடுவாசலில் ஊடகங்கள் குவியத் தொடங்கின. ' நெடுவாசலை சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை 1990-களிலேயே எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. இங்குள்ள நிலங்களை விலைகொடுத்து கையகப்படுத்தாமல், குத்தகை முறையில் கைப்பற்றி 20 ஆயிரம் அடி ஆழம் வரை நிலத்தை துளைத்து, எரிவாயு எடுத்திருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. ஓ.என்.ஜி.சி-க்கு நிலத்தை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்?' என நெடுவாசல் மக்களை நோக்கி கேள்விகள் வீசப்பட்டன. அதற்கு பதிலளித்த நெடுவாசல் மக்கள், ' முன்பு எங்களுக்கு எந்த விழிப்பு உணர்வும் இல்லை. மண்ணெண்ணெய் எடுக்கிறோம் என்றுதான் எங்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்குக் கேட்டார்கள். இந்த ஊர் வளர்ச்சியடையப் போகிறது என்று நம்பி நாங்களும் நிலத்தைக் கொடுத்தோம். ஆனால், அப்படி எந்த வளர்ச்சியும் நிகழவில்லை. ஓ.என்.ஜி.சி துளையிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் அபரிமிதமாகக் குறைந்ததுதான் மிச்சம். அதுமட்டுமில்லை, அவர்கள் எண்ணெய் எடுத்துவிட்டு, கைவிட்டுச் சென்ற சில இடங்களில் அடிக்கடி தீப்பிடிக்கிறது. இப்போது விழித்துக்கொண்டோம். போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்' என சீற்றத்துடன் பதிலளித்தனர். 

ஓராண்டாகத் தொடரும் போராட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர்களில் முக்கியமானவர் கவிஞரும் சமூக ஆர்வலருமான புவி நீலன். அவரிடம் பேசினோம்...

’புதுக்கோட்டையிலேயே அதிக வளங்கள் உள்ள பகுதி நெடுவாசல்தான். அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் பசுமை செழிக்கும். மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அந்த வளங்கள் சீரழியும் அபாயம் உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி 14ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியானதும் நெடுவாசல் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ’ஹைட்ரோ கார்பன்’ என்றால் என்ன என்பது பற்றி மக்கள் விழிப்புஉணர்வடைந்தனர். 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி போராட்டத்துக்கான திட்டமிடல் நடந்தது. பிப். 17, 18 தேதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. அது ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்ற சமயம் என்பதால் நெடுவாசல் மக்களுக்காகவும் மாணவர்கள் ஒன்றுதிரண்டனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்களும் போராட்டத்தில் இணைந்தனர். 

neduvasal

போராட்டம் தீவிரமடைந்ததால் தமிழக அரசும், மத்திய அரசும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டனர். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதனிடையே போராட்டத்தின் 21-வது நாள் (08-03-2017) போராட்டத்தின் போது, 60 வயது மதிக்கத்தக்க பொன்னம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். இது மக்களின் சீற்றத்தை அதிகரித்தது. பின்னர் அந்தத் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களுக்கு 2017 மார்ச் 27-ம் தேதி மத்திய அரசு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கியது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள்மீது நம்பிக்கை இல்லாததால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக, நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். ஏப்ரல் 12- ம் தேதி போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்தப் போராட்டம் 100 நாள்களுக்கு மேலாக நீடித்தது. 174 நாள்கள் கடந்த பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்றும் போராட்டக் குழு எச்சரிக்கை விடுத்தது. 

தற்போது இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்புக்காக அனைத்துத் தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். பசுமை தீர்ப்பாயத் தீர்ப்புதான் மத்திய மாநில அரசுகள் மற்றும் நெடுவாசல் மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தீர்மானிக்கும். மேலும், நெடுவாசலில் வருகிற பதினெட்டாம் தேதி (18-02-2018) ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவின் சார்பில் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஆயில் நிறுவனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரையில் நாங்கள் ஓயப்போவதில்லை’ என்றார் அழுத்தமாக. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க