வெளியிடப்பட்ட நேரம்: 23:11 (02/03/2017)

கடைசி தொடர்பு:09:52 (03/03/2017)

என்னை அறியாமல் செங்கல்லைத் தூக்குகிறேன் - நெடுவாசலில் அனல் வீசிய 'சின்னம்மா'!

மிழர்களின் மண்ணைக் காக்க, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், கடந்த 15 நாள்களாகப் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகம் கடந்து, உலக அளவில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்துவருகிறார்கள். தொடர்ச்சியாகப் போராடும் நெடுவாசல் நாடியம்மன் கோயில் மைதானத்தில், காலையில் இருந்து மாலை வரை தொடர்ச்சியாக உணர்வுகளைக் கொட்டித் தீர்த்து வருகிறார்கள்.

நெடுவாசல் போராட்டக்களம்

இன்று காலையில் இருந்து, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள் மீத்தேனுக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் முழங்கி வருகிறார்கள். அப்படிப் பேசியதில், புள்ளான்விடுதியைச் சேர்ந்த ராணி என்கிற சின்னம்மாவின் பேச்சு, செம ஹிட். எல்லோரின் கைதட்டல்களையும் அள்ளியது.

மைக் பிடித்த சின்னம்மா :

"மோடி ஐயா, தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரையா? கடந்த 15 நாள்களாக எங்க வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு போறாடுகிறோம்னா... நாங்க சும்மா கலைஞ்சி போயிட மாட்டோம். மரியாதையா சொல்லுறேன். இதோ, பொம்பளைங்க எல்லோரும் இப்போது வீதியில வந்து நிக்கிறோம். ஆண்களே, வீட்டைப் பார்த்துக்கோங்க. நாங்க நெடுவாசலுக்காகப் போராடுறோம். தீர்வு கிடைக்காம விடமாட்டோம்.

போலீஸ்காரங்க அடிப்பாங்கன்னு, விரட்டுவாங்கன்னு சொல்லுறாங்க. நான் பெத்த பிள்ளைகளா, வயித்துப் பிழைப்புக்காக இப்படி வந்து காவ காக்கிறீங்க. உங்க எல்லாருக்கும் சோறுபோட நாங்க தயாரா இருக்கிறோம். போலீஸ்காரங்க. நாம எல்லாம் போராட்டத்துக்கு போயிட்டா, நம்ம வீடுகளைப் பாதுக்காக்க எம் பிள்ளைகள் காவல்கிடக்குது. நாங்க விவசாயத்தைக் காக்கப் போராடுறோம். எம் பிள்ளைகள், இங்க வந்து கிடக்குது. முதல்ல அவனுக்கு வேலை இல்லையா என நினைச்சேன். ஆனா, சென்னையில இருந்தும், வெளியூரில இருந்தும்  படிக்கிற பிள்ளைக, மாணவர்கள் இங்க எங்களுக்காகக் கிடப்பதைப் பார்த்த பிறகு, புரிந்துகொண்டேன்.

மைக் பிடித்த சின்னம்மா

எங்கயோ உட்கார்ந்துக்கிட்டு, எங்க விவசாயத்தை அழிக்க கையெழுத்துப் போட்ட மோடி அய்யா, எங்களை ஏமாத்திடலாம்னு போகமாட்டோம். நாங்கள் உழைச்சி, காடுகரையைத் திருத்தி வச்சிருந்ததா, நீங்க அழிக்கத் துடிப்பீங்களா. நாங்கள் விவசாயிகள்.
சென்னையில இருந்துக்கிட்டு இந்தத் தமிழிசை அக்கா, இல.கணேசன் அய்யா, நேர்படப் பேசு நிகழ்ச்சியில பேசும் நாராயணன் அய்யா எல்லாரும் பேசும்போது, என்னை அறியாம செங்கல்லை எடுத்துவிடுகிறேன். என் பொண்ணுதான், யம்மா, யம்மா இது நம்ம டி.வி அதை உடைச்சிடாதீங்கன்னு சொல்லித் தடுக்கும். எங்க ஊருக்கு வந்து பார்த்துட்டு, இந்த அழகான ஊரை அழிக்க சொல்லுவீங்களான்னு சொல்லுங்க.

எங்க நிலத்தில், கொஞ்சம் கொஞ்சமா கஸ்ட்டப்பட்டு, கிணத்த வெட்டி, நிலத்தத் திருத்தி, தென்னை வச்சி, இப்போ கொஞ்ச நாளா நிம்மதியா வாழுறோம். அது உங்களுக்கு பிடிக்கலையா. 500 பேருக்கு வேலை கொடுக்கிறாங்களாம். நாங்கள் 50 ஆயிரம் பேருக்கு ஆலங்குடி தாலுகா முழுவதும் விவசாய வேலை தர்றோம். யாருக்கு தேவை உங்க வேலை.


கொஞ்சநாளுக்கு முன்னால, எங்க ஊர்ல மோடி அய்யா, கேஸ் அடுப்பு கொடுக்கிறார்ன்னு எல்லோரும் ஆதார் அட்டை எடுத்துக்கிட்டு போய், பதிவுசெஞ்சோம். கேஸ் அடுப்பு கொடுத்தாங்க. ஆனா, அடுப்பை கொடுத்துட்டு, கேஸுக்கு எங்க நிலத்தை எடுக்க மோடி அய்யா உங்க அரசாங்கம் துடிக்குது... உங்க அடுப்புகள் வேண்டாம். என் ஆதார் அட்டையைக் கொடுத்திடுங்க.

நான், 50 வருடமா அடுப்புல சமைச்சி பழகிட்டேன். என் மகளுக்கும் அப்படியே பழக்கப்படுத்திக்கிறேன். எங்க நிலத்தை விட்டுருங்க.
மீடியாக்காரங்களே, தமிழிசை அக்கா, இல.கணேசன் அய்யா, நாராயணன் சார் எல்லோரையும் வரச் சொல்லுங்க. ஆட்டைக்கடிச்சி, மாட்டைக்கடிச்சி, எங்க விவசாயத்தை காலி பண்ணத் துடிக்கிறீங்களே... நியாயமா?

நாங்கள் தோற்றுப்போக அரசியல்வாதிகள் இல்லை. விவசாயிகள். எங்க மண்ணை விடமாட்டோம்" என்றார் கோபமாக!

சின்னம்மா அனல் பறக்கப் பேசிய வீடியோ :

 

 

- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: ம.அரவிந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க