வெளியிடப்பட்ட நேரம்: 02:59 (12/02/2017)

கடைசி தொடர்பு:17:43 (12/02/2017)

ஓ.பி.எஸ். தன்னையே அவமானப்படுத்திக்கொள்கிறார் : சுப்பிரமணியன் சுவாமி

"சசிகலாவிற்கே பெரும்பான்மை இருக்கிறது. எனவே அவரை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்" என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஆட்சியைப் பிடிக்க பலத்த போட்டி நிலவி வருகிறது. இதுவரை 5 எம்.பி-க்கள் ஓ.பி.எஸ்-க்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். அவருடைய ஆதரவு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பல்வேறு அரசியல் தலைர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஆளுநரை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்த சந்திப்பிற்கு பிறகு அவரது இல்லத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "சசிகலாவிற்கே பெரும்பான்மை உள்ளது. எனவே உடனடியாக சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அளுநர் சட்டப்படியே நடந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் இடைத்தேர்தலில் அவரை தோற்கடிக்கட்டும். தற்போது அவர் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புத்தர வேண்டும். ஒரு முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினிமா செய்ய வைத்தனர் என்கிறார். இதை கூற அவருக்கே வெட்கமாக இல்லையா, இப்படி கூறுவது, தன்னையே அவர் அவமானப்படுத்திக்கொள்வதற்கு சமம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க