14 வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலம் அமைக்க ஜெ. உத்தரவு! | 14 new treasuries in TN , jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (15/11/2012)

கடைசி தொடர்பு:10:35 (15/11/2012)

14 வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலம் அமைக்க ஜெ. உத்தரவு!

சென்னை: 14 வருவாய் வட்டங்களில் புதியதாக சார் கருவூலம் அமைக்க   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அரசுக்கு வர வேண்டிய  வருவாய் மற்றும் செலவுகளை கணக்கிடும் பொறுப்பை நிறைவேற்றும் கருவுலக் கணக்குத் துறை 1962 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.மேலும் அரசுப் பணியாளர்களுக்கான  ஊதியம் வழங்குதல்,ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்,பல்வேறு திட்டப்  பணிகளுக்கு அரசு ஒப்பளிப்பு செய்ததொகையினை வழங்குதல் போன்ற பல்வேறு  பணிகளையும் இத்துறை ஆற்றி வருகிறது.

மேலும்,நீதிமன்றம் சார்ந்த மற்றும் நீதிமன்றம் சாராத முத்திரை தாள்கள் மற்றும்  முத்திரை வில்லைகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு  முறையாக வழங்கும் பணியை ஆற்றி வருவதோடு,அரசுத் துறைகளால் காப்பறையில்  வைப்பீடு செய்யப்படும் விலைமதிப்பு வாய்ந்த மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய  பொருள்களும் இத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இத்துறையின் கீழ் 32 மாவட்ட கருவூலங்கள் மற்றும் 206 சார் கருவூலங்கள் உள்ளன.மக்களை நாடி அரசு என்ற நோக்கத்தின் அடிப்படையில்  மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு  வருகின்றன.

அந்த வகையில் அதிகரிக்கப்பட்ட அரசு அலுவலகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு  கருவூலங்களின் எண்ணிக்கை உயரவில்லை.இதனைக் கருத்தில் கொண்டு ஒரு வருவாய் வட்டத்திற்கு ஒரு சார் கருவூலம் என்ற அடிப்படையில் கருவூல அமைப்பினை  சீரமைத்து சார் கருவூலமில்லாத வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலங்களை ஏற்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு  முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் 2012-13 ஆம் நிதியாண்டில் புதியதாக அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரை,திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், காஞ்சிபுரம்  மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம்,  நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை, சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, கெங்கவல்லி,

நீலகிரி  மாவட்டத்திலுள்ள பந்தலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர்,  திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துகுளம்,திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  தண்டராம்பட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, புதுக்கோட்டை  மாவட்டத்திலுள்ள இலுப்பூர் ஆகிய 14 வருவாய் வட்டங்களில் புதியதாக சார் கருவூலம்  அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கருவூலங்களில் பணிபுரிய ஒவ்வொரு சார் கருவூல அலுவலகத்திற்கும் உதவி  கருவூல அலுவலர் பணியிடம்1, கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் பணியிடம் 1,  கணக்கர் பணியிடம் 2, இளநிலை உதவியாளர் பணியிடம் 1,அலுவலக உதவியாளர்  பணியிடம் 1 என 6 பணியிடங்களை புதியதாக தோற்றுவிக்கவும் முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு தொடரும் செலவினமாக 3 கோடியே 33 லட்சம்  ரூபாயும், தொடரா செலவினமாக 84 லட்சம் ரூபாயும் ஏற்படும்.

நீதி மற்றும் நீதிசாரா முத்திரைத் தாள்கள்,பல துறைகளிலிருந்து பெறப்படும் சேம காப்பு
பொருட்கள் ஆகியவற்றை வலுவறையில் வைத்து பாதுகாக்கும் பணி உள்பட பல்வேறு  பொறுப்புமிக்க பணிகளை அனைத்து சார் கருவூலங்களும் செய்து வருவதால்,  இக்கருவூலங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்குவது மிகவும் இன்றியமையாததாகிறது.


இதனைக் கருத்தில் கொண்டு மொத்தமுள்ள 206 சார் கருவூலங்களில், வாடகை  கட்டடங்களில் இயங்கி வரும் 54 கருவூலங்களில், முதற்கட்டமாக 14  கருவூலங்களுக்கு 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதியக் கட்டடங்கள்,மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் மற்றும்  மேலூர்,
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள  திருச்செங்கோடு, பரமத்தி,புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை,  ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை,திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருவள்ளூர்  மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை மற்றும் திருத்தணி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  ஒட்டப்பிடாரம்,திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஆகிய 14 இடங்களிலுள்ள  சார்நிலைக் கருவூலங்களுக்காக கட்டப்படும்.

இதேபோன்று, மொத்தமுள்ள 32 மாவட்ட கருவூலங்களில் 29 மாவட்டக் கருவூலங்கள்  சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன.மீதமுள்ள 3 மாவட்டக் கருவூலங்கள்  வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.இவற்றில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டக் கருவூலத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 862 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில்  புதிய கட்டடம் கட்டவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை