வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (28/10/2014)

கடைசி தொடர்பு:15:51 (28/10/2014)

டீசல் விலை குறைந்தாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையாதது ஏன்?

டீசல் விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு குறையாதது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் 25 சதவிகிதத்துக்கு மேல் குறைந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு 3.37 ரூபாய் குறைத்தது. கடந்த பல வருடங்களாக டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் 0.50 காசுகள் வீதம் டீசல் விலையை உயர்த்தி வந்தது மத்திய அரசு.

இந்த நிலையில் டீசல் விலை குறைந்தது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம், டீசல் விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பொருட்களின் விலை எப்போதும் போலவே உள்ளது. மேலும், சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக டீசல் விலை உயர்ந்த அடுத்த ஒரு வாரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிடும். ஆனால், இப்போது வித்தியாசமாக டீசல் விலை குறைந்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அப்படியே இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் இதுகுறித்துக் கேட்டால், "டீசல் விலை மட்டும்தான் குறைந்துள்ளது. சரக்கை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுவரும் வண்டியின் வாடகை குறையவில்லை. வாடகை குறைந்தால்தான் பொருள்களின் விலையைக் குறைக்க முடியும்" என்கிறார்கள்.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் செந்தில் செல்வனிடம் கேட்டோம்.

"அன்றாடத் தேவைகளுக்கான பெரும்பாலான பொருட்கள் லாரியின் மூலமாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளுக்கு வாடகை வசூலிப்பதில் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் அரசு விதிக்கவில்லை. ஆட்டோ, பஸ் கட்டணங்களில் அரசு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. லாரி வாடகை என்பது தேவையைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.

பொருட்கள் அதிகமாக இருந்து லாரிகள் குறைவாக இருக்கும் சமயங்களில் அதிக வாடகை கிடைக்கும். மற்ற சமயங்களில் குறைவான வாடகைதான் கிடைக்கும். மேலும், இந்தத் தொழிலில் போட்டி அதிகமாக நிலவுவதால் வாடகை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. மேலும், பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பொருட்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில்லை. இதை இடைத்தரகர்கள்தான் செய்கிறார்கள். வாடகை குறைவாக உள்ள லாரிகளில் லோடு ஏற்றுவார்கள். எனவே, டீசல் விலை குறைப்பினால் வாடகை குறையும் என எதிர்பார்க்க முடியாது. டிமாண்ட் இல்லாத சமயங்களில் மட்டும்தான் லாரியின் வாடகை குறையும்" என்றார்.

இவரை அடுத்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் எம் எம் சி உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரனிடம் பேசினோம்.

"காய்கறிகளின் விலை குறைவாகத்தான் உள்ளது. டிமாண்ட் அண்ட் சப்ளையைப் பொறுத்துதான் விலை இருக்கும். மழையின் காரணமாக மீண்டும் காய்கறிகளின் விலை உயர ஆரம்பித்துள்ளது.
டீசல் விலைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அதாவது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வந்து காய்கறிகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகளில் பெரும்பாலானவர்கள் சொந்தமாக வண்டி வைத்திருக்கிறார்கள். இதில் வாடகை வண்டிகளை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

டீசலுக்கு ஆகும் செலவு, பொருட்களை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஆகும் செலவில் 5 சதவிகிதம்தான். மீதமுள்ள 95 சதவிகித செலவு லோடு ஏற்றுவதற்கு இறக்குவதற்குக் கொடுக்கப்படும் கூலி, வண்டி ரிப்பேர் செலவு, லாபம் என அனைத்தும் அடங்கும். மேலும், டோல்கேட் கட்டணங்களும் சமீபத்தில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. டீசல் விலையைத் தவிர்த்து வேறு எந்தப் பொருட்களின் விலையும் குறையவில்லை. அனைத்து செலவுகள் போக , வாடகை வண்டி அல்லது சொந்தமாக வண்டி வைத்திருக்கிறவர்களுக்கு ஒரு லோடுக்கு 10, 20 ரூபாய் லாபம் கூடுதலாகக் கிடைக்கிறது. இதை யாரும் குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை" என்றார்.

ஒருமுறை விலை உயர்ந்த பிறகு அதைக் குறைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்பது இருவர் பேசியதிலிருந்தும் தெரிகிறது.

கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசு, டீசல் விலையைக் குறைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. விலைவாசி குறையும் என்ற மக்களின் கனவு பகல் கனவாகி விட்டது.

- இரா.ரூபாவதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்