குறட்டை பிரச்னை இனி இல்லை...

- டாக்டர் வாசிம் கான், (காது மூக்கு தொண்டை)

''என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்'' என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு.  இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. 

வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது.  ஆனால்,  தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக மாறிவிட்டது என எச்சரிக்கிறது மருத்துவ துறை. குறட்டை வருவது, தொண்டையில் அதிகம் சதை வளர்ந்து சுவாச குழாய்க்கு செல்லும் ஆக்சிஜனில் தடை ஏற்படுவதாலும். தூங்கும்போது, மூளையால் சுவாசிப்பதைக் கட்டுபடுத்த முடியாமல் போவதாலும் நடக்கலாம்.  மேலும்,  அதிக எடை, டான்சில் உள்ளவர்கள், சிறு தாடை இடமாற்றம் கொண்டவர்கள், 17 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் ஆண்கள், 16 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் பெண்கள், அதிகம்  புகைப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள் மற்றும் சில மரபியல் காரணங்களும் குறட்டைப் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது.  இதனை மருத்துவ உலகில், ஸ்லீப் அப்னியா (sleep apnea) என்பார்கள். 

 இரவில் குறட்டைவிடுவது ரத்த அழுத்தம், இதய நோய்கள், மறதி பிரச்னைகளை ஏற்படுத்தும். இரவில் குறட்டைவிடுபவர்களுக்கு பகலில் சோர்வான மனநிலையிலேயே இருப்பார்கள். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  எந்த விஷயத்தின் மீதும் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.  குறட்டை விடுபவர்களுக்கு பகல் பொழுதுகளில் தூக்கம் வரும்.  இதய நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.  ஒருவேளை வாயை மூடி கொண்டு குறட்டைவிட்டால் நாக்கு, காற்று செல்லும் பாதையில் பிரச்னையாக இருக்கலாம்.  வாயை திறந்தபடி குறட்டைவிட்டால் தொண்டையில் இருக்கும் திசுக்களால் பிரச்னை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.   சிலருக்கு குறட்டைவிடும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் கூட நிகழலாம். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் நூற்றில் அறுபத்தைந்து வாகன விபத்துகள் இரவில் துங்க சிரமம்படுபவர்களால் நடந்திருப்பது என்பது தெரிய வந்துள்ளது.  நான்கு இதய நோயாளிகளில் மூன்று பேருக்கு குறட்டைவிடும் பிரச்னை இருக்கிறது. குறட்டையை குறைப்பதற்கான சிகிச்சை எடுத்து கொண்டால் இதய சீராக இயங்க உதவும். 

சிகிச்சை:

மருத்துவர்கள் முதலில் தூங்கும்போது  இதய துடிப்பு, கண் அசைவு, மூச்சு பாதை, தொண்டை சதை, ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவற்றைப் பரிசோதிப்பார்கள். இதில் சில பிரச்னைக்கு சிறிய சிகிச்சைகள் மூலமே தீர்வு கிடைத்துவிடும். சிலவற்றுக்கு ஆபரேஷன்கள் செய்ய வேண்டி வரலாம். இப்போது CPAP என்னும் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. மூக்கிலும், வாயிலும் மாஸ்க் அணிவிப்பார்கள். காற்று அந்த மாஸ்க் வழியாக சென்று சுவாசிக்க ஏதுவாக இருக்கும். சிலருக்கு கீழ் தாடை, நாக்கு, மேல் தாடை இயல்பான இடத்திலிருந்து மாறி இருக்கும். இவற்றை மறுசீரமைப்பார்கள். ஆனால், மிக அதிகமாக குறட்டைவிடுபவர்களுக்கு மட்டுமே இப்படி செய்யப்படும். மற்றவர்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.  எதனால் குறட்டை விடுகிறீர்கள் என பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படும்.  இதனால் சுவாசம் சீராகி, குறட்டை வருவது நிற்கும். 


குறட்டையைக் குறைக்க சில டிப்ஸ்:

உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும்.  உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை கொண்டு வருவதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.

போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இரவில் தூக்கம்  வருவது பெரும் பிரச்னை.  போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்.  

குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம்.  தூங்கப் போவதற்கு முன் சட்டை பையில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்து கொண்டு படுக்கலாம். குறட்டை வராமல்  தப்பிக்கலாம்.

முதுகு தரையில் படும்படி படுங்கள். குப்புறப் படுப்பதோ, ஒரு களித்து படுப்பதோ மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.

தலையணையின் உயரத்தை கொஞ்சம் அதிகரியுங்கள்.

அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது நெரிசல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டைவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்.

குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம்.  வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்.

மருத்துவர்களின் ஆலோசனையுடன் கடைகளில் விற்கும் ஆண்டி ஸ்னோரிங் மாத்திரைகளை வாங்கி கொள்ளலாம்.

மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும். 

உங்கள் அருகில் தூங்குபவரிடம் நீங்கள் எவ்வளவு சப்தமாக குறட்டைவிடுகிறீர்கள் என்பதை கவனிக்கச் சொல்லுங்கள். ஒருவேளை மிக அதிகமாக பயங்கர சத்தத்துடன் குறட்டைவிடுகிறீர்கள் என தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அலட்சியம் வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!