Published:Updated:

100... அவசர உதவிக்கா... அலைக்கழிக்கவா? ஒரு நிஜ ரிப்போர்ட்!

போலீஸ் கட்டுப்பாட்டு அறை
News
போலீஸ் கட்டுப்பாட்டு அறை ( சித்தரிப்புப் படம் )

ஒரு பிரச்னையை சரிசெய்வதற்காக நல்ல நோக்கத்துடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளும் சிலருக்கு சமயங்களில் இப்படியான அசெளகரியங்கள் ஏற்படலாம்.

100... அவசர உதவிக்கா... அலைக்கழிக்கவா? ஒரு நிஜ ரிப்போர்ட்!

ஒரு பிரச்னையை சரிசெய்வதற்காக நல்ல நோக்கத்துடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளும் சிலருக்கு சமயங்களில் இப்படியான அசெளகரியங்கள் ஏற்படலாம்.

Published:Updated:
போலீஸ் கட்டுப்பாட்டு அறை
News
போலீஸ் கட்டுப்பாட்டு அறை ( சித்தரிப்புப் படம் )

அசாதாரணமாக ஏற்படும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பதற்காகத்தான் அரசு பல அவசர உதவி எண்களை வைத்திருக்கிறது. ஒரு பிரச்னையை தீர்ப்பதற்காக அந்த அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு அதுவே தலைவலியாக மாறினால் எப்படி இருக்கும்? இது அப்படியான ஒரு சம்பவம்தான்.

இன்று (05/10/2022) காலை, உறவினர் ஒருவரை ஊருக்கு அனுப்புவதற்காக கோயம்போடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு சென்றிருந்தேன். நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்பட்டுச் செல்வதற்கும், உள்ளே வருவதற்குமான சாலை இரண்டாக பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. காலை 5 மணி, வெளிச்சம் அவ்வளவாக இல்லாத நேரம். அங்கே விளக்குகள் எரிந்தாலும், அத்தனை தெளிவாக இல்லாத அளவுக்கு சில இடங்களில் மரங்கள் அடந்திருக்கின்றன. பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் பேருந்துகள், ஓரிடத்தில் சட்சட்டென்று வளைந்து சென்று கொண்டிருந்தன. என்னவென்று கவனித்தால், கிட்டத்தட்ட பாதி சாலையை மறைத்தபடி ஒரு மனிதர் குப்புறக்கிடந்தார்.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

அந்தக் காட்சியைப் பார்த்ததும் திக்கென்று இருந்தது. அவர் யார்? என்ன நிலையில் இருக்கிறார்? குடித்துவிட்டு கிடக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்று மனதுக்குள் பல கேள்விகள். அருகே சென்று சோதித்துப் பார்க்கவும் அந்த நேரத்தில் தைரியம் வரவில்லை. காரணம், அக்கம்பக்கம் யாருமே இல்லை. அதேசமயம், அவர் அங்கே அப்படியே கிடந்தால், ஏதாவது ஒரு பேருந்து அவர் மீது ஏறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்கிற பதற்றமும் ஏற்படாமல் இல்லை. உடனடியாக அவசர உதவி எண் 100-க்கு ஒரு போன் செய்தேன். அழைப்பை எதிர்கொண்டவரிடம் விஷயத்தைச் சொன்னேன். விளக்கமாகக் கேட்டுக்கொண்டவர், உடனே கவனிக்கச் சொல்வதாகக் கூறினார். நிம்மதியாக அங்கிருந்து வந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு போன் அழைப்பு. ``கோயம்பேடு போலீஸ் பேசுறேன். என்ன பிரச்னை... எங்க பிரச்னை?’’ என்று விளக்கமாகக் கேட்டார். அனைத்து விவரங்களையும் மீண்டும் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே... இன்னொரு அழைப்பு. இதை முடித்துவிட்டு அதற்குக் காதுகொடுத்தேன். ‘’கோயம்பேடு போலீஸ் பேசுறேன். என்ன பிரச்னை... எங்க பிரச்னை?’’ அதே கேள்வி... அதே பதில். அதற்குள் அடுத்தடுத்து அழைப்புகள். ‘பராவயில்லையே... இத்தனை அக்கறையா இருக்காங்காங்களே’ என்று பெருமைப்பட்டபடியே பதில் சொல்லிச் சொல்லி ஓய்ந்த நான், ஒருகட்டத்தில் ‘இதென்னடா வம்பா போச்சு’ என்று ஒரு கட்டத்தில் கொஞ்சம் கவலை கொள்ளவும் நேரிட்டது. தொடர்ந்து அத்தனை அழைப்புகள்.

சமூக ஊடகக் குழு - தமிழ்நாடு போலீஸ்
சமூக ஊடகக் குழு - தமிழ்நாடு போலீஸ்

“சார், இதுவரைக்கும் நாலைஞ்சு பேர் பேசிட்டீங்க. வரிசையா அதே பதிலைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். உங்களுக்குள்ள ஒருங்கிணைப்பு இல்லையா... ஒருத்தர் அட்டென் பண்ணிட்டா, அடுத்தவங்களுக்குத் தகவல் வந்துடாதா?” என்று கேட்டேன்.

’நாங்க வேற வேற இடத்துல இருந்து போன் பண்றோம். இன்னும்கூட போன் வரும். நீங்க விஷயத்தைச் சொல்லுங்க’’ என்றது எதிர்குரல்.

‘ம்ம்ம்... ஒருத்தருக்கு உதவ நினைச்சது தப்பா?’, ‘நாமளாத்தான் மாட்டிகிட்டோமா?’ என வடிவேலு கணக்காக புலம்பிய நாம், ‘இனிமே 100-க்கு போன் போடுவியா நீ?’ என்று உள்ளுக்குள் குமைந்தபடி, நொந்த அனுபவத்தை 100-க்கு போன் செய்து சொன்னேன். மேலிடத்தில் உங்களது கருத்துக்களை பகிர்வதாகச் சொல்லி துண்டித்தனர்.

இறுதியாக மீண்டும் கோயம்பேடு போலீஸிடமிருந்து அழைப்பு. “ஏம்ப்பா... நீ சொன்ன இடத்துல அப்படி யாருமே இல்லையே? கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுனுதானே சொன்னே?”

எனக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஒருவேளை அவரே எழுந்துபோயிருப்பார் போல” என்று சொல்லித் துண்டித்தேன்.

காலையில் சர்சர்ரென்று அத்தனை பேருந்துகள் போய்க்கொண்டிருந்த சூழலிலும் அசையாமல் கிடந்த அந்த மனிதர், ஒருவேளை எழுந்துகூட போயிருக்கலாமோ... என்னவோ? அதேசமயம், அதேஇடத்தில் அவர் கிடந்து, ஏதாவது ஆகியிருந்தால்?

அதுஒருபுறமிருக்க, இப்படி 100-க்குப் போன் போட்டவரை தொடர்ந்து போன் போட்டு கேள்விமேல் கேள்விகளாகக் கேட்டால், யாருக்குத்தான் எதிர்காலத்தில் இப்படி போன் செய்யத் தோன்றும்? உண்மையிலேயே போலீஸின் நடைமுறையே இப்படியா... அல்லது ‘இனிமே 100-க்கு போன் போடுவியா?’ கதைதானா?

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

இந்த விஷயத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். நாம் சொன்ன தகவல்களை முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், “உண்மையிலேயே இது சிறப்பான சிஸ்டம். அது சிறப்பாக செயல்படுவதால்தான் அத்தனை முறை உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் புகார் குறித்து விசாரித்திருக்கின்றனர். 100, 108, 110 என எந்த எண்ணுக்கு அழைத்தாலும் `மாஸ்டர் கன்ட்ரோல்’ ரூமுக்குத்தான் உங்கள் அழைப்பு முதலில் செல்லும். அங்கே உங்கள் புகாரை தெரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள்.

உங்கள் அழைப்பும் அப்படித்தான் முதலில் மாஸ்டர் கன்ட்ரோல் ரூமுக்குச் சென்றிருக்கும். பிறகு அங்கிருந்து லோக்கல் போலீஸுக்கு தகவல் சொல்லியிருப்பார்கள். ஒருபுறம் லோக்கல் போலீஸ் தொடர்புகொண்டிருப்பார்கள். இன்னொருபுறம் உங்கள் புகார் நிவர்த்தி செய்யப்படுவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கன்ட்ரோல் ரூமிலிருந்து உங்களை தொடர்புகொள்வார்கள்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை
போலீஸ் கட்டுப்பாட்டு அறை
சித்தரிப்புப் படம்

சமயங்களில் புகாரில் சந்தேகங்கள் எழுந்தாலோ அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்பட்டாலோ லோக்கல் போலீஸிடமிருந்து பலமுறை உங்களைத் தொடர்புகொள்வார்கள். ஒரு பிரச்னையை சரிசெய்வதற்காக, நல்ல நோக்கத்துடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளும் சிலருக்கு சமயங்களில் இப்படியான அசெளகரியங்கள் ஏற்படலாம். இதனை பொதுமக்களின் நன்மைக்காக தயவுகூர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்த சிஸ்டத்தில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இது மிகச் சிறப்பான சிஸ்டம்” என்றார் விளக்கமாக.

பூநி