Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு: அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

பெட்ரோல் விலை உயர்வு: அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
பெட்ரோல் விலை உயர்வு: அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை மக்களவை கூடியதும் இடதுசாரிகள், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று மாநிலங்கள் அவையிலும் அமளி ஏற்பட்டது. மக்களவையில் கேள்விநேரத்தை ஒத்திவைத்துவிட்டு இதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று இடதுசாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இடதுசாரி எம்.பி.யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கேள்வி நேரத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் தொடங்கினார்.

இதனால் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களால் பதில் அளிக்கமுடியவில்லை. இதைத் தொடர்ந்து மக்களவையை பிற்பகல் வரைக்கும் ஒத்திவைத்தார் மீராகுமார். அவை பின்னர் கூடியபோதும் அதே நிலை நீடித்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவையில் கேள்வி நேரத்தை தொடர அனுமதிக்கும்படி அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கோரிக்கைவிடுத்தார். ஆனால், பா.ஜ.க., இடதுசாரிகள், ஐக்கிய ஜனதாதளம், அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் எழுப்பனர். இதைத் தொடர்ந்து அவையை 10 நிமிடங்களுக்கும், பின்னர் பிற்பகல் வரையிலும் ஒத்திவைத்தார் அன்சாரி.

இதைத் தொடர்ந்து மூன்று மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியது. எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.