Published:Updated:

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு என்ன செய்யலாம்...? நிபுணர்கள் கருத்து

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு என்ன செய்யலாம்...? நிபுணர்கள் கருத்து
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு என்ன செய்யலாம்...? நிபுணர்கள் கருத்து

பெட்ரோல், டீசல் விலை நுகர்வைக் குறைக்க வேண்டுமானால், பொது போக்குவரத்தை மேம்படுத்தி, அதனை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்...

ர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சமீப மாதங்களாக இந்தியாவில் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம், `அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் கூட இந்தியாவைக் காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை மிகக் குறைவாகவே உள்ள நிலையில், இந்தியாவில் ஏன் இவ்வளவு விலை விற்கப்படுகிறது?' என்ற கேள்வி எழுப்பப்படுவதும், இதற்கு மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பே காரணம் என்பதால், வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாத போக்கே நீடிக்கிறது. இத்தனைக்கும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்போதெல்லாம், அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டிய பா.ஜனதா, வரியைக் குறைத்து பொதுமக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், இப்போது பா.ஜனதா தலைமையிலான அரசுதான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அவர்கள் சொன்ன அறிவுரையைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளபோதிலும், அவற்றை மோடி தலைமையிலான அரசு செய்ய முன்வரவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மோடி அரசைக் கடுமையாகக் குறைகூறி வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 50 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.48 லிருந்து ரூ.50 என்கிற அளவுக்கு இருந்தது. 2015-ம் ஆண்டில் ஒரு பேரல் விலை 40 டாலர்கள் வரை சரிந்த போதும் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலையை இங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 75 டாலர்களைத் தாண்டியுள்ளது.

அண்மையில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் ( ஒபெக்) மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் முதல் 100 டாலர் வரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசலின் வரியை இப்போதிருந்தே குறைக்க முன்வரவில்லை என்ற கேள்விகள் பல மட்டங்களில் இருந்தும் எழுப்பப்படுகின்றன.

வரி வருவாயும் வரிக் குறைப்பும் 

``ஆனால், மோடி அரசு என்றில்லை. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் வரி குறைப்பு அத்தனை எளிதான காரியமல்ல. ஒருவேளை மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக வரியைக் குறைத்தாலும், அரசின் வரி வருவாயை ஈடுகட்ட வேறு ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களின் மீதான வரியை உயர்த்திதான் தீர வேண்டும். ஏனெனில், அரசின் வரி வருவாய் என்பது zero-sum game எனப்படும் யாராவது ஒருவருக்கு ஏற்படும் இழப்புதான் இன்னொருவருக்கு லாபமாக அமையும் என்ற விளையாட்டு அடிப்படையிலானதுதான்" என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

ஒருவேளை வேறு பொருள்கள்மீது கூடுதல் வரி விதிப்பதை அரசு விரும்பவில்லை என்றால், மொத்த வரி வருவாய் குறைப்பை ஈடுகட்ட செலவினங்களைக் குறைக்க வேண்டும். அப்படிச் செலவினம் குறைப்பு என்ற பேச்சு வரும்போதெல்லாம் முதலில் சொல்லப்படுவது அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆடம்பரச் செலவினங்களைக் குறைப்பது, துறை ரீதியான செலவினங்களைக் குறைப்பது, ஒவ்வொரு துறைகளிலும் நடக்கும் ஊழல்களை ஒழிப்பது போன்றவைதாம். ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்று அரசு தரப்பில் அவ்வப்போது அறிவிக்கப்படும் `ஆடம்பரச் செலவுகள் குறைப்பு' திட்டமெல்லாம் நாளடைவில் காணாமல் போய்விடும். மக்களும் அதனை மறந்து விடுவார்கள். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கும் அந்தக் கதிதான்.

இத்தகைய சூழலில், ``பாதுகாப்புத் துறை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றுக்காகச் செலவிடப்படும் செலவுகளைக் குறைத்தாலோ அல்லது அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன் மற்றும் அரசு செலுத்தும் வட்டி போன்றவற்றைக் குறைத்தாலோ அதுவும் மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயம்தான் என்பதால், அவற்றின் மீதும் கை வைக்க முடியாது. அதாவது செலவுகளைக் குறைக்க முடியாது. அப்படியான சூழலில் அரசுக்கான வருவாய் ஆதாரம் வரிகள்தாம். இந்த வரி மூலமான வருவாய் போதாமல் சமயங்களில் கடன் வாங்குவது அல்லது தனது சொத்துகளை விற்பதன் (பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளைக் குறைத்துக்கொள்வது போன்றவை ) மூலமும் தனது நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை எப்படிக் குறைக்க முடியும்?" என்ற கேள்வியை அரசுக்கு ஆதரவான வட்டாரங்கள் எழுப்புகின்றன.

இத்தகைய சூழலில், ``பெட்ரோல் மீதான வரியைக் குறைத்தே தீர வேண்டும், அதே சமயம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலம் சார்ந்த நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்த வேண்டுமென்றால், அந்தச் செலவுகளை ஈடுகட்ட வருமான வரியை உயர்த்துவது அல்லது மற்ற பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியைத்தான் உயர்த்த வேண்டும். ஆனால், அது இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால், பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்" என்கிறார்கள் அவர்கள்.

பெட்ரோலுக்குப் பதில் பேட்டரி

அதே சமயம் இது இன்னொரு வகையில் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது இந்த விலை உயர்வினால், அவற்றின் பயன்பாடு குறைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில்கள், போன்ற பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாகும். இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கும் நன்மை உண்டாகும். இவையெல்லாவற்றையும் விடக் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் டாலர்களின் அளவு குறையும்.

``பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்ட நிலையில், அதுபோன்று பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நாம் நகர வேண்டும். 2030-ல் இந்தியாவில் பேட்டரியால் இயங்கக் கூடிய வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என அரசு இலக்கு அறிவித்தது. சூரிய ஒளி மின்சாரம், எலெக்ட்ரிக் கார்கள், பேட்டரிகள் ( எரி சக்தியைச் சேமித்து வைக்க) போன்ற துறைகளில் தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக வரத் தொடங்கிவிட்டதால், அவற்றின் விலைகளும் குறையத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் நிலக்கரி மூலம் தேசிய அனல் மின்நிலையக் கழகம் (NTPC) உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 3.20 ரூபாயாக உள்ள நிலையில், சூரிய ஒளி மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 2.44 ரூபாயாக உள்ளது. சவுதி அரேபியாவில் 2017 லேயே யூனிட் ஒன்று ரூ.1.20 என்ற குறைந்த விலையை எட்டி விட்டது. அதேபோன்றே பேட்டரி விலைகளும் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகின்றன. 2010-ல் மின்சார வாகனத்துக்கான பேட்டரி ஒரு கிலோ வாட்டுக்கு 1000 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 145 டாலராகக் குறைந்துவிட்டது. 2025-ல் இது இன்னும் குறைந்து 100 டாலர் என்ற அளவுக்கும் குறையலாம். இதே ரீதியில் சென்றால், 2030-ல் பெட்ரோலியப் பொருள்களின் மூலமான வாகனப் போக்குவரத்து வழக்கொழிந்து போய்விட வாய்ப்பு உள்ளது" என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

வருமானத்தை அதிகரிக்க மாற்று வழிமுறைகள்  

அதே சமயம், இத்தகைய மாற்று எரிசக்தி மற்றும் பேட்டரி கார் உற்பத்தி அதிகரிப்பு போன்ற விஷயங்களில் மத்திய அரசு தீவிரம் காட்டினால்தான் இதனை அடைய முடியும். ஆனால், அது வரைக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ஏற்படும் சுமையை ஏழை, எளிய மக்கள்மீது கடத்துவதற்குப் பதிலாக மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிஐடியூ மாநிலப் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரிடம் கேட்டோம்.

``பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், அவற்றின் நுகர்வு அதிகமாகிவிடும். இதனால், அந்நியச் செலாவணியை, அதாவது டாலரை அதிகமாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அவற்றின் விலையைக் குறைக்க அரசுத் தரப்பில் விரும்பவில்லை என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் விலை நுகர்வைக் குறைக்க வேண்டுமானால், பொது போக்குவரத்தை மேம்படுத்தி, அதனை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை ஏன் மூட மறுக்கிறீர்கள் என்று கேட்டால், அதன் மூலமான வருவாயில்தான் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். அந்த வருவாய் நின்றுபோனால், நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியாது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறினார்கள். அதைபோன்றுதான் இருக்கிறது பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தால் மற்ற பொருள்களின் மீதான வரியைக் கூட்ட வேண்டியதிருக்கும் என்ற வாதம்.

வரிச் சலுகைகள், வாராக்கடன் தள்ளுபடியை நிறுத்த வேண்டும்

எனவே, அரசுதான் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேறு வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த முன் வரவேண்டும். முதலாளிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகள் மூலம் கடனாகக் கொடுக்கிறார்கள். அதனை அந்த முதலாளிகள் திரும்பக் கட்டாதபோது, அதனைத் தள்ளுபடி செய்கிறார்கள். மல்லையாக்கள், நீரவ் மோடிகள் போன்ற மோசடி நபர்கள், வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகை மட்டும் 2018 மார்ச் மாதம் வரை 10.25 லட்சம் கோடியாக உள்ளது. இது ஒருவகை என்றால், தொழிற்துறை ஊக்குவிப்பு என்ற பெயரில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள், குறைந்த செலவில் இடங்கள் அளிப்பது, அரசுச் செலவில் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்றவற்றின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகளை அனுபவித்துவிட்டு அந்த நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் வரி கட்ட வேண்டும் என்ற நிலை வரும்போது கடையை மூடிவிட்டு நாட்டைவிட்டு கம்பி நீட்டி விடுகின்றன. இதனால் அரசுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் செலவு குறைப்பு நடவடிக்கையாக அரசுகள் பார்ப்பதில்லை. இதுபோன்று வரிச் சலுகைகள் அளிப்பதையும், கடனைத் தள்ளுபடி செய்வதையும் நிறுத்துவதை விட்டுவிட்டு ஏழை, எளிய மக்கள்மீது வரியைப் போட்டுத்தான் அரசாங்கத்தை நடத்துவோம் என்று சொல்வதை எந்த வகையில் ஏற்க முடியும்?

இயற்கை வளங்களைப் பயன்படுத்தலாம்

மக்களுக்கு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வரும் ஓர் அரசாங்கத்தின் முக்கியமான கடமையே, மக்களைச் சிரமப்படுத்தாமல் வருமானத்தைப் பெருக்குவதற்கு என்ன வழிகள் உள்ளன என்பதைக் கண்டறிவதுதான். ஒரு அரசு மக்கள் நலன் சார்ந்து இருக்கிறது என்றால், இப்படித்தான் யோசிக்க வேண்டும். போக்குவரத்தே இல்லாத சாலையில் யார் வேண்டுமானாலும் வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். ஆனால், போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் லாகவமாக வாகனத்தை ஓட்டிச் செல்பவர்தான் ஒரு திறமையான டிரைவர். நான் நன்றாக வாகனத்தை ஓட்டுவேன் என்று சொல்லும் ஒரு டிரைவர், தன்னைப் போக்குவரத்தே இல்லாத சாலையில் வாகனத்தை ஓட்டச் சொல்வது போன்றுதான் இருக்கிறது இந்த அரசாங்கம் சொல்வதும்.

எனவே, எந்த அரசாக இருந்தாலும் மக்களைச் சிரமப்படுத்தாமல் வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். நம்மிடம் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே வருமானத்தை அதிகரிக்க முடியும். உதாரணமாக, டாஸ்மாக்கை மூடினால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை கிரானைட் குவாரிகள் மூலம் ஈடுகட்டலாம் என்று அரசுக்கு ஆலோசனை சொன்னோம். கிரானைட் பொதுவான சொத்து. இதுபோன்ற கிரானைட் குவாரிகளைச் சுரண்டி யாரோ சில தனிநபர்கள் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி எனக் கொள்ளையடிக்கிறார்கள். எனவே, இதுபோன்று வருவாயைப் பெருக்குவதற்கான மாற்று வழிகளை அரசை நடத்திச் செல்பவர்கள்தாம் கண்டறிய வேண்டும்.

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் இந்தியாவை விடக் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. இத்தனைக்கும் அவர்கள் இந்தியாவைப் போன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, பின்னர் அதனைச் சுத்திகரிப்பு செய்து விற்பதில்லை. நேரடியாகவே சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலையே, அதுவும் இந்தியாவில் அதனைச் செய்து விற்கும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடமிருந்து வாங்கி விற்கிறார்கள். கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து, அதனை ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு வலுவாக இருக்கும் ஒரு நாட்டை ஆள்பவர்களுக்கு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து குறைந்த விலைக்குக் கொடுக்க முடிகிறது என்று தெரியவில்லை என்றால், மோடி அல்லது எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் அந்த நாடுகளுக்குச் சென்றாவது அந்த அளவுக்குக் குறைவான விலைக்கு விற்பது எப்படி என்பதையாவது தெரிந்துகொண்டு வர வேண்டும்.

இதுதான் மாற்று வழி. சுருக்கமாகச் சொல்வதென்றால் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைக்க வேண்டுமெனில் பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதுதான் ஒரே வழி. அதிகக் கூட்டத்தை ஏற்றிச் செல்லாமல், மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் பொதுப் போக்குவரத்து செயல்பட்டாலே மக்கள் அதனை அதிகமாக நாட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு லிட்டர் டீசலில் ஒரு கிலோ மீட்டர் செல்லக்கூடிய காரும் இருக்கிறது, அதே அளவு டீசலில் 4 பேர் செல்லக்கூடிய ஆட்டோவும் இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள்தாம் அதிகமாக உள்ளன. இவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமெனில் இதுபோன்று பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுதான் ஒரே வழி" என்று சொல்லி முடித்தார்.

என்ன செய்யப்போகிறார்கள் ஆட்சியாளர்கள்?

அடுத்த கட்டுரைக்கு