Published:Updated:

'கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுங்க' - பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கெஞ்சிய விவசாயிகள்.

சி.ய.ஆனந்தகுமார்
'கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுங்க' - பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கெஞ்சிய விவசாயிகள்.
'கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுங்க' - பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கெஞ்சிய விவசாயிகள்.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாகக் கடந்த மாதம் முழுவதும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அந்தத் தண்ணீரை முறையாக கால்வாய்களில் திறந்துவிடாததால், டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல், அப்பகுதிகள் வறட்சியில் வாடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கோரி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட விவசாயிகள் கடந்த சில வாரங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்துவருவதுடன், ஆங்காங்கே போராட்டங்களை நடத்தியும்வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தஞ்சாவூர் கீழ்காவேரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்துக்கு வந்த திருவையாறு சட்டமன்ற தி.மு.க  உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட விவசாய  சங்கப் பிரதிநிதிகள், “காவிரி  கல்லணையிலிருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் கடைமடைப் பகுதியான தஞ்சை, பூதலூர் ஒன்றியப் பகுதிகளில் ஏரிகளுக்குப் பாசனத்துக்காக இன்னும் நீர் வந்து சேரவில்லை. இதனால், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனு அளித்தனர்.

நம்மிடம் பேசிய விவசாயிகள், “இவ்வளவு தண்ணி ஆறா ஓடுச்சு. ஆனா, எங்க ஊர் பக்கம் தண்ணி வரல. இந்தப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாகத் தண்ணீரைத் திறந்து விட்டிருந்தால், நாங்கள் தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் நிலை வந்திருக்காது. கொள்ளிடம் ஆத்துல தினத்துக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கு சொல்றாங்க. அந்தத் தண்ணீரில் கால் பங்கு திறந்துவிட்டிருந்தாலே, எங்க ஏரியா  ரெண்டு வருஷத்துக்கு வெள்ளாமை பார்த்திருப்போம். இப்படி எங்க வயத்துலே அடிச்சுட்டாங்க' எனக் கதறினார்கள்.