Published:Updated:

வீதியில் கலை நிகழ்ச்சி... ஓடும் பேருந்தில் வசூல்...டெல்டாவுக்கு கைகொடுக்கும் கிராமியக் கலைஞர்கள்!

வீதியில் கலை நிகழ்ச்சி... ஓடும் பேருந்தில் வசூல்...டெல்டாவுக்கு கைகொடுக்கும் கிராமியக் கலைஞர்கள்!
வீதியில் கலை நிகழ்ச்சி... ஓடும் பேருந்தில் வசூல்...டெல்டாவுக்கு கைகொடுக்கும் கிராமியக் கலைஞர்கள்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு உதவ, மதுரையைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டிவருகின்றனர்.

கஜா புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் மரங்கள் சாய்ந்ததோடு, 735 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1.17 லட்சம் வீடுகளும், 88 ஆயிரத்து 102 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாயமும் சேதமடைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் மின் இணைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத் தேவைகள் ஏதுமின்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அதிராம்பட்டினம் கிராமத்தில் இருந்த 3000 வீடுகளில் 2000 வீடுகள் சேதமடைந்ததால், அப்பகுதி மக்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.

டெல்டா மாவட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், கிராமியக் கலைகளை நிகழ்த்தி நிதி திரட்டிவருகின்றனர். இதுகுறித்து தப்பாட்டப் பயிற்சியாளர் தமிழ்," டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்று ஒரு நாள் மதுரையில் உள்ள கலைஞர்கள் கிராமியக் கலையை நிகழ்த்தி, நிதி சேகரித்துவருகிறோம். 130-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நிதி திரட்டி, நாளை அல்லது நாளை மறுநாள்  அதை வழங்க உள்ளோம். மாட்டுத்தாவணி பகுதியில் தொடங்கி திருப்பரங்குன்றம் பகுதியில் நிறைவு செய்கிறோம்'' என்று தெரிவித்தார்.

நாட்டுப்புறக் கலைஞர் தங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்து வந்தாலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று நிதிதிரட்ட உழைப்பது அனைவராலும் பாராட்டப்படுகின்றனர்.