Published:Updated:

68 நாடுகளில் 8,445 இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்கள்! - மத்திய அரசு

68 நாடுகளில் 8,445 இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்கள்! - மத்திய அரசு
68 நாடுகளில் 8,445 இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்கள்! - மத்திய அரசு

வெளிநாட்டு சிறைகளில் இந்தியர்கள் 8,445 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி படாருடோசாகான், வெளிநாட்டுச் சிறைகளில் இருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், வெளிநாட்டுச் சிறைகளில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் அரசிடம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்தக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், `அரசிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி 15 நாடுகளின் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல், தற்போதைய கணக்குப்படி 68 நாடுகளின் சிறைகளில் இந்தியாவைச் சேர்ந்த 8,445 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சில நாடுகளில் உள்ள கடுமையான தனியுரிமைச் சட்டங்களால், அந்நாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களைப் பகிர்வதில் தயக்கம் காட்டுகின்றனர். 

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்திய அரசின் தலையாயப் பணிகளில் முக்கியமானது. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்த்தப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். அப்படி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுமாயின், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தூதரகங்கள் அந்நாட்டு அரசுகளிடம் அறிவுறுத்துகின்றன. அதுபோன்ற சம்பவங்களில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எல்லா வகையிலான உதவிகளும் செய்யப்படுகின்றன.

சில நாடுகளில் வழக்கறிஞர்களும் இருக்கின்றனர். அவர்கள் மூலம் சிறைகளில் வாடும் இந்தியர்களுக்கு சட்ட உதவியும் வழங்கப்படுகிறது. அதுபோன்ற சம்பவங்களில் இந்தியர்கள், தங்களின் தண்டனைக் காலத்தை முடித்து பாதுகாப்பாக நாடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. தண்டனைக் காலத்துக்குப் பின்னர், இந்தியர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் உள்ளிட்டவை உரிய முறையில் கையாண்டு, அவர்களைத் தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கையும் எடுக்கிறோம். அதேபோல், சிறையிலிருந்து வெளிவந்த இந்தியர்கள் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் சூழலில், விமானக் கட்டணத்தை அளித்தும் அவர்கள் நாடு திரும்ப உதவுகிறோம்’’ என்று அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.