Published:Updated:

ஒருபுறம் தாக்குதல்; மறுபக்கம் ஊடுருவல்! - பாகிஸ்தானின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை முறியடித்த இந்திய ராணுவம்

ஒருபுறம் தாக்குதல்; மறுபக்கம் ஊடுருவல்! - பாகிஸ்தானின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை முறியடித்த இந்திய ராணுவம்
ஒருபுறம் தாக்குதல்; மறுபக்கம் ஊடுருவல்! - பாகிஸ்தானின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை முறியடித்த இந்திய ராணுவம்

ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவித் தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது இந்திய ராணுவம். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 19 வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்னும் திடீர் தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இந்திய எல்லையைத் தாண்டிச் சென்று ராணுவம் நடத்திய இந்த அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக பாகிஸ்தான் தரப்பில் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. 

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் நௌகாம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பேட் (BAT -Border Action team) நடத்திய தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக இந்திய ராணுவம் முறியடித்திருக்கிறது. பேட் குழு என்பது பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகள் அடங்கியது. சர்வதேச எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் எல்லைகளுக்குள் புகுந்து துணிகரத் தாக்குதலை நடத்தும் வல்லமை படைத்த இந்தக் குழுவினர், தங்களிடம் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள கரல் காட் (Karal Kot) ராணுவ முகாம் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை குவாட்காப்டர்ஸ் (Quadcopters) எனும் ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவம் கண்டறிந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், ``பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதலைக் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கியது. கரல் கட் பகுதியை ஒட்டிய பகுதியில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அதேநேரம், சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஒருபுறம் தாக்குதல் நடத்திக்கொண்டே மறுபுறம் இந்திய எல்லைக்குள் நுழைய அவர்கள் முயன்றிருக்கிறார்கள். இந்த ஊடுருவல் முயற்சி குறித்து சந்தேகம் எழுந்தவுடன், பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தினோம். சில மணி நேரங்கள் நடந்த தாக்குதல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. 

தாக்குதல் முடிவுற்ற பின்னர் கிஸான் பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் குவாட்காப்டர்ஸ் ட்ரோன்கள் மூலம் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினர். நமது தாக்குதலால் எதிர்த்தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து அறிந்துகொள்வதற்காக அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்திய ராணுவ வீரர்கள் போன்ற உடையணிந்த இரண்டு பேரின் உடல்களைக் கண்டறிந்தோம்’’என்று தெரிவித்தார். 
ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தியபோது, இறந்தவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவர்களிடமிருந்து 2 ஏ-கே 47 ரகத் துப்பாக்கிகள், 480 துப்பாக்கி ரவைகள், 3 தகவல் தொடர்பு சாதனங்கள், இரண்டு IED வெடிகுண்டுகள், 2 கேமராக்கள் மற்றும் பெட்ரோல் பாட்டில்கள் உள்ளிட்டவைக் கைப்பற்றினோம். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் மற்றும் உடல்கள் ஆகியவற்றைக் கொண்டு இறந்தவர்கள் பாகிஸ்தானின் பேட் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. வீரர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் அவர்கள் ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் போல் உடையணிந்து வந்திருக்கிறார்கள். இந்திய எல்லைக்குள் அவர்கள் நுழையும் வரை பாகிஸ்தான் ராணுவம் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்தப் பகுதியில் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்பதை அறிய ராணுவம் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்றதொரு தாக்குதலை இந்திய எல்லைக்குள் நடத்த பாகிஸ்தான் முயன்றதா என்ற கேள்வி இந்தச் சம்பவத்தின் மூலம் எழாமல் இல்லை.