Published:Updated:

``பேக்கிங் பிளாஸ்டிக் பொருள்களை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்?" - பியூஷ் மனுஷ்

``பேக்கிங் பிளாஸ்டிக் பொருள்களை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்?" - பியூஷ் மனுஷ்
``பேக்கிங் பிளாஸ்டிக் பொருள்களை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்?" - பியூஷ் மனுஷ்

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மாற்றுப் பயன்பாட்டுப் பாத்திரங்களின் உற்பத்தியை அதிகரித்துவிட்டு, பின்னர் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அழிப்பதற்கு முடிவெடுத்த தமிழக அரசு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. குறிப்பாக, மக்காத 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து ஜனவரி 1-ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை ஏற்று, அனைத்துத் தரப்பு மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டனர். 

குறிப்பாக, ஹோட்டல்கள் மற்றும் கடைகள், பெரிய நிறுவனங்கள் எனப் பலரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குப் பதிலாக மண் குவளைகள், வாழை இலை, பாக்கு மர இலை, அலுமினியத் தாள், காகிதங்கள், பனை ஓலை பொருள்கள், மரக்கரண்டி, மட்பாண்டம் உள்ளிட்ட மக்கும் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதேபோன்று பொருள்களை வாங்கும் பொதுமக்களும் துணிப்பைகள், பாத்திரங்கள் போன்றவற்றை வீட்டிலிருந்தே எடுத்து வருகிறார்கள். இப்படியாக அனைத்துத் தரப்பினரும் சிரமம் பாராமல் அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகக் குடும்பத்தலைவி ஆதிரை, ``அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பால் வாங்குவதற்குக்கூட  `கவர்' (கேரிபேக்) கேட்டவர்கள், இன்று கையில் காய்கறிகளை எடுத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. வீட்டிலிருந்தே மஞ்சள் பையை எடுத்து வருகிறார்கள். அந்நிய நாட்டுப் பொருள்களுக்குத்தான் தடைபோட முடியவில்லை. சூற்றுச்சூழலை மாசுப்படுத்தும் இந்த பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை வராதா என்று எண்ணிய நாள்களும் உண்டு. தமிழக அரசின் இந்த நடைமுறையால் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்  ஒழிப்பு நடவடிக்கைத் தொடங்கியுள்ளது. இதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அரசின் இந்த நடைமுறை இன்னும் முழுமையடையவில்லை. சில ஹோட்டல்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உணவு மற்றும் டீ, காபி போன்றவற்றைக் கூட பிளாஸ்டிக்  கவரில் வாங்கிச்செல்கிறார்கள். இதை ஒழித்தால் மிகவும் நல்லது. மேலும், தனி மனிதர்கள்,  அரசாங்கம் என அனைவரும் இணைந்து செய்தால் இந்த நடைமுறை வெற்றியாகும்" என்றார் நம்பிக்கையுடன்.

தனியார் கல்லூரியில் கேன்டின் நடத்தும் கணேசன், ``அரசின் இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன். முன்னேற்பாடுகள் இல்லாமல் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் தனிநபர்கள் தயாராக வேண்டியது அவசியம். குறிப்பாக, உணவகங்களில் இதனை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பகட்ட சிக்கல்கள் இருக்கின்றன. குப்பைகளைப் போடுவதற்கான ஒரு பெரிய `பை' இல்லை என்பதால், சணல் பைகளைப் பயன்படுத்துகிறேன். மேலும் சில்வர் தட்டுகள், மண் குவளைகள், இலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மாற்றுப் பயன்பாட்டுப் பாத்திரங்களின் உற்பத்தியை அதிகரித்துவிட்டு, 

பின்னர் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான் இந்தச் சிரமம் என்று எண்ணும்போது அது ஒரு பெரிய சிரமமாகத் தெரியவில்லை" என்றார். 

சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஷ் மனுஷ், ``தமிழக அரசின் முயற்சியைப் பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன். அதே நேரத்தில், பெரிய நிறுவனங்களின் பேக்குகளில் வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை எவ்வாறு  தடை செய்யப்போகிறது? இதைக் கட்டுப்படுத்தும்  சட்டங்கள் நீர்த்துப்போனதாக உள்ளது. அந்தச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக, சிறு வணிகர்களிடையே  இந்த மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பது நம்பிக்கை கொடுத்தாலும், பெரிய வணிக நிறுவனங்களின் நிலை என்னவென்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும். அது மட்டுமன்றி, தெர்மாகோல், அமேசான் நிறுவனத்தின் பபுள் ரேப் போன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டையும் தடுக்க வேண்டும். முதல்கட்டச் செயல்பாடு வரவேற்கத் தகுந்தவையாக இருந்தாலும், இதை நீண்டதூரம் கொண்டு செல்வதில்தான் இதன் முழுமையான வெற்றியே அடங்கியிருக்கிறது. மேலும், இந்தத்  திட்டத்தைக் கண்காணிக்கக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்த ஒரு கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தினால், இது முழுமையாக நடைமுறையாகும்" என்றார். 

இதையடுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ``கடந்த 4-ம் தேதிவரை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 21.67 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழக அரசு தடை செய்துள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அரசின், 'பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநகராட்சியின் சூற்றுச்சூழல், உணவுத்துறை  ஆகியன முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

அடுத்த கட்டுரைக்கு