Published:Updated:

விளை நிலங்களில் நான்கு வழிச்சாலை: தேர்தலைப் புறக்கணிக்க விவசாயிகள் முடிவு!

மதுரை திருமங்கலம் முதல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து விவசாயிகள் குறை தீக்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விளை நிலங்களில் நான்கு வழிச்சாலை: தேர்தலைப் புறக்கணிக்க விவசாயிகள் முடிவு!
விளை நிலங்களில் நான்கு வழிச்சாலை: தேர்தலைப் புறக்கணிக்க விவசாயிகள் முடிவு!

மதுரை திருமங்கலம் முதல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருமங்கலம்-கொல்லம் இடையேயான சாலையை நான்குவழிப் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காகத் திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், செங்கோட்டை வழியாகச் சாலை அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. மொத்தம் 146.98 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. அத்துடன், எந்தவித முன்னறிவிப்பும், இல்லாமல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்கள் அளக்கப்பட்டுக் கல் ஊன்றப்பட்டு வருவது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு, விளை நிலங்களுக்குப் பாதிப்பு இல்லாத மாற்றுப் பாதையில் சாலை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

இந்தச் சாலை அமைக்கப்படுவதால், நெல்லை மாவட்டத்தில் சுமார் 1,500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலத்தால் 3 லட்சம் தென்னை மரங்களும் 200 விவசாயக் கிணறுகளும் ஏராளமான குடியிருப்புகளும் அழிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அதனால் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மாற்று வழிப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்கள். தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றத் தவறினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்தனர். அத்துடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 20-ம் தேதி நெல்லைக்கு வரும்போது அவரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.