கஜா கலைத்துப்போட்ட டெல்டா, இன்னும் முழுமையாக மீளவில்லை. பல இடங்களுக்கு மின்சாரமே இன்னும் வரவில்லை. தீராத் துயரில் தவிக்கிறார்கள் மக்கள். மனிதர்களுக்கே இப்படியெனில், விலங்குகளின் நிலை என்னவாகியிருக்கும்? கஜா புரட்டிப்போட்ட கோடியக்கரை சரணாலயம், அழிவின் பாதிப்பிலிருந்து துளியும் மீளவில்லை. கஜாவுக்கு முன்பு வரை வனத்தை நிறைத்திருந்த பறவைகள் உட்பட வனவிலங்குகளின் தடத்தையே அங்கு இப்போது பார்க்க முடியவில்லை. மொத்த வனமும் அழிந்து, ஒரு பாலைவனம்போல பரிதாப நிலைக்கு மாறியிருக்கிறது சரணாலயம்.
வங்கக் கடலோரம் கோடியக்கரையில் 17.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கிறது கோடியக்கரை பறவைகள் மற்றும் வன விலங்குகள் சரணாலயம்.

வெப்ப மண்டல உலர் பசுமை மாறாக் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய வனமான இங்கு, மூலிகை வனமும் உள்ளது. இந்தக் காட்டில் பலவிதமான விலங்குகள், 240-க்கும் அதிகமான அரிய வகை மூலிகைத் தாவரங்கள், அரிய வகை மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. சிறுவாகை, பலா, மோதிரக்கண்ணு, பான் அடைப்பான், சங்கலை, மிளகுச் சாரணை, சங்கு புஷ்பம், நுணா இலை, ஆவாரம்பூ, சீந்திக்கொடி, விடத்தலை, உமரிச்செடி, பங்காரக் கீரை இவையெல்லாம் மூலிகைத் தாவரங்களுக்கான சில உதாரணங்கள்... சரணாலயத்தில் உள்ள புள்ளிமான்கள் மற்றும் வெளிமான்களின் பிரதான உணவே பங்காரக் கீரைதான்.
சமீபத்தில் வீசிய கஜா புயலில் இங்கு பல நூறு வருடங்களாகத் தழைத்திருந்த பெரிய மரங்கள், சிறு மரங்கள், செடிகொடிகள், புல் வகைகள் அத்தனையும் அழிந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் பட்டுப்போன மரங்களும்... அழுகிய தாவரங்களும் வெட்ட வெளியாக ஒரு வறண்ட பாலைவன மாகக் காட்சியளிக்கிறது சரணாலயம். இங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்க்கும்போது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பசுமையைக் காண முடியவில்லை. வழக்கமாக, சரணாலயத்துக்குள் பயணிக்கும்போதே மான்கள், குதிரைகள், குரங்குகள் என வன விலங்குகள் சர்வசாதாரணமாகச் சாலைகளில் குறுக்கிடும். ஆனால், புயலுக்குப் பின்னர் இவை கண்ணில் படுவது மிகவும் அரிதாகிவிட்டது. ஆயிரக்கணக்கில் சாலைகளில் திரியும் குரங்குகளின் எண்ணிக்கைக்கூட மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அச்சமடைந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட வன ஊழியர்கள், வனப் பகுதிக்குள் சென்று தேடிப் பார்த்தும் வன விலங்குகளைக் காண முடியவில்லை என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புயல் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் உள்ளுணர்வுத் திறன் விலங்குகளுக்கு இருப்பதால், அவை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருக்கலாம் என்ற ஒரு தகவல் மட்டுமே, இயற்கை ஆர்வலர்களுக்கு ஆறுதலைத் தருகிறது. ஆனாலும், பல நாள்களுக்குப் பின்பும்கூடக் கடல் பரப்பிலிருந்து மான், குதிரை போன்ற விலங்குகளின் உடல்கள் அடிக்கடி இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
இதுகுறித்துப் பேசும் கானுயிர் ஆர்வலர்கள், “பூநாரை உள்ளிட்ட பறவைகள், கூட்டம் கூட்டமாக வலசைச் செல்லும். ஒரு குழுவில், சுமார் 300 முதல் ஆயிரம் பூநாரைகள் வரை இருக்கும். இந்தக் குழுவைப் பார்த்துதான் பறவைகளின் எண்ணிக்கையைத் தோராயமாக நாங்கள் கணக்கிடுவோம். அதன்படி, தீபாவளிக்கு மறுநாள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பூநாரைகளைப் பார்த்தோம். ஆனால், புயல் அடித்த பத்து நாள்களுக்குப் பிறகு வனப் பகுதிக்குள் சென்றபோது, இறந்த நிலையில் 150 பூநாரைகளைக் கண்டோம். கண்ணில்பட்டது இவ்வளவுதான். ஆனால், கண்ணில் படாமல் கடலில் அடித்துச்சென்றது... மண்ணில் மக்கியது எனப் பெருமளவில் பூநாரைகள் இறந்திருக்கக் கூடும் என்று அச்சமாக உள்ளது. அதேபோல் தீபாவளிக்கு மறுநாள் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட உள்ளான்களைக் கண்டோம். இப்போது ஆயிரம் உள்ளான்களைக்கூட காண முடியவில்லை. ‘ஆலாய் பறக்கிறார்’ என்று சொற்றொடர், ‘ஆலா’ பறவைகளின் பறக்கும் திறனைக் கொண்டுதான் குறிப்பிடப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான ஆலா பறவைகள் பகல் முழுவதும் வானையும் வனத்தையும் நிறைத்திருக்கும். ஆனால், அந்த சிறு பறவைகளைக்கூட இப்போது பார்க்க முடியவில்லை. கடல் காகங்களையும் காணவில்லை. முன்பெல்லாம் வனப் பகுதியில் நடந்துசெல்லும்போது, காட்டுக் குருவிகளின் கீச்சுக்குரல்கள் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும். இப்போது பெரும் அமைதி நிலவுகிறது. இத்தகைய சூழலைப் பார்க்கும்போது பெரும் கவலையாக உள்ளது” என்றார்கள்.

கோடியக்கரை சரணாலய வன அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “புயலால் நிறையச் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. காட்டில் இருந்த பெரும்பாலான மரங்கள் விழுந்துவிட்டன. மான்கள் உள்ளிட்ட விலங்குகள் இறந்திருக்கின்றன. இயற்கைப் பேரிடருக்கு முன்பாக நாம் ஒன்றும் செய்ய இயலாது. கடல் நீர் உள்ளே புகுந்ததால் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளைத் தற்காலிகமாக அனுமதிப்பதில்லை. சேதமடைந்த சரணாலயத்தைச் சீரமைக்க, சில கோடி ரூபாயில் திட்டம் வகுத்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் வனம் பொலிவுபெறும்” என்றார் நம்பிக்கையுடன்.
- ம.ஹரீஷ்

தேவை வல்லுநர் குழு!
சீரழிந்த காட்டைச் சீரமைக்க முடியுமா என்பது குறித்து ‘ஓசை’ இயற்கை அமைப்பின் காளிதாசனிடம் பேசினோம். அவர், “தமிழகத்தில் கிண்டி, நெல்லை - வல்லநாடு, கோடியக்கரை, முதுமலை - சத்தி மோயாறு பள்ளத்தாக்கு ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே இரலை வகையைச் சேர்ந்த வெளிமான்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றன. எனவே, வெளிமான்கள் அழிவு என்பது மிகவும் கவலைக்குரியது. தவிர ஃபெரல் குதிரைகள் எனப்படும் ஆங்கிலேயர் காலத்தில் வளர்ப்புப் பிராணிகளாக இருந்து கைவிடப்பட்ட குதிரை இனம் இங்கு மட்டுமே இருக்கின்றன. அவற்றின் அழிவும் கவலைக்குரியது.
பொதுவாக, இயற்கை தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. காடுகளைப் பொறுத்தவரை கோடை வறட்சியி லிருந்தும், மழை வெள்ளத்தி லிருந்தும் காடு தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும். ஆனால், கஜா புயல் பாதிப்பை அப்படி வகைப்படுத்த முடியவில்லை. கடல்நீர் உள்ளே புகுந்ததால், மண் வளம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். வெளிமான்களின் முக்கியமான உணவு ஆதாரமே புல் வகைகள்தான். எனவே, வனத்துறையினர் தற்காலிகமாக வெளியேயிருந்து புல்லை வரவழைத்துக் காடுகளில் வைக்க வேண்டும். அழுகிய தாவரங்கள், முறிந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
விலங்குகளின் அடுத்த தேவை தண்ணீர் மற்றும் நிழல். இவற்றுக்கு, தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும். தாவரவியல், விலங்கியல் நிபுணர்களுடன் ஆலோசித்து, வனத்துறையினர் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.