Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்
பிரீமியம் ஸ்டோரி
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

Published:Updated:
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்
பிரீமியம் ஸ்டோரி
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

ந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், விருதுநகரின்  வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

‘சேலம் 150’, ‘சென்னை டே 2018,’ ‘தருமபுரி 200,’ `மதுரை 200,' `நெல்லை 200,' `கோவை 200,' மற்றும் `புதுச்சேரி 200,' ஆகியவற்றைத் தொடர்ந்து,  இப்போது விருதுநகர் 200 இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.

அன்பு விருதுநகர் சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

விருதுநகர் மாவட்டம்

1. மாவட்டத்தின் வரலாறு

மாவட்டத்தின் பெயரிலேயே `விருது' என்பதைத் தாங்கி நிற்கும் மாவட்டம். `விருது' என்ற பெயருக்கு ஏற்றாற்போல், பள்ளிக் கல்வி தேர்ச்சியில் முதலிடம், வர்த்தகத்தில் முக்கிய இடம் எனப் பல பெருமைகளைப் பெற்று, பெருமிதத்துடன் நிற்கிறது விருதுநகர் மாவட்டம்.

2. நினைவுக்கு வரும் முத்திரை

விருதுநகர் என்ற பெயரை உச்சரிக்கும் போதே முன்னாள் முதல்வர் காமராஜர் உருவமே கண்முன்னே காட்சி தரும். தமிழக அரசின் 'ஆண்டாள் கோயில் கோபுரமே' தமிழக அரசின் சின்னமாக முத்திரை பதித்து வருகிறது.  

3. பெயர் வந்த காரணம்

கி.பி 1700 ஆம் ஆண்டு, கோட்டைப்பட்டி, அய்யம்பட்டி, முத்துராமன்பட்டி எனச் சிறு சிறு கிராமங்களாக இப்பகுதி இருந்துவந்தது. அப்போது, வடக்கிலிருந்து இங்கு வந்த வீரன் ஒருவன், ஆயுதமின்றி தன்னை யாராவது வெற்றிகொண்டால், தான் பெற்ற விருதுகளையெல்லாம் தந்துவிடுகிறேன். மாறாக அவர் தோற்றுவிட்டால், தோற்றவர் தனக்கு அடிமையாக இருக்க வேண்டுமென சவால் விட்டான். சவாலை ஏற்ற  இப்பகுதி வீரன், அவனை வென்றான். தோற்றவீரன்,  தனக்குக் கிடைத்த விருதுகளையெல்லாம் இப்பகுதி வீரனுக்குக் கொடுத்தான். அன்று முதல் இப்பகுதி, விருதுவெட்டி என்றும் விருதுபட்டி என்றும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் இன்றளவும் விருதுநகர் என்றே அழைக்கப்படுகிறது.

4. பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பே விருதுநகர்

மத்திய கற்கால மனிதன், விலங்குகளை வேட்டையாடவும், உணவுப் பொருள்களைச் சேகரிக்கவும், மீன் பிடிக்கவும் பயன்படுத்திய கல் ஆயுதங்களான ஒருமுனை அறுப்பான், இருமுனை அறுப்பான், அம்புத் தலை வடிவம், பிறை வடிவம், வட்டவடிவம் போன்ற பல்வேறு வடிவிலான நுண்கற்கருவிகள் விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களில் கிடைத்துள்ளன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருதுநகரில் மனிதர்கள் வசித்திருக்கிறார்கள் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இவை எனத் தொல்லியல்  4. பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பே விருதுநகர் மத்திய கற்கால மனிதன், விலங்குகளை வேட்டையாடவும், உணவுப் பொருட்களைச் சேகரிக்கவும், மீன் பிடிக்கவும் பயன்படுத்திக் கல் ஆயுதங்களான ஒருமுனை அறுப்பான், இருமுனை அறுப்பான், அம்புத் தலை வடிவம், பிறை வடிவம், வட்டவடிவம் போன்ற பல்வேறு வடிவிலான நுண்கற் கருவிகள் விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களில் கிடைத்துள்ளன. இவை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருதுநகரில் மனிதர்கள் வசித்திருக்கிறார்கள் என்பதற்கான சாத்தியக் கூறுகள் என்கின்றனர் தொல்லியல் வல்லுநர்கள்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

5. காட்டாறு நாகரிகம்

விருதுநகர் மாவட்டத்தில் பாயக்கூடிய காட்டாறுகளான 'அர்ச்சுனா நதி, அனுமன் நதி, வைப்பாறு, கெளசிகா ஆறு, குண்டாறு' போன்ற ஆற்றுப்பகுதிகளில் தான் பழங்கால நுண்கற் கருவிகள் கிடைத்துள்ளன. ஆகையால், இந்த ஆற்றுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மக்கள் வசித்திருக்கின்றனர்.

இவை, எனத் தொல்லியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

5. சங்ககாலம்... பொற்காலம்

விருதுநகரில் ராஜபாளையம் அருகிலுள்ள சஞ்சீவிமலை அடிவாரத்திலும், ஆவியூர், மகாராஜபுரம், தேவதானம், சோழபுரம், ஈஞ்சார், இருக்கண்குடி, நென்மேனி, திருத்தங்கல் போன்ற ஊர்களில் முதுமக்கள் தாழிகளும், கறுப்பு சிவப்புப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை சங்ககாலமான தமிழ் இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்ததாக உள்ளன. இதனால், மேற்சொன்ன ஊர்களில் கி.மு 800-க்கு முன்பே பண்பாட்டோடு வாழ்ந்த மக்கள் இருந்துள்ளனர் என்கிறது தொல்லியல் துறை. 

6. ரோமானியர்களுடன் தொடர்பு

திருவில்லிபுத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள `நத்தம்பட்டி' என்ற சிற்றூரில், ஒன்பது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோமானியர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

7. பல மன்னர்கள் ஆட்சிசெய்த பூமி

விருதுநகர் பகுதிகளை சேரர், சோழர், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், பாளையக்காரர்கள் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை உறுதிசெய்கின்றன.

8. பதினான்கு நாடுகளை உள்ளடக்கிய விருதுநகர்

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இன்றைய விருதுநகர் மாவட்டம் 14 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கி.பி. 642 ஆம் ஆண்டு முதல் கி.பி. 985 ஆம் ஆண்டு வரை `புங்கநாடு' என்றும், சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, வைகை நதிக்கும் வைப்பாறு நதிக்கும் இடைப்பட்ட பகுதியை `மதுராந்தகவளநாடு' என்றும்,  பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் கெளசிகாநதிக்கும் அர்ச்சுனாநதிக்கும் இடையே உள்ள பகுதியை `செங்குடிநாடு' என்றும் அழைத்துள்ளனர்.
 
9. பாண்டியர்கள் முதல் நவாப் வரை

பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின், விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான நாயக்கர்களின் நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கிறது விருதுநகர் பகுதி. விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாறியது. 1736ஆம் ஆண்டு, நாயக்கர்களின் அதிகாரம் முடிவுக்கு வர, சந்தா சாகிப், ஆற்காடு நவாப் மற்றும் முகமது யூசுப்கான் ஆகியோரின் தாக்குதலுக்கு உள்ளானது.

10. சென்னை மாகாணத்தில் விருதுநகர்

1801ஆம் ஆண்டு விருதுநகர் பகுதி ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது விருதுநகர்.

11. விருதுபட்டி விருதுநகர் ஆன வரலாறு!

விருதுகள்வெட்டி என்ற பெயரை விருதுபட்டி என 1875ஆம் ஆண்டு மாற்றியுள்ளனர். 1923ஆம்ஆண்டு விருதுநகர் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

12. புதிய மாவட்டமாய் உதயம்

ராமநாதபுரம் பெரிய மாவட்டமாகவும், பெரிய நிலப்பரப்பையும் கொண்டதாக இருந்ததால், நிர்வாக வசதிக்காக 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது 1. ராமநாதபுரம் மாவட்டம் 2. விருதுநகர் மாவட்டம் 3. சிவகங்கை மாவட்டம்.

13. மாவட்டத்தின் பெயர் மாற்றம்

தமிழக அரசின் முடிவின்படி, 1997ஆம் ஆண்டு, மே 1 ஆம் தேதி முதல் காமராஜர் மாவட்டம் விருதுநகர் மாவட்டமாக அழைக்கப்படுகிறது.

14. விருதுபட்டியை கௌரவப்படுத்திய ரயில்வே

ரயில்வே துறையில், விருதுநகர் என்று தமிழில் எழுதப்பட்டாலும், ஆங்கிலத்தில் விருதுநகர் என்பதைக் குறிக்க VNR என்று எழுதுவதற்குப் பதிலாக, இன்றும்கூட, விருதுபட்டியைக் குறிக்கும் வகையில் VPT என்றே பதிவு செய்யப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

15. மாவட்டத்தின் எல்லைகள்

விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும் தெற்கில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களும், கிழக்கில் ராமநாதபுரம் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும் மற்றும் தேனி மாவட்டமும் உள்ளன. விருதுநகர் மாவட்டம், மதுரைக்குத் தென்மேற்கில் 45 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 512 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது விருதுநகர்.
 
16. நகராட்சியும் பேரூராட்சியும்

விருதுநகர் மாவட்டம் 600 வருவாய் கிராமங்களையும் 450 கிராம பஞ்சாயத்துகளையும் கொண்டது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் என ஏழு நகராட்சிகள் உள்ளன.

17. புதிய வருவாய் கோட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர்  என மூன்று வருவாய்கோட்டங்கள் உள்ளன.

18. ஒன்பது வட்டங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வெம்பக்கோட்டை என ஒன்பது வட்டங்கள்  உள்ளன.

19. எந்தத் தொகுதி நம்ம தொகுதி?

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் என  ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒரே ஒரு மக்களவைத் தொகுதியாக விருதுநகர் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிகள் மட்டும் தென்காசி மக்களவைத் தொகுதியோடு இணைந்துள்ளது.

20. மக்கள் தொகை

2011ஆம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விருதுநகர் மாவட்டத்தின் மக்கள்தொகை 19,43,309 பேர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 9,67,434 மற்றும் 9,75,872.

21. அடுத்தடுத்த இடங்கள்

மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 4,243 ச.கி.மீ. ஒரு சதுர கி.மீட்டர் தூரத்தில் 458 பேர் என்ற வகையில் மக்கள்தொகை பரவியுள்ளது. பெரிய பரப்பளவுகொண்ட மாவட்டங்களில் 16-வது இடத்திலும், மக்கள்தொகை அளவில் 17-வது இடத்திலும், மக்கள்தொகை அடர்த்தியில் 18-வது இடத்திலும் உள்ளது விருதுநகர்.

22. ஆண்களைவிட பெண்கள் அதிகம்

விருதுநகர் மாவட்டத்தில், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆண் - பெண் பாலின விகிதம் 1000-க்கு 1007 என உள்ளது.  இது 2001 ஆம் ஆண்டில்  1000 : 1012 என்ற விகிதத்தில் இருந்திருக்கிறது.

23. விருதுநகரின் காலநிலை

விருதுநகர் மாவட்டம், வறண்ட வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. சராசரி வெப்பநிலையாக 38.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகிவருகிறது.

24. சராசரி மழையைவிட குறைவு

வடகிழக்குப் பருவக்காற்றின்போது மழைப்பொழிவு பெற்றாலும், இதன் அமைவிடம் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், போதிய மழை இல்லை. இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 829.6 மி.மீ ஆகும். இது, மாநிலத்தின் சராசரி (1008 மி.மீட்டர்) மழை அளவை விட குறைவு.

25. மழை அதிகமானால் காட்டாறு

பருவமழைக் காலத்தில் அதிக மழை பொழிந்தால், அர்ச்சுனா ஆறு, குண்டாறு, வைப்பாறு மற்றும் கெளசிகா ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.  இவையே பல கிளைகளாகப் பிரிந்து ஓடைகளாகி், வளம் சேர்க்கின்றன.

26. கண்மாய்கள் நிறைந்த விருதுநகர்

பெரிய அளவில் ஆறும், மழையும் இல்லாவிட்டாலும் விருதுநகர் மாவட்டத்தைச் செழிப்பாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன கண்மாய்கள். இங்கு, 290 பெரிய கண்மாய்களும், 707 சிறிய கண்மாய்களும் ஏழு பெரிய நீர்த்தேக்கங்களும் உள்ளன.

27. விருதுநகர் சாலைகள்

விருதுநகரின் வழியாகப் பயணிக்கிறது தேசிய நெடுஞ்சாலை 7NH.  மதுரை-தூத்துக்குடியில் சாலை, அருப்புக்கோட்டை- வாலிநோக்கம் சாலை, இராஜபாளையம்- திருநெல்வேலி சாலை, திருவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலை, தென்காசி-மதுரை சாலை, பார்த்திபனூர் - அருப்புக்கோட்டை சாலை, பாளையம்கோட்டை- அருப்புக்கோட்டை சாலை, வத்திராயிருப்பு - விருதுநகர் சாலை, விருதுநகர் - கிருஷ்ணாபுரம் சாலை, விஸ்வநத்தம் – வேங்கடாசலபுரம் சாலை, ராஜபாளையம் - வேம்பக்கோட்டை சாலை, சாத்தூர் - கழுகுமலை சாலை என மாநில நெடுஞ்சாலைகள் விருதுநகர் மாவட்டத்தின் உள்கட்டமைப்புக்கு பலம் சேர்க்கின்றன.

 28. விருதுநகர் மலை வளம்

மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரின் சில பகுதிகள் விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ளன. இங்குள்ள பேய்மலை, மொட்டைமலை, கொட்ட மலை உள்ளிட்ட சில குன்றுகள் 1700 மீட்டர். உயரம் கொண்டவை. புகழ்பெற்ற ஆன்மிகத்தலமான சதுரகிரி மலை இங்குள்ளது.

29. விருதுநகர் வன வளம்!

விருதுநகர் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 6 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. இவ்வனங்களில் 275-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் வளர்ந்துவருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

30. நான்கு வகை நிலங்கள்

விருதுநகர் மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையை எல்லையாகக் கொண்டுள்ளதால், மலை சார்ந்த குறிஞ்சி நிலமாகவும், காடுகள் நிறைந்து காணப்படுவதால் முல்லை நிலமாகவும், நெல், கரும்பு, மிளகாய் போன்றவை பயிர் செய்வதற்கு ஏற்ற வயல்களைக் கொண்டுள்ளதால் மருதநிலமாகவும் விளங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற மூன்று நிலப்பகுதிகளும் கோடைக்காலத்தில் மழையின்மையால் திரிந்து, பாலைநிலமாக மாறுகிறது. கடல்சார்ந்த பகுதியான நெய்தல் நிலம் இல்லாததால், நான்கு வகை நிலப்பாகுபாடுகளை கொண்டதாக உள்ளது விருதுநகர் மாவட்டம்.

31. கரிசல் மண் நிறைந்த விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 1,39,061 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. அதாவது, மொத்த நிலப்பரப்பில் 37 சதவிகிதம் நிலம் விவசாய நிலமாக உள்ளது. உழைக்கும் மக்களில் சுமார் 52 சதவிகிதம் பேர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

32. வேளாண்மை சிறக்கும் பகுதிகள்

இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய வட்டங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இப்பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு உகந்த தட்பவெப்பம் நிலவுகிறது.  இங்கு, நெல், கரும்பு, வாழை பயிர்களும், மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் பருத்தி, சோளம், கம்பு பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

33. விருதுநகரின் நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என அழைக்கப்படுவது போல, விருதுநகர் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என வத்திராயிருப்பு - கூமாப்பட்டி பகுதி அழைக்கப்படுகின்றன.

34. மண்ணுக்கு ஏற்ற பயிர்கள்

விருதுநகர் மாவட்டம் சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் கரிசல் மண் நிறைந்த பூமியாக இருப்பதால் பருத்தி, வேர்க்கடலை, கரும்பு, எள், சூரியகாந்தி ஆகிய விளைபொருள்களைக் கொண்டு சிறந்த வணிகத்தலமாகத் திகழ்கிறது.

35. ஏற்றுமதி கேந்திரம்

விருதுநகரிலிருந்து இலங்கை, துபாய் போன்ற நாடுகளுக்கு சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருத்தி  பொருள், அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதைத்தவிர, நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

36. விருதுநகர் ரயில் நிலையம்

இங்கிருந்து ரயில்மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள ரயில் நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும், சரக்கு ஏற்ற தனி வசதியுடன்கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

37. முதன்முதலில் பருப்புத்தொழில்

விருதுநகரில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தொழில் பருப்புத் தயாரிக்கும் தொழில். இங்கு 1957 ஆம் ஆண்டு முதல் பருப்புத்தொழில் நடைபெற்று வருகிறது. வீடுகளில் திறுகைகள் கொண்டு தயாரிக்கப்படும் பருப்புகள், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

38. இலங்கை பொருள்களுக்கான வணிக மையம்

இலங்கையிலிருந்து பாக்கு, மிளகாய், கடலை எண்ணெய், ஏலக்காய், வெல்லம், நவதானியம், சிக்கரி, மிளகு போன்ற விளைபொருள்களுக்கும் விருதுநகரே வணிக மையமாக விளங்குகிறது.

39. இங்கிலாந்துக்குப் பறக்கும் பஞ்சு

விருதுநகரின் முக்கிய வணிகப்பொருளாகப் பஞ்சு.  விருதுநகரில் கொள்முதல்செய்யப்படும் பருத்தி  இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் மகாராஷ்ரா மாநிலத்தின் தலைநகரான மும்பைக்கும், மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

40. விருதுநகர் என்றாலே வியாபாரம்

விருதுநகர் வியாபாரிகள், நுகர்பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியப்  பங்கு வகிக்கின்றனர். அனைத்து உணவுப்பொருள்களும், காபி, ஏலக்காய் போன்ற நறுமணப்பொருள்களும், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வாங்கி, தரம் பிரித்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புகின்றனர்.     

41. மிளகாய் வத்தல் வியாபாரத்தில் முதலிடம்

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து இறக்குமதி செய்து மிளகாய் வற்றலை வியாபாரம் செய்துவருகின்றனர் விருதுநகர் வியாபாரிகள். இவர்கள், `மிளகாய்வத்தல் வியாபாரிகள் சங்க கல்யாண மண்டபம்' என்ற பெயரில் மண்டபமே கட்டியுள்ளனர்.

42. எண்ணெய் ஆலைகள்

`இதயம்' போன்ற பிரபலமான எண்ணெய் வகைகள் விருதுநகரில் தயாரிக்கப்படுகின்றன. உணவு எண்ணெய் ஆலைகள் மற்றும் இதர எண்ணெய்களை அடைத்துவைக்கும் டின் தொழிற்சாலைகள் விருதுநகரில் ஏராளமாக உள்ளன.

43. விற்பனை வரி தோன்றிய வரலாறு

விருதுநகரில் விற்பனையாகும் ஒவ்வொரு மூட்டைக்கும் 5 காசு வீதம் 'மகமை' வசூலித்து, அந்த மகமை நிதியை கல்வி நிறுவனங்களின் செலவுக்கும், பொதுக் காரியங்களின் செலவுக்கும் வியாபாரிகள் பயன்படுத்தினார். விருதுநகர் வந்திருந்த, அப்போதைய முதல்வர் ராஜாஜி இதைப் பார்த்தார். தமிழகத்தில் உள்ள வியாபாரிகள், விற்கும் பொருள்களுக்கு குறிப்பிட்ட காசு வரிவிதித்தால், அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்று எண்ணியே, விற்பனை வரி என்பதை அமல்படுத்தினார்.
 
நகரங்களும் முக்கிய ஊர்களும்

44. முக்கியத் தொழில்

விருதுநகர் மாவட்டத்தின் மற்றொரு முக்கியத் தொழில் விவசாயமாக இருந்தபோதிலும், பட்டாசு, தீப்பெட்டி, பிரின்டிங், ஸ்பின்னிங் மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களும் மாற்றுத் தொழில்களாகத் திகழ்கின்றன.

45. குட்டி ஜப்பான் - சிவகாசி

`குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் சிவகாசி, இந்தியத் தொழில் நகரங்களின் வரிசையில், முன்னணி இடத்தில் உள்ள நகரமாகும். இது, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வருவாயைப் பெற்றுத்தருகிறது. சிவகாசி, சாத்தூரிலிருந்தும், திருவில்லிபுத்தூரிலிருந்தும் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. 

46. சிவகாசிப் பட்டாசு

சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு வாழும் பல லட்சம் பேர் பட்டாசுத் தொழில்மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். சிவகாசியில் சுமார் 900 பட்டாசுத்தொழிற்சாலைகள் உள்ளன.

47. சிவகாசி தீப்பெட்டி

பட்டாசுத் தொழிலுக்கு அடுத்து சிவகாசி மக்களின் முக்கியத் தொழிலாகத் தீப்பெட்டி செய்யும் தொழில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் குடிசைத்தொழிலாக, பல்லாயிரக்கணக்கான பேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது தீப்பெட்டித் தொழில். 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன.

48. சிவகாசி அச்சகங்கள்

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறக்குறைய 500 அச்சகங்கள் செயல்படுகின்றன. இந்த அச்சகங்களில் பாடப்புத்தகங்கள், சினிமா போஸ்டர்கள், அட்டைப்பெட்டிகள் தயாரித்து அச்சிடுதல், சோப்பு, உணவுப்பொருள்கள் போன்றவற்றை உள்ளடக்கிய உறைகள் லட்சக்கணக்கில் அச்சடிக்கப்படுகின்றன. இவை, தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றன.

49. காலண்டர் தொழிற்சாலை

வண்ணமயமான பல்வேறு வடிவங்களில் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் மற்றும் டைரிகள் தயாராவது சிவகாசியின் மற்றுமொரு சிறப்பு. மத்திய அரசின் தேசிய விருதுபெற்ற கற்பகா காலண்டர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற காலண்டர் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. ஒவ்வோர் ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து காலண்டர், டைரிகள் தயாரிப்பது வேகமெடுக்கின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

50. வேலைக்கு ஆட்கள் தேவை

1970-80 வருடங்களில், தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், சிவகாசியில் மட்டும், `வேலைக்கு ஆட்கள் தேவை' என்று அனைவரையும் ஈர்க்கும் விளம்பர போர்டை, வீதி தோறும் உள்ள நிறுவனங்களில் காண முடிந்தது. மறைந்த முன்னாள் பாரத பிரதமர் நேரு, சிவகாசியை `சோட்டா ஜப்பான்' என்று அழைத்தார்.

51. சிவகாசியின் தந்தை

கொல்கத்தாவில் தீப்பெட்டி தயாரிப்புப் பயிற்சி கொடுப்பதாக ஒரு பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, அய்ய நாடாரும் அவரது சகோதரர் சண்முக நாடாரும், கொல்கத்தா சென்று பயிற்சி எடுத்து, ஜெர்மன் இயந்திரத்தை வைத்து 1923- ல் சிவகாசியில் தீப்பெட்டி தயாரித்தலைத் தொடங்கினார்கள். பின்னர், அதிகமான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், அந்த இயந்திரத்தை விற்றுவிட்டு, கைகளினால் தீப்பெட்டி தயாரிக்கும் முறையை உருவாக்கி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தினார்கள். அய்ய நாடாரும் சண்முக நாடாரும் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலின் பிதாமகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

52. இந்தியா முழுவதும் பரவிய தீப்பெட்டி

தீப்பெட்டி தயாரிக்கும் முறை சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரவியது. நாட்டின் தேவையில், 70 சதவிகிதத்துக்கு மேல் சிவகாசியில் தயாராகும் தீப்பெட்டிகள், பூர்த்திசெய்து வைக்கின்றன. சிவகாசி பகுதியில், விவசாயத் தொழில்கள் நலிவுற்றபோதும், இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில்கள் முன்னணியில் உள்ளன.

53. இரண்டு சிமென்ட் ஆலைகள்

சுண்ணாம்புத் தாது நிறைந்திருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு சிமென்ட் ஆலைகள் செயல்படுகின்றன. சிவகாசி வட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில், அரசு பொதுத்துறை நிறுவனமான `தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன்' தொழிற்சாலையும், துலுக்கபட்டியில் ராம்கோ குழுமத்திற்குச் சொந்தமான சிமென்ட் தொழிற்சாலையும் உள்ளன. 

54. திருத்தங்கல் நகரம்

விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ளது திருத்தங்கல். சிவகாசியையும், திருத்தங்கலையும் `இரட்டை நகரங்கள்' என்றே அழைக்கலாம். பல வெளியூர்காரர்கள், தங்களது ஊரிலிருந்து இடம் பெயர்ந்து, வேலை நிமித்தமாக சிவகாசி மற்றும் திருத்தங்கல்லில் வசித்துவருகின்றனர்.

55. திருத்தங்கல் பெயர் காரணம்

திருத்தங்கலின் வடகிழக்கில் சுமார் 100 அடி உயரமுள்ள குன்று காணப்படுகிறது. திருப்பதி நாராயணர் திருவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாளின் திருமணத்திற்காக வரும் வழியில் இப்பாறையில் தங்கியிருந்து, பின்னர் திருவில்லிபுத்தூர் சென்றதால் இவ்வூர், 'திருத்தங்கல்' என்று பெயர் பெற்றது.தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் திருத்தங்கல்லுக்கு வந்ததற்கான அடையாளமாக, கல்வெட்டுப் பதிவு  புகழ்பெற்ற நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.

56. சங்க காலப் புலவர்கள் வசித்த நகர்

தொன்மைமிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனப்படும் தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம்பெற்ற புலவர்களில் முடக்கூரனார், போர்க்கோலன், வெண்ணாகனார் மற்றும் ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் திருத்தங்கலில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

 57. சாத்தூர்

திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது சாத்தூர். கி.பி. 825ஆம் ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூர், `இருஞ்சோழ நாட்டுச் சாத்தனூர்' என்று குறிப்பிட்டுள்ளனர். இவற்றுள் வரலாற்றுச் சிறப்புடைய வெங்கடாசலபதி கோயிலும், சிவன் கோயிலும் முக்கிய இடம் பெறுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

58. எழுதுகோலின் ஊர்

பேனாக்களின் உயிர்நாடியான 'நிப்பு' (NIB)  தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் சாத்தூர். மை ஊற்றி எழுதும் ்பேனாவின் நிப்புகள் சாத்தூரில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. சாத்தூர் பகுதியில் 120 நிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டுவந்த நிலையில், 1980- க்குப் பின்னர், பால்பாயின்ட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நிப்பு தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

59. சாத்தூர் வெள்ளரிக்காய்

சாத்தூர் பகுதியின் கரிசல்மண் வெள்ளரிக்காய் விளைவதற்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விளையும் வெள்ளரிக்காய்கள் அதிக அளவு சாத்தூரில்தான் விளைகின்றன.

60. ஊமைத்துரைக்கு அடைக்கலம்

சாத்தூரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கோல்வார்பட்டி. இவ்வூரில் ஜமீனாக இருந்தவர் கண்டப்பர். இவர், கி.பி.1799 ஆம் ஆண்டு நடந்த பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி வந்த ஊமைத்துரைக்கும், வெள்ளையம்மாளுக்கும் அடைக்கலம் கொடுத்து ஆங்கிலேயரிடமிருந்து காப்பாற்றினார். இவ்விவரம் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன், கண்டப்பரிடமிருந்து ஜமீன் பதவி பறிக்கப்பட்டது. இங்குள்ள மீனாட்சியம்மன் கோயிலில், கண்டப்பருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

61. `இராஜுக்கள் பாளையம்'

ஆந்திராவில், விஜயநகரப் பேரரசு ஆட்சி நடந்த காலத்தில், படைவீரர்களாக இருந்தவர்கள் இராஜுக்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள், விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், நீர் நிறைந்த பகுதியில் குடியேறினர். இராஜுக்கள் குடியேறிய இப்பகுதி இராஜுக்கள்பாளையம் தற்போது இராஜபாளையம் என அழைக்கப்படுகிறது.

62. தொழில்வளம் நிறைந்த இராஜபாளையம்

நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள், மரைஆணி செய்யும் தொழிற்சாலை, அறுவைசிகிச்சைக்குப் பயன்படும் பருத்தி, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், கழிவுப் பருத்தி ஆலை, மின்சாதனப் பொருள்கள், மிதிவண்டி உதிரிப் பாகங்கள், கரும்பு பிழியும் உருளைகள், மரம் அறுக்கும் பட்டறைகள், மின்மோட்டார் போன்ற தொழிற்சாலைகள் உள்ள தொழில் வளம் நிறைந்த தொழில்துறை நகரம் ஆகும்.

63. சஞ்சீவி மலை புராதன வரலாறு

இராஜபாளையத்தின் கிழக்குப் பகுதியில் `சஞ்சீவி' என்றழைக்கப்படும் மலை உள்ளது. சீதா பிராட்டியை மீட்பதற்காக, ராவணனுடன் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, மூர்ச்சையாகிக் கிடந்த லட்சுமணனைக் காப்பாற்ற மூலிகைச்செடி வேண்டும் என்பதற்காக, அனுமன் ஒரு மலையை பெயர்த்தெடுத்துச் சென்றபோது, அதிலிருந்து சிதறிவிழுந்த சிறிய துண்டுப் பகுதிதான் இந்த சஞ்சீவி மலை என்பது ஐதீகம்.

64. வாழ்வாதாரமாகப் பஞ்சாலைகள்

இராஜபாளையம் பகுதியில் விளையும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு 'இராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்' என்ற பெயரில் பஞ்சாலையை ஏற்படுத்தினார் பி.ஏ.சி. ராமசாமி ராஜா. தற்போது விருதுநகர் மாவட்டத்திலேயே, இராஜபாளையத்தில் தான் அதிக பஞ்சாலைகள் உள்ளன. இப்பகுதி மக்களின் பெரும் வாழ்வாதாரமாகப் பஞ்சாலைகள் உள்ளன.

65. பேண்டேஜ் ஆலைகள்

இராஜபாளையத்திற்கு அருகில் உள்ள சத்திரப்பட்டியில், காயத்துக்குக் கட்டுப்போடப் பயன்படுத்தப்படும் பேண்டேஜ் துணிகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இவை, இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன.

66. காவலுக்குக் கெட்டிக்காரன்

ஆந்திராவிலிருந்து, தமிழ்நாட்டில் இராஜுக்கள் குடியேறியபோது கொண்டுவரப்பட்டதுதான் இராஜபாளையம் நாய். இராஜபாளையம் நாய் கம்பீரமான தோற்றம் கொண்டது. எவ்வளவு சாப்பிட்டாலும், ஒல்லியாக மார்பு எலும்புகள் வெளியே தெரியும் வண்ணம்தான் இருக்கும். சுத்தமான வெள்ளைநிறம் கொண்ட இந்நாய், 4 அடி உயரமும், 4 அடி நீளமும் கொண்டதாக இருக்கும்.

67. இராஜபாளையம் மாம்பழம்

இராஜபாளையம் பகுதியில் மட்டுமே விளையும் 'சப்பட்டை' என்ற ரகத்தைச் சேர்ந்த மாம்பழம் புகழ்பெற்றது. காயுமல்லாத, கனியுமல்லாத, இரண்டும் கலந்த சப்பட்டை ரக மாம்பழத்தை (உதைப்பழம் என்பார்கள்) சாப்பிடும்போது, அலாதி ருசியை அறிய முடியும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

68. வீட்டுக்கொரு ராணுவ வீரன்

திருவில்லிபுத்தூரிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெருமாள்தேவன்பட்டி கிராமம். இக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ராணுவ வீரர் என்ற அளவுக்கு, அதிகமான ராணுவ வீரர்கள் கொண்ட ஊராக இக்கிராமம் விளங்குகிறது.

69. அரும்புகள் நிறைந்த கோட்டை

விருதுநகரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அருப்புக்கோட்டை. மல்லிகைப் பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டதால் அரும்புக்கோட்டை எனவும், நெற்பயிர்கள் அதிகம் விளைந்ததாலும், நெசவாளர்கள் சேலைகள் நெய்து அறுத்து விற்பனை செய்ததாலும் அறுப்புக்கோட்டை, அறுப்பார்கோட்டை என்றும் அழைத்துள்ளனர். பின்னர், அருப்புக்கோட்டை என்று பெயர் மாறியுள்ளது. நாயக்க மன்னனால் கட்டப்பட்ட கோட்டை இன்றும் இடிந்த நிலையில் இங்கு காணப்படுகிறது. 

70. நெசவுத்தொழில் நிறைந்த அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் நூலிழைகள் தயாரிக்கும் நூற்பாலைகளும், நூலிழைகளுக்குச் சாயம் தோய்க்கும் ஆலைகளும் தனித்தனியாக நிறுவப்பட்டு இயங்குகின்றன. நெசவாளர்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு, பருத்தி மற்றும் பட்டுப் புடவைகள் கைத்தறி மூலமாகவும், துண்டுகள், லுங்கிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் விசைத்தறி மூலமாகவும் நெய்யப்படுகின்றன.

71. ஜெயவிலாஸ் பஞ்சாலையும் டிவிஎஸ் நிறுவனமும்

அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஜெயவிலாஸ் குழுமத்துக்குச் சொந்தமான பல பஞ்சாலைகள் மூலம் இப்பகுதி மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். காரியாபட்டி வட்டத்தில் அமைந்துள்ள TVS நிறுவனம் மூலமும், பலர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

72. ஆவியூர்

அருப்புக்கோட்டை மதுரைச் சாலையில் காரியாபட்டி வட்டத்தில் அமைந்துள்ளது ஆவியூர்.  இவ்வூரில் முதலாம் இராசேந்திரன் பெயரில் `இராசேந்திர சோழீசுவரமுடைய நாயனார்' என்ற பெயரில் சிவன் கோயில் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இங்கு, அதிகளவில் வணிகம் நடந்திருக்கிறது.

73. மருது சகோதரர்கள் பிறந்த மண்

அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியிலிருந்து (காத்தயாபட்டி என்பது பழைய பெயர்) 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிராமம் அ.முக்குளம். சாகாவரம் பெற்ற மருது சகோதரர்கள் பிறந்த இடம். மருது சகோதரர்களின் பெற்றோர், உடையார் சேர்வை என்ற மொக்கப் பழனியப்பன் சேர்வை - ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள்.

74. கொடைத்தன்மை மிக்க மருது சகோதரர்கள்

வீரத்தில் மட்டுமன்றி, மக்களைப் பாதுகாப்பதிலும், கொடைத் தன்மையிலும் சிறந்து விளங்கினர் மருது சகோதரர்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, ஆவியூர் என்ற கிராமத்தை மானியமாக அளித்தனர். குன்றக்குடி மலைமேல் கோயில் கட்டினர். அதன் தெற்கில் மருதபுரி என்ற அழகிய குளத்தையும், அதன் கரையில் ஆயிரம் தென்னை மரங்களையும் நட்டனர். காளையார் கோயிலில் மூன்று சந்நிதிகள் கொண்ட கோயிலைக் கட்டினர்.

75. சமூக நல்லிணக்கம்

சருகாணி என்ற இடத்தில் ஒரு மாதா கோயிலையும், நரிக்குடி என்ற இடத்தில் ஒரு மசூதியையும் கட்டினர் மருது சகோதரர்கள். சமூக நல்லிணக்கத்துக்குப் பாடுபட்ட மருதுபாண்டியர்களுக்கு, மக்கள், தங்கள் மனங்களில் கோயில் கட்டினர்.

 76. திருவில்லிபுத்தூர் பெயர்க்காரணம்

இராஜபாளையம் மதுரைச் சாலையில் இராஜபாளையத்திலிருந்து10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவில்லிபுத்தூர். வில்லிபுத்தூர் என்று முன்பு அழைக்கப்பட்ட இப்பகுதி, ஒரு காலத்தில் செண்பகக் காடாக இருந்தது. வராகஷேத்திரம் என்ற இப்பகுதியில் வேடுவ அரசர்களான வில்லி, கண்டன் (சகோதரர்கள்) வேட்டைக்குச் சென்ற இடத்தில், இளையவனான கண்டனை புலி கொன்றுவிடுகிறது. இதனால் மிகவும் துயரமடைந்த வில்லியின் கனவில், பரந்தாமன் தோன்றி, தான் இங்கு எப்போதும் பள்ளி கொண்ட சேவையுடன் இருப்பதாகக் காட்சியளித்தார். வில்லி, இப்பகுதியில் ஊரை உருவாக்கினார். வில்லிபுத்தூர் என உருவாக்கி நாளடைவில் திருவில்லிபுத்தூர் ஆனது. 

77. ஆண்டாள் அவதரித்த பூமி

`சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்' என்றும் `கோதை நாச்சியார்' என்றும் வழங்கப்படும் ஆண்டாள் அவதரித்த பூமி திருவில்லிப்புத்தூர். ஆண்டாள் கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். இதில் பெண் ஆழ்வார் ஆண்டாள் மட்டுமே. ஆண்டாளை வளர்த்தவரும், ஆழ்வார்களில் ஒருவருமான பெரியாழ்வார், பிறந்து, சிறப்பு சேர்த்த ஊரும் திருவில்லிபுத்தூர்.

78. திருப்பாவையும், திருமொழியும்

ஆண்டாள் அருளிய நூல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி. திருப்பாவை 30 பாடல்களையும், நாச்சியார் திருமொழி 143 பாடல்களையும் கொண்டது. பெரியாழ்வார் எழுதிய நூல் திருப்பல்லாண்டு. இது, 12 பாடல்களைக் கொண்டது. ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பிற்கு நாலாயிர திவ்விய பிரபந்தம் என்று பெயர். இதைத் தொகுத்தவர் நாதமுனி, நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், திருப்பாவை மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டுள்ளது.

79. ஆண்டாள் கோயில் கோபுரம்

தமிழ்நாடு அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 12 அடுக்குகளைக் கொண்டு 192 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் பிரமாண்டமான ராஜகோபுரம் தமிழ்நாட்டின் அடையாளம்.

80. இரண்டாவது மிகப்பெரிய தேர்

ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான 'ஆடிப்பூரத்தில்' இத்திருக்கோயிலைச் சேர்ந்த தேரை, நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வடம்பிடித்து, பல்லாயிரக்கணக்கானோர் சூழ இழுத்து வருகின்றனர்.ஆண்டாள் கோயில் தேரானது, தமிழகத்தின் மிகப்பெரிய தேரான திருவாரூர் தேருக்கு அடுத்த, இரண்டாவது பெரிய தேராகும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

81. மடவார் வளாகம்

திருவில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் வளாகம் என்றழைக்கப்படுகிறது இப்பகுதியில், ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால், மடவார் (பெண்கள்) வளாகம் என வழங்கப்படுகிறது, இங்குள்ள வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்மாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இங்கு புகழ்பெற்ற சிவன்கோயில் ஒன்றுள்ளது. இக்கோயில் இறைவன் `வைத்திய நாத சுவாமி' என்றும் `படிக்காசு வைத்தருளிய நாயனார்' என்றும் அழைக்கப்படுகிறார்.

82. தென் திருப்பதி

திருவில்லிப்புத்தூரிலிருந்து மூன்றாவது கிலோமீட்டரில், திருவண்ணாமலையின் மீது அமைந்துள்ள வேங்கடாசலபதி கோயில் 'தென் திருப்பதி' என்றழைக்கப்படுகிறது. தென்திருப்பதியில் உள்ள பெருமாளை வழிபட, ஒவ்வோர் ஆண்டும், புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிக அளவில் கூடி வழிபடுகின்றனர்.

83. இருகங்கை குடி... இருக்கண் குடி

மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வரும் அர்ச்சுனா ஆறும் வாசுதேவநல்லூர் பகுதியிலிருந்து வரும் வைப்பாறும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இருக்கண்குடி. இரு ஆறுகள் இணையும் இடத்தில் இருப்பதால், இது `இருகங்கை குடி' என வழங்கப்பட்டு, நாளடைவில் `இருக்கண் குடியாக' மாறியது. இருக்கண்குடிக்கு `இலுப்பைக் குடி' என்ற பெயரும் உண்டு.

84. இருக்கண்குடி மாரியம்மன் கோயில்


தென் மாவட்டங்களில், சிறப்புக்குரிய மாரியம்மன் கோயிலாகக் கருதப்படுவது, இருக்கண்குடி மாரியம்மன் கோயில். ஆடி மற்றும் தை மாதங்களில் பக்தர்கள் இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகை புரிவர். இங்கு 21 நாள்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையானது.

85. திருச்சுழி

தீர்த்தம், மூர்த்தி, தலம் என மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் தலம், திருச்சுழி. அருப்புக்கோட்டையில் இருந்து கிழக்கே 12 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருச்சுழி. `பக்திக்குத் திருவண்ணாமலை; முக்திக்கு திருச்சுழி' என, திருச்சுழியின் முக்கியத்துவத்தை இப்பகுதி மக்கள் உணர்த்துகிறார்கள்.

86.  திருமேனிநாதஸ்வாமி கோயில்

திருவில்லிபுத்தூரிலிருந்து பார்த்திபனூர் செல்லும் நெடுஞ்சாலையில், திருச்சுழியில் அமைந்துள்ள பூமிநாதர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது, குண்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுப் பதினான்கு சிவத் தலங்களில் பத்தாவது தலம் இது. இக்கோயிலில், 8 வகை லிங்கங்களும் 9 வகை தீர்த்தங்களும் உள்ளன.

87. ரமண மகரிஷி பிறந்த திருச்சுழி

பகவான் ஸ்ரீரமண மகரிஷி திருச்சுழியில் 30.12.1879 -ல் பிறந்தார். இவரது வீடு, திருமேனிநாதர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ரமண மகரிஷியின் பெற்றோர் சுந்தரம் அய்யர் - அழகம்மாள் ஆவர். இவர், 1896-ஆம் ஆண்டு, செப்டம்பரில் துறவு வாழ்க்கையைத்  தொடங்கிய ரமணர், திருவண்ணாமலையில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

88. இருஞ்சிறை

திருச்சுழி மானாமதுரை சாலையில் நரிக்குடி அருகில் உள்ளது இருஞ்சிறை. பாண்டிய மன்னன் மேகத்தை இவ்வூரில் சிறை வைத்திருந்ததால் 'இருஞ்சிறை' என இவ்வூர் பெயர் பெற்றது என்கின்றனர். பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது.

89. ஈஞ்சார்

திருவில்லிபுத்தூர் சிவகாசி நெடுஞ்சாலையில் 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஈஞ்சார். கல்வெட்டுகளில் இவ்வூர் `மல்லிநாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வூரிலுள்ள வயல் பரப்புகளில் ஏராளமான கறுப்பு சிவப்புப் பானை ஓடுகளும், முதுமக்கள் தாழிகளின் விளிம்புப் பகுதிகளும் ஓடுகளும் சிதறிக் கிடக்கின்றன. இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு நாகரிக மேம்பாட்டுடன் வாழ்ந்த மக்கள்  விட்டுச் சென்ற தடையங்களாகும்.

90. எதிர்க்கோட்டை

சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் சாயல்குடி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது எதிர்க்கோட்டை. கல்வெட்டுகளில் இவ்வூர் 'வெண்மைக்குடி நாட்டுக் கூத்தன்குடி' என்றும், 'கூத்தன்குடியான உதைய மார்த்தாண்ட புரம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியில் இயற்கையாய் அமைந்த சுனை ஒன்று உற்பத்தியாகி வருவதால் இப்பகுதி 'சுனைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. 

91. ஏழாயிரம் பண்ணை

சாத்தூரிலிருந்து 13 கி.மீட்டர் தென்மேற்கில், சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது ஏழாயிரம் பண்ணை.  இது ஒரு ஜமீன் கிராமமாகும். இவ்வூரில் சமணமதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரவியிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

92. கம்பிக்குடி

காரியாபட்டியிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கம்பிக்குடி. இங்கு, பழைமைக்குச் சான்றாக,  பாழடைந்து நிலையில் உள்ள பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிவன், விஷ்ணு கோயில்கள்  உள்ளன.

93. கல்குறிச்சி

அருப்புக்கோட்டை மதுரை சாலையில் காரியாபட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கல்குறிச்சி. இங்குள்ள சிவன் கோயில் மூலம் இவ்வூரின் பழைமை அறிந்துகொள்ளலாம்.

94. கல்லுமடை

திருச்சுழி வட்டத்தில் நரிக்குடி திருப்புவனம் சாலையில் அமைந்துள்ளது கல்லுமடை.  இவ்வூரின் பழம்பெயர் திருப்பழையூர். இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புடன் விளங்கியதை கல்வெட்டுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
 
95. குண்டலக்குத்தூர்

இருக்கண்குடி-கோட்டூர் சாலையில் சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது குண்டலக்குத்தூர். கல்வெட்டுகளில் இவ்வூர், கூடற்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

96. குறண்டி

காரியாபட்டிக்கு அருகில் அமைந்துள்ளது குறண்டி.  இவ்வூர்க் கல்வெட்டுகளில் 'வெண்பு நாட்டுக் குறண்டி' என அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுக்கு முன்பு இங்கு சமணப் பள்ளி சிறப்புடனும், வளத்துடனும், வலிமையுடனும் விளங்கி இருக்கிறது.

97. குலசேகரநல்லூர்

சாத்தூர் வட்டத்தில் சாத்தூருக்கு வடகிழக்கில் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில்  அமைந்துள்ளது குலசேகரநல்லூர். இங்கு  பழைமையான சிவன்கோயில், பூமலர்ந்த அம்மன் கோயில், முனிசாமி கோயில் அமைந்துள்ளன.

98. கொல்லங்கொண்டான்

இராஜபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது கொல்லங்கொண்டான் கிராமம்.  மாறவர்மன் குலசேகரன் கொல்லத்தை வென்ற பிறகு அந்த வெற்றியைக்கொண்டாடும் வகையில் பல ஊருக்கு 'கொல்லங்கொண்டான்' என்று ஊருக்குப் பெயர் சூட்டியுள்ளனர். அதில் இந்த ஊரும் ஒன்றாகும். இங்குள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், மற்றும் இங்கு கிடைத்துள்ள தொல்பொருள்கள் இவ்வூரின் பழைமைக்குச் சான்றாய் விளங்குகின்றன.

99. கொல்லம்பட்டி

சாத்தூருக்கு தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொல்லம்பட்டி. கொல்லன் ஒருவன் முறைப்படுத்தி உருவாக்கிய ஊராதலால் கொல்லர்பட்டி என அழைக்கப்பட்டது. இவ்வூர் ஒரு சமீனின் தலைமை இடமாக விளங்கி இருக்கிறது. சித்திரை மாதப் பெளர்ணமியன்று உற்சவம் சாத்தூரில் நடக்கும். இதற்கான சப்பரங்கள் கொல்லப்பட்டிலிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இதனை அழகுப்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள். இச்செயல்பாடுகள் மதநல்லிணக்கத்திற்குச் எடுத்துக்காட்டாக உள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

100. கோட்டையூர்

சாத்தூரிலிருந்து வடகிழக்கில் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோட்டையூர்.  இது தற்போது கோட்டூர் என அழைக்கப்படுகிறது. இங்கு நாயக்கர் காலக் கோட்டை இருந்ததற்கான எச்சங்கள் காணப்படுகின்றன. குருநாதசுவாமி என்ற யோகி ஒருவர் இவ்வூரில் வாழ்ந்து முக்தி பெற்றுள்ளார். இவரது வீடு தற்போது வழிபாட்டிற்குரிய இடமாக மாறியுள்ளது.

101. கோவிந்தநல்லூர்

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் கோட்டையூர் பகுதியில் கரிசல் குளம் அருகில் அமைந்துள்ளது கோவிந்த நல்லூர். இவ்வூரின் குளக்கரையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது.

102. கோவிலான்குளம்

அருப்புக்கோட்டை மதுரை சாலையில் பாலையம்பட்டி அருகில் அமைந்துள்ளது கோவிலான் குளம். இவ்வூருக்குக் `கும்பனூர்' என்ற பழைய பெயர் இருந்துள்ளது. இவ்வூரிலுள்ள சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இவ்ஊரின் பழைமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. தற்போதுள்ள சிவன் கோயில், பழங்காலத்தில் சமணக் கோயிலாக விளங்கியிருக்க வேண்டும் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.

103. சத்திரப்பட்டி

கி.பி. 1627- 1658 ஆண்டுகளில் சாத்தூர் ஜமீனாக இருந்த ஷாஜகானின் ஆட்சி பொறுப்பிலிருந்த அதிகாரி, சாத்தூரில் ஒரு சத்திரம் ஒன்றை நிறுவி,  சத்திரத்தின் நிருவாகத்தைச் செவ்வனே நடத்துவதற்காக ஒரு சிற்றூரையே தானமாக அளித்தான். அச்சிற்றூர் 'சத்திரப்பட்டி'.

104. சிறுகுளம்

சாத்தூர் வட்டத்தில் நென்மேனி உள்வட்டத்தில் கோட்டூர் இருக்கண்குடிச் சாலையில் அமைந்துள்ளது சிறுகுளம். இவ்வூர், பண்டைய காலங்களில் ஆலங்குடி என்று அழைக்கப்பட்டது.

105. செங்குன்றாபுரம்

விருதுநகர் எரிச்சநத்தம் சாலையில் அமைந்துள்ளது செங்குன்றாபுரம். இவ்வூர், வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது. இவ்வூரிலுள்ள கைலாசநாதர் கோயில், விண்ணகரப் பெருமாள் கோயில், எல்லையம்மன் கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஆகியவை பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

106. செட்டிக்குறிச்சி

அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் அமைந்துள்ளது செட்டிக்குறிச்சி. இவ்வூருக்கு, `நல்லூர்', தென்துவழிபதி, நாகப்பட்டினம் என்ற பெயர்கள் இருந்துள்ளன. இவ்வூரில் பழைமையான சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும், உய்ய வந்த அம்மன் கோயிலும் சிறப்புற்று விளங்குகின்றன. 

107. செவ்வல்பட்டி

சிவகாசியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவில்  சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது செவ்வல்பட்டி. இவ்வூரின் நிலம் சிவப்பு நிறமாக உள்ளமையால், செவ்வல்பட்டி என்று பெயர் பெற்றுள்ளது.  இவ்வூர், ஒரு ஜமீன் கிராமமாகும். இது, ஏழாயிரம் பண்ணைப் பாளையத்தின் ஒரு பகுதியாகும்.  இவ்வூரில் பல குடும்பத்தினர் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். கனமான வெள்ளைக் காகிதத் துணிகள் இங்கு நெய்யப்படுகின்றன.

108. சேத்தூர்

இராஜபாளையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ளது சேத்தூர். சேதுபதியின் கிராமம் என்பதால், சேத்தூர் எனப் பெயர் பெற்றது என்றும், களிமண் நிலமாய் விளங்கியதால், சேற்றூர் எனப் பெயர் பெற்று, பின்னர் சேத்தூர் ஆனது என்பர். இங்கு தேவியாறு, நகரி ஆறு, கோறையாறு, புறவடியாறு, மணமாக்கியாறு என ஐந்து ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி, இவ்வூர் வழியே ஓடுகின்றன. இதனால், இவ்வூர் செழிப்புற்று விளங்குகிறது.

109. சோழபுரம்

திருவில்லிபுத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருவில்லிபுத்தூர் திருநெல்வேலி சாலையில் இராஜபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது சோழபுரம். இவ்வூரின் பழைமைக்குச் சான்றாக சிவன், பெருமாள் கோயில்களும் மற்றும் இங்கு கிடைத்துள்ள தொல்பொருள்களும் சான்றாக உள்ளன. இவ்வூரின் தொன்மைக்குச் சான்றாக, இங்கு ஓடும் தேவியாற்றின் கரையில் இன்றளவும் நுண்கற்கருவிகள் காணப்படுகின்றன.

110. திருவண்ணாமலை

திருவில்லிபுத்தூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இதன் வடக்கிலுள்ள மலைப்பாறையில் ஒரு விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. தொடக்க காலத்தில் இவ்வூர் `திருமலை' என்று அழைக்கப்பட்டு, பின்னர் திருவண்ணாமலை எனப் பெயர் பெற்றது. மக்களால் தென் திருப்பதி என்றழைக்கப்படுகிறது இக்கோயில். நாயக்கர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

111. தேவதானம்

மதுரை செங்கோட்டைச் சாலையில் இராசபாளையத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் சேத்தூர் அருகில் அமைந்துள்ளது தேவதானம்.  சிவன்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பகுதியை அல்லது ஊர்ப்பகுதிய தேவதானம் என்று கூறுவது மரபாக உள்ளது.  இவ்வூரில் பழைமை  வாய்ந்த பலநுண்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இவ்வூர் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணித்துள்ளனர் தொல்லியல் துறையினர்.

112. தொப்பலாக்கரை

அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் அமைந்துள்ளது தொப்பலாக்கரை. இவ்வூரை `அளற்றூர் நாட்டுக் குளத்தூர்' என்றும், `ஜனநாத நல்லூர்' என்றும் அழைத்துள்ளனர். இவ்வூரில் உள்ள விஷ்ணு கோயிலும் தீர்த்தங்கர் சிலைகளும் பழைமைக்குச் சான்றாய் விளங்குகின்றன.

113. நக்கனேரி

ராஜபாளையம் வட்டத்தின் தென்கிழக்கில் கொல்லங்கொண்டானுக்கு  அருகில் அமைந்துள்ளது நக்கனேரி.  இங்குள்ள பாறை ஒன்றில் சோழன் தலை கொண்ட வீர பாண்டியனின் வட்டெழுத்து    கல்வெட்டு ஒன்றுள்ளது.

114. நதிக்குடி

சிவகாசி - அச்சந்தவித்தான் சாலையில் எதிர்க்கோடைக்கு அருகில் அமைந்துள்ளது நதிக்குடி. இவ்வூரில், நாச்சியார் மேடு என்றழைக்கப்படும் மண்மேடு ஒன்றுள்ளது. இங்கு கறுப்பு சிவப்புப் பானை ஓடுகளும், முதுமக்கள் தாழிகளின் பகுதிகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம், சங்க காலத்திலேயே இவ்வூர்  சிறப்புற்றிருந்தது.

115. நத்தந்துப்பட்டி

கோட்டூர் இருக்கண்குடிச் சாலையில் அமைந்துள்ளது நத்தந்துப்பட்டி. இவ்வூரின் பழைமையை, இங்கு கிடைத்துள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

116. நத்தம்பட்டி

திருவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் அமைந்துள்ளது நத்தம்பட்டி. இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது ரோமானியத் தங்க நாணயங்கள்  இவ்வூரின் பழைமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

117. நரிக்குடி

அருப்புக்கோட்டைக்கு மேற்கில் 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நரிக்குடி.  இவ்வூர்ப் பகுதி காடுகளாகவும், இங்கு நரிகள் அதிகம் இருந்ததாகவும், அதனால் இவ்வூருக்கு நரிக்குடி எனப்பெயர் வந்ததாகவும் சொல்கின்றனர். வடமொழியில் இவ்வூரைச் `சம்புக்புரம்' (நரிபுரம்) என்று அழைப்பர்.

118. நாங்கூர்

திருபுவனம்-நரிக்குடி சாலையில் அமைந்துள்ளது நாங்கூர். நாங்கூரைச் சேர்ந்த பலர், சோழபுரம் சிவன்கோயில் திருமண மண்டபத்துக் கல் தூண்களைத் தானமாக வழங்கியதாகக் கல்வெட்டுச் செய்தி உள்ளது. கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலை ஒன்று தற்போது வழிபாட்டிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

119. நாலூர்

திருச்சுழி வட்டத்தில் முக்குளம் பகுதியில் அமைந்துள்ளது நாலூர். இது, சிறிய ஊராய் காட்சி தந்தாலும் சங்க காலத்துக்கு முன்னரே இவ்வூரில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை இங்கு கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளின் உடைந்த பகுதிகளும் கறுப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகளும் உறுதி செய்கின்றன.

120. நெடுங்கரைப்பட்டி

பந்தல்குடியின் அருகிலுள்ள மேட்டுப்பட்டி என்ற ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது நெடுங்கரைப்பட்டி. முற்காலப் பாண்டியர் காலத்தில் மேட்டுப்பட்டி, நெடுங்கரைப்பட்டி ஆகிய இரண்டுமே சேர்ந்து `வெண்ப நாட்டு நாகூர்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

121. நென்மேனி

சாத்தூரிலிந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி நெல்வயல்கள் சூழப்பட்டிருப்பதாலும், நெல் நிறைந்து காணப்படுவதாலும், இவ்வூருக்கு இந்தப் பெயர் சூட்டிருக்க வேண்டும் என்கின்றனர். இவ்வூரில் பழைமையான வெங்கடாசலபதி கோயிலும், விநாயகர் கோயிலும் நல்ல நிலையில் அமைந்துள்ளன.

122. பந்தல்குடி

அருப்புக்கோட்டை எட்டையபுரம் சாலையில், அருப்புக்கோட்டையிலிருந்து 9 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பந்தல்குடி. பந்தல் என்பது உயரமான தூண்களைக் கொண்ட கல் மண்டபத்தைக் குறிப்பதாக அமையும். இவ்வூரின் ஒவ்வொரு தெருவின் பெயரும் அழகாபுரி, வெள்ளையாபுரம், மேட்டுப்பட்டி, நெடுங்கரைப்பட்டி, ரெட்டியப்பட்டி என ஒவ்வொரு ஊரின் பெயரைக்கொண்டு விளங்குகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

123. பனையடிப்பட்டி

சிவகாசி வட்டத்தில் கல்வார்பட்டி பகுதியில் அமைந்துள்ளது பனையடிப்பட்டி. இவ்வூரிலுள்ள பாறை ஒன்றில், பனையடிப்பட்டிலிருந்த சில நிலங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.

124. பாலவநத்தம்

அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் பாளையம்பட்டி அருகில் அமைந்துள்ளது பாலவநத்தம். இவ்வூர், `புங்க நாட்டுக் காஞ்சி' என்றும், `புங்க நாட்டுச் சென்னெல் குடி' என்றும், `சிவபாதசேகரநல்லூர்' என்றும் பண்டைய காலத்தில் அழைத்துள்ளனர். இவ்வூரிலுள்ள கைலாசநாதர் கோயிலும், செல்லியம்மன் கோயிலும் இவ்வூரின் பழைமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.

125. பாவாலி

விருதுநகர் செங்குன்றாபுரம் சாலையில் அமைந்துள்ளது பாவாலி.  இவ்வூரிலுள்ள சிவன் கோயிலும், பாளையக்காரர்களுடைய அரண்மனையும் இவ்வூரின் பழைமையைப் பறைசாற்றுகின்றன. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட சுப்பிரமணிய சுவாமி கோயில் இவ்வூரிலுள்ளது.  நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட 72 பாளையங்களில் பாவாலி பாளையமும் ஒன்று.

126. பாளையம்பட்டி

அருப்புக்கோட்டை தூத்துக்குடி சாலையில், அருப்புக்கோட்டையிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பாளையம்பட்டி. ஒரு பாளையத்திற்கே தலைமையிடமாக விளங்கியதால், இவ்வூர் பாளையம்பட்டி எனப் பெயர் பெற்றது.  18 கிராமங்கள் இப்பாளையம்பட்டி ஜமீனுக்கு உட்பட்டிருந்தது.

127. பாறைக்குளம்

திருச்சுழிக்கு அருகில் உள்ளது பாறைக்குளம். இங்கு 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று காணப்படுகிறது.

128. புதுக்கோட்டை

சிவகாசி எரிச்சநத்தம் சாலையில் மங்கலம் பகுதியில் அமைந்துள்ளது புதுக்கோட்டை. வரதுங்கராம பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை, இலுப்பைப்பட்டி, வலங்கைமான், சிவகாமியக் குறிச்சி ஆகிய நான்கு ஊர்களும் ஒன்றிணைக்கப்பட்டு திம்மபுரம்' என்றழைக்கப்பட்டிருக்கிறது.

129. புதுப்பட்டி

திருத்தங்கல் எரிச்சநத்தம் செல்லும் சாலையில் அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்ளது புதுப்பட்டி. இங்கு குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. இக்குடைவரைக்கோயில், சுண்ணாம்புப் பாறையில் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

130. மகாராசபுரம்

திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு செல்லும் சாலையில் கோட்டையூருக்கு அருகில் அமைந்துள்ளது மகாராசபுரம்.  இங்கு வெவ்வேறு அடுக்கு நிலையில் முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது சங்க காலத்துக்கு முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என தெரிந்துக்கொள்ளமுடிகிறது.

131. மல்லி

திருவில்லிபுத்தூர் சிவகாசி நெடுஞ்சாலையில் 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மல்லி. இவ்வூர் கல்வெட்டுகளில் `மல்லி நாடு' என அழைத்துள்ளனர். பல ஊர்களுக்கு பாதுகாப்பு தருகின்ற அளவிற்கு வலிமை பொருந்திய ஊராக விளங்கி இருக்கிறது.

132. மன்னார்கோட்டை

விருதுநகரின் தெற்கில் துலுக்கப்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது மன்னார்கோட்டை.  இவ்வூரிலுள்ள தியாகராஜ சுவாமி கோயில், பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் வளாகத்தில் உள்ள சில தூண்களில் பாளையக்காரர்களின் முழு உருவச்சிலைகள் இடம்பெற்றுள்ளன.

133. மாறனேரி

சிவகாசியிலிருந்து அச்சந்தவிர்த்தான் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மாறனேரி. இவ்வூர், `கருநிலக்குடி நாட்டு மறமங்கலத்து சுந்தரபாண்டிய நல்லூர்' என குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

134. மானகச்சேரி (த)

திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில், சுமார் 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தடங்கண்ணி மானகச்சேரி எனும் ஊர். இது, ஈஞ்சாற்றின் துணைக் கிராமமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது.

135. மானூர்

திருச்சுழி நரிக்குடிக்கருகில் அமைந்துள்ளது மானூர். இவ்வூரை `கங்கனை இருக்கை நாட்டு மனையூர்'  என்றைழைத்துள்ளனர்.

136. முடுக்கண்குளம்

காரியாபட்டிக்கு அருகில் அமைந்துள்ளது முடுக்கண்குளம். இவ்வூர் சிவபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேந்த சிவன் கோயிலொன்று இங்குள்ளது.

137. முதுகுடி

இராஜபாளையம் - சோழபுரம் சாலையில் இராஜபாளையத்திலிருந்து 6 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முதுகுடி. முதலாம் மாறவர்மன் குலசேரனின் 34-வது ஆட்சியாண்டில் இவ்வூரின் மேற்கிலுள்ள கருங்குளத்தில் உடைப்பு ஏற்பட, அதைத் தடுத்து நிறுத்தப் போராடியிருக்கிறான் பெரிய தேவன். இவனது வீரத்தைப் பாராட்டி நடுகல் எடுத்துள்ளனர். இவனது மகளுக்கு, `உதிரப்பட்டி' நிலமாக அரை மா அளவுள்ள நிலத்தைக்  கொடுத்துள்ளனர்.

138. மூவரை வென்றான்

திருவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் திருவில்லிபுத்தூரிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில் நத்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது மூவரை வென்றான்.  இவ்வூரில் மொட்டைப்பாறை என்ற மலையில் குடைவரைக் கோயில் உள்ளது.

139. ரெட்டியார்பட்டி (எம்)

அருப்புக்கோட்டை-முதுகுளத்தூர் சாலையில் இரண்டு கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரெட்டியார்பட்டி.  மண்டபசாலைப் பகுதியில் அமைந்துள்ளதால், இவ்வூர் எம்.ரெட்டியார்பட்டி என்றழைக்கப்படுகிறது. திருமங்கலத்திலிருந்து ரெட்டியார்கள் அதிகம் வந்து இங்கு தங்கியதால் இப்பெயர் பெற்றது. இவ்வூரில் கல் செக்குகள் அதிகம் காணப்படுகின்றன. எண்ணெய் வணிகர்கள் பலர் இங்கு வாழ்ந்துவந்தனர் என்பதற்கு அடையாளமாக உள்ளது.

140. வத்திராயிருப்பு

திருவில்லிபுத்தூர்-மதுரைச்சாலையில் கிருஷ்ணன்கோயிலிருந்து மேற்கில் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது வத்திராயிருப்பு. இவ்வூர், மேற்குத்தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து ஓடிவரும் காட்டாறு வெள்ளத்தைப் 'பிளவக்கல் அணை'யில் சேர்த்துவைத்து, வற்றாத நீர் இருப்பாக நீர் நிறைந்திருந்தமையால், `வற்றாத இருப்பே' நாளடைவில் `வத்திராயிருப்பு' ஆயிற்று  என்கின்றனர்.

141. அருச்சுணாபுரம்

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது அருச்சுணாபுரம். இவ்வூரில் பழைமைக்கு எடுத்துக்காட்டக, தென்காசி பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட `சாந்தவனப் பெருமாள்' கோயில் உள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர், `சேந்தனேரி' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

142. வரலொட்டி

விருதுநகர்-காரியப்பட்டி சாலையில், மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ளது வரலொட்டி. இங்கு, கிழவன் சொக்கன் கிணறு வெட்டி இவ்வூரிலிருந்த வறட்சியை ஓட்டியதால், இதற்கு வரல் ஓட்டி எனப் பெயர் பெற்றுள்ளது. அதுவே காலப்போக்கில் வரலோட்டியாக மாறியுள்ளது.

143. விழுப்பனூர்

திருவில்லுபுத்தூரிலிந்து பூவானி வழியாக சிவகாசி செல்லும் சாலையில் உள்ளது விழுப்பனுர். இதைப் பண்டைய காலத்தில் விழுப்பராய நல்லூர் என்று அழைத்துள்ளனர். நாளடைவில் விழுப்பனூர் என்று அழைத்துள்ளனர். இங்குள்ள பெருமாள் கோயில், இந்த ஊரின் பழைமைக்குச் சான்றாக விளங்குகிறது.

144. வீரசோழம்

அருப்புக்கோட்டை-மானாமதுரை சாலையில்  நரிக்குடி எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது வீரசோழம். சோழ மன்னன் முதலாம் இராசராசன் இந்த ஊரில் வீரத்துடன் போரிட்டு பாண்டியர்களைத் தோற்கடித்ததால், இவ்வூருக்கு 'வீரசோழம்' என்று பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

145. வெங்காநல்லூர்

இராஜபாளையம் - தென்காசி நெடுஞ்சாலையில் சுமார் 6 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெங்காநல்லூர்.  பண்டைய காலத்தில் இந்த ஊரை சேர நாராயண மங்கலம் என்றழைத்துள்ளனர்.  இங்குள்ள சிவன் கோயில், இந்த ஊரின் பழைமையை எடுத்துக்காட்டுகிறது

146.வெம்பக்கோட்டை

சிவகாசியிலிருந்து 18 கி.மீட்டர் தொலைவில் வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ளது வெம்பக்கோட்டை.  இவ்வூரை ஆண்ட மன்னன் தனக்கு ஒரு கோட்டை கட்ட எண்ணினான். அப்போது வெண்மை நிறப் பறவை ஒன்று பறந்து வந்து ஒரு இடத்தில் வட்டமடித்துக்காட்ட, அதன்படி அங்கு கோட்டை கட்டினான் மன்னன். இந்தக் கோட்டை வெண்புள் கோட்டை என்றைழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் வெம்பக்கோடையாயிற்று என்கின்றனர்.

147. காட்டழகர்

அழகர் என்றாலே மதுரையில் உள்ள திருமாலிருஞ்சோலையில் அருள்பாலிக்கும் கள்ளழகர் தான் நமது நினைவுக்கு வருவார். ஆனால், திருவில்லிப்புத்தூரிலிருந்து மேற்கில் 16 கி.மீ தூரத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோயிலில் உள்ள திருமாலுக்கு காட்டழகர் என்று பெயர்.

148. சதுரகிரி

புகழ்பெற்ற சிவன் தலமாகக் கருதப்படும் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி கோயில், விருதுநகர் - மதுரை மாவட்டங்களை இணைக்கும் எல்லைக்கோடாக அமைந்துள்ளது. ஒவ்வொரு திசைக்கும் நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் நான்கு திசைகளிலும் 16 கிரிகள் சதுர வடிவில் அமைந்துள்ளன. எனவே, இம்மலை சதுரகிரி என்றழைக்கப்படுகிறது.

149. வத்திராயிருப்புப் பாதை

சதுரகிரி மலைக்கு மதுரை மாவட்டம் சாப்டூர், தேனி மாவட்டம் வருச நாடு, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. இவற்றில் வத்திராயிருப்பு பாதையே சிறந்தது. வத்திராயிருப்பிலிருந்து ஏழாவது கிலோமீட்டரில் உள்ள தாணிப்பாறை சென்று, தாணிப்பாறையில் இருந்து 10 கி.மீ தூரம் மலையேறிச் செல்ல வேண்டும். ஏறுவதற்கு கடினமான வழுக்குப் பாறைகள் மிகுந்த செங்குத்தான ஒற்றையடிப் பாதை என்பதால், மலையேற்றம் கடினமானது. ஆனாலும், விஷேமான நாளாகக் கருதப்படும் ஆடி அமாவாசை நாளில் மட்டும் 3 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

150. சதுரகிரிக்கு வனத்துறை கட்டுப்பாடு

சதுரகிரி மலைப்பகுதி 64,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது, வனத்துறையினர் கட்டுப்பாட்டிலுள்ளது. எனவே, எல்லா நாள்களிலும் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. மலைப்பகுதி முழுவதும் தீர்த்தங்களும், மூலிகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

151. ஜோதிப்புல்

சதுரகிரி கோயிலுக்கு வடக்கே மூலிகைகள் நிறைந்த சஞ்சீவிமலை என்ற குன்று உள்ளது. இங்கு வளரும் ஜோதிப்புல் என்ற தாவரத்தைப் பகலில் நீரில் நனைத்துவிட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் பிரகாசமாக இருக்கும். முற்காலத்தில் சித்தர்கள் இதனை வெளிச்சத்துக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

 152. நல்லதங்காள் கோயில்

அண்ணன் - தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது நல்லதம்பி - நல்லதங்காள் கதை. இம்மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு என்ற ஊரின் அருகில் உள்ள அர்ச்சுனாபுரம் என்ற இடத்தில் நல்லதங்காளுக்கு கோயில் உள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மக்கள், இக்கோயிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

153. நீர்காத்த அய்யனார் கோயில்

இராஜபாளையத்திலிருந்து மேற்கே சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பிரபலமான நீர்காத்த அய்யனார் கோயில் உள்ளது.

154. தவம் இருக்கும் நந்தி

தமிழகத்திலேயே பெரிய நந்தி, தஞ்சையின் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக... உருவத்திலும், கலை நுணுக்கத்திலும் சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தி, விருதுநகர் - திருநெல்வேலி மாவட்ட எல்லையான சொக்கநாதன் புத்தூரில் உள்ளது. பொதுவாக, நந்தி, சிவனைப் பார்த்து மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நந்தி, வடக்குத் திசை நோக்கி, கடும் தவம் மேற்கொண்ட நிலையில், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்தி கண்டேசுவரர் கோயிலில் உள்ளது.

155. வெண்குடைத் திருவிழா

இராஜபாளையத்தில் நடைபெறும் வெண்குடைத் திருவிழா, மாவட்ட அளவில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா, தமிழ் வருடப் பிறப்பு அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு, சித்திரை வெண்குடைத் திருவிழா என்று பெயர். இங்குள்ள அம்பாள் ராஜ குளத்தின் அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவைக் கண்டுக்களிக்கின்றனர்.

156. வியாழன் சந்தை

இராஜபாளையம் வியாழன் சந்தை மிகப்பெரிய சந்தை. இந்தச் சந்தை நடைபெறுவதற்கு தர்மராஜா தனது நிலத்தைத் தானமாக வழங்கினார். 1822 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வாரச் சந்தை, இன்றும் தொடர்ந்து பெரிய அளவில் நடந்து வருகிறது. 

157. கத்தி போடும் விழா

அருப்புக்கோட்டையில் வாழும் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சௌடாம்பிகை அம்மனுக்கு நேர்த்திக்கடனாகத் தங்கள் உடலை கத்தியால் கீறி, நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதற்கு 'கத்தி போடும் திருவிழா' என்று பெயர். வருடந்தோறும் வைகாசி மாதம் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

158. பெருமாள் கோயிலில் திருநீறு

அருப்புக்கோட்டை நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, மலையரசன் கோயில். மூன்று பக்கம் மலைகளால் சூழ்ந்து, வடக்குப் பக்கம் வாசல் அமைந்துள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். இக்கோயிலில்தான் பெருமாள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் திருநீறு, குங்குமம், துளசி தீர்த்தம் ஆகியவை வழங்கப்படுகின்றன. பெருமாள் கோயிலில் திருநீறு கொடுப்பது இக்கோயிலில் மட்டுமே நடைபெறுகிறது.

159. சவேரியார் தேவாலயம்

புனித பிரான்சிஸ் நினைவாக, பிரான்சிஸ் அசோசியேஷன் கட்டிய தேவாலயம். ஒரு பக்கத்தில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீ கிருஷ்ணர் வருவது போலவும், இஸ்லாத்தைக் குறிக்கும் பிறை நிலவும் கோயிலின் வடிவமைப்பின் பின்பக்கத்தில் கிறிஸ்தவத்தை உணர்த்தும் உயரமான சிலுவையும் தெரிகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

160. பள்ளி மாடம்

திருச்சூழி வட்டத்தில் குண்டாற்றின் நதிக்கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரே கல்லறைக் கோயில் இது. சுந்தரபாண்டியன் இவ்விடத்துக்கு வந்து எதிர்பாராமல் மரணம் எய்தினார். இங்கே அவர் புதைக்கப்பட்டார். அப்படிப் புதைக்கப்பட்ட இடத்தில் அவரின் இளைய சகோதரர் வீரபாண்டியன், பள்ளிப்படை என்ற இந்தத் திருக்கோயிலை கட்டி எழுப்பினார். நாளடைவில் பள்ளிப்படை என்ற பெயர் பள்ளி மாடம் என்று மருவியது.

161. கல்வியில் முதலிடம்

10- வகுப்பு மற்றும் 12- வகுப்பு அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக முதன்மை இடத்தில் இருக்கி்றது விருதுநகர் மாவட்டம்.

162. அரசுப் பணிகளிலும் முன்னேறிய மாவட்டம்

மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெறும் மாவட்டமாகவும் உள்ளது. சுருங்கக் கூறின், கல்வியில் அதிக விழிப்புஉணர்வு பெற்ற மாவட்டமாக விருதுநகர் உள்ளது.

163. கல்விக்கு தனி அடையாளம்

தமிழகத்தில் 10,000 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையினை 30,000மாக அதிகப்படுத்தி, கல்விப்புரட்சி செய்தவர் காமராஜர், மேலும் 650 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையினை 2,500 ஆக உயர்த்தினார். 300 மக்கள்தொகை இருக்கும் கிராமத்துக்கு ஒரு ஆரம்பப்பள்ளி என்ற திட்டத்தை தீட்டி, காமராஜர் செயல்படுத்தினார். தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தி, இலவச மதிய உணவுத் திட்டத்தையும் செயல்படுத்தினார் காமராஜர்.

164. பிடி அரிசிப் பள்ளி வரலாறு

கி.பி 1702 - 1703 ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அங்கிருந்த நாடார் இன மக்கள், அங்கிருந்து மதுரை, அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர் எனப் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து வியாபாரம் செய்து வாழ்ந்துவந்தனர். வியாபாரத்துக்குக்  கல்வி அவசியம் என்பதை உணர்ந்த இவர்கள், ஒவ்வொரு குடும்பத்தினரும் தினசரி ஒரு கைப்பிடி அரிசி சேர்த்து வைத்து, அதனை மாத முடிவில் சந்தையில் விற்று அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு, பிடி அரிசிப் பள்ளியைத்தொடங்கி, கல்வி பயின்றனர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

165. முப்பதில் ஆரம்பித்து முப்பதாயிரம் மாணவர்கள்

கே.வி.எஸ். கல்வி நிறுவனம் விருதுநகரில் இன்றும் சிறப்பாக இயங்கிவருகின்ற பிடி அரிசிப் பள்ளி. இப்பள்ளி, 1889 ஆம் ஆண்டில் 30 மாணவர்களோடு தொடங்கப்பட்டு, இன்று பல்லாயிரம் மாணவர்களோடு, பல கிளைகள் கொண்டு இயங்கிவருகிறது.

166. கல்வி வளர்ச்சியில் விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 1373 அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், விருதுநகரில் வி.எச்.என்.எஸ் கல்லூரி, வி.வி.வி. பெண்கள் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியும், அருப்புக்கோட்டையில், எஸ்.பி.கே. கலைக்கல்லூரி, தேவாங்கர் கலைக்கல்லூரியும், சாத்தூரில் எஸ்.ஆர்.நாயுடு நினைவு கலைக்கல்லூரியும், சிவகாசியில் எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும், இராஜபாளையத்தில் ராஜூஸ் கல்லூரி, ஏ.கே.பி.ஆர். பெண்கள் கல்லூரி, இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியும், கிருஷ்ணன்கோயிலில் மெப்கோ பொறியியல் கல்லூரியும் அமைந்துள்ளன.

167. பென்னிங்டன் நூலகம்

சென்னைக்கு ஒரு கன்னிமாரா நூலகம் போல, திருவில்லிபுத்தூருக்கு ஒரு பென்னிங்டன் நூலகம். கி.பி 1875ஆம் ஆண்டு திருநெல்வேலி கலெக்டராக பென்னிங்டன் இருந்தார். அப்போது, திருவில்லிபுத்தூர் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்திருந்தது. திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சில பிரமுகர்களின் முயற்சியால், உருவாக்கப்பட்டதுதான் பென்னிங்டன் நூலகம். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு, இன்றும் பொலிவுடன் இந்நூலகம் செயல்பட்டுவருகிறது. இந்நூலகத்தில் பல அரிய நூல்களைக் காணலாம்.

168. பல் மருத்துவக் கல்லூரி

தற்போது சென்னையில் மட்டுமே அரசு பல்மருத்துவக் கல்லூரி உள்ளது. விரைவில்  விருதுநகர் மாவட்டத்தில், பல்மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் எனத் தமிழகஅரசு அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்ட பிரபலங்கள்...

169. இராஜபாளையம் தந்த முதலமைச்சர்

பி.எஸ்.கே.என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் பி.எஸ். குமாரசாமி ராஜா, தமிழகத்தில் 1949 முதல் 1952 வரை முதலமைச்சராக இருந்தார். இவர், கி.பி 1898 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் சஞ்சீவி ராஜா. இவர் பிறந்த எட்டாவது நாளில் தனது தாயை இழந்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையையும் இழந்தார். பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். இளம் வயதில் அரசியல்மீது அதிக அளவு ஈடுபாடு ஏற்பட்டதால், அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்தார்.

170. வேளாண்மைத் துறை அமைச்சர்

அரசியலில் முழு ஈடுபாடு கொண்ட பி.எஸ். குமாரசாமி ராஜா, மூதறிஞர் ராஜாஜியுடன் நட்பு கொண்டு ஊக்கத்துடன் செயலாற்றினார். பின்னர் சட்டமன்ற உறுப்பினராகி, ஆந்திரகேசரி என்றழைக்கப்படும் டி.பிரகாசம் மந்திரிசபையில் வேளாண்மைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஓராண்டு அமைச்சராகப் பணியாற்றினார்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

171. சென்னை மாகாணத்தின் முதலமைச்சர்

டி.பிரகாசத்துக்குப் பின்னர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வரானார். இவருக்குப்பின் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.எஸ்.குமாரசாமிராஜா சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 1952 வரை முதல்வராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில், மனிதர்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி வந்ததை மாற்றி, அவர்களை கோயிலினுள் நுழைய அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

172. ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்படுத்தியவர்

பி.எஸ். குமாரசாமிராஜா முதல்வராக இருந்தபோது, ஆதிதிராவிடர் நலத்துறை என்ற துறை புதியதாக உருவாக்கப்பட்டது. இவரே, ஆண்டாள் கோயில் கோபுரத்தை, தமிழக அரசின் சின்னமாக அறிவித்தார்.

173. சொந்த இல்லத்தைத் தானமாக வழங்கியவர்

அறிவு வளர்ச்சியிலும் கலை வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பி.எஸ்.குமாரசாமி ராஜா. இராஜபாளையத்தில், தான் வாழ்ந்த இல்லத்தை நூலகம் மற்றும் இசை பயில்வதற்காக, இசை அரங்கம் உருவாக்கும் நோக்கத்துடன் தானமாக வழங்கினார். இவ்வாறு உருவானதுதான் `காந்தி கலை மன்ற நூலகம்.' இதனை முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் 1955 ஆம் ஆண்டு திறந்து வைத்தார். காந்தி கலை மன்றத்தின் ஒரு பகுதியில் சங்கீத சபை 1956-ல் தொடங்கி வைக்கப்பட்டது.

174. காமாட்சியாய் இருந்து காமராஜரானார்

கர்ம வீரர் காமராஜர் 1903 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி - சிவகாமி அம்மாள். காமராஜரின் பாட்டியான பார்வதி அம்மாள், தனது பேரனுக்கு, தங்களது குலதெய்வமான காமாட்சி அம்மனின் பெயரையே `காமாட்சி' என சூட்டினார். காமராஜரின் தாயாரோ, தனது மகனை ராஜா, ராஜா என்றே அழைத்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி, தனது குலதெய்வத்தின் பெயர், தனது மகனுக்கு இருக்க வேண்டும் என்று எண்ணி, இருபெயர்களையும் (காமாட்சி - ராஜா) இணைத்து காமராஜர் என அழைக்கத் தொடங்கினார்.

175. காமராஜரின் திண்ணைப் பள்ளி

காமராஜர், முதன் முதலில் விருதுபட்டியில், வேலாயுதம் என்பவர் நடத்தி வந்த திண்ணைப்   பள்ளியில் சேர்ந்தார். பின்னர், ஏனாதி நாயனார் வித்யாசாலை பள்ளியில் ஓராண்டு படித்தார். பின்னர், பிடி அரிசிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்ட ஷத்திரிய வித்தியாசாலா பள்ளியில் சேர்ந்தார். காமராஜரின் ஆறாவது வயதில், அவரது தந்தை குமாரசாமி இயற்கை எய்தினார்.

176. தந்தையின் இழப்பும் ஜவுளிக்கடை பணியும்

12 வயது வரை பள்ளி சென்ற காமராஜர், அதன்பின் தனது மாமா கருப்பையாவின் ஜவுளிக்கடையில் சேர்ந்து பள்ளிக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். இவர், 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.

177. இலவசக் கல்வியை வழங்கியத் தலைவர்

காமராஜர், இலவசக் கல்வி அளித்து வந்த `க்ஷத்திரிய வித்யா சாலா' பள்ளியில் படித்ததால், பிற்காலத்தில் `இலவசக்கல்வி' என்பதை தமிழகம் முழுவதும் கொண்டுவர, காரணமாக அமைந்தது. காமராஜரை `படிக்காத மேதை' என்று அழைப்பர். இதை, `பலகோடி பேரை படிக்க வைத்த மேதை' என்று கூறுவதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

178. கல்வி வளர்ச்சி தினம்

காமராஜர் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2-ல் இயற்கை எய்தினார். மகாத்மாகாந்தி பிறந்த தினத்தன்று காமராஜர் மறைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 ஆம் தேதி, ஆண்டுதோறும் `கல்வி வளர்ச்சி தினமாக' தமிழக அரசால் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு, இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா, மத்திய அரசால் காமராஜருக்கு வழங்கப்பட்டது.

179. இராஜபாளையத்தின் தந்தை

இராஜபாளையம் இன்று. தொழில் வளர்ச்சியிலும் கல்வியிலும் சிறந்த நிலையில் இருப்பதற்கு அடிப்படை காரணமாக அமைந்தவர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா. எனவே, இவர், `இராஜபாளையத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

180. தொழில்நகரமாக உருவாக்கியவர்

இராஜபாளையத்தில் `பெரிய மில்' என்று அழைக்கப்படும் `இராஜபாளையம் மில்'லைத் தொடங்கி பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இன்னமும் பல நூற்பாலைகள், சிமென்ட் ஆலை மற்றும் பல தொழிற்சாலைகளையும் உருவாக்கி, இராஜபாளையத்தை தொழில் நகரமாக மாற்றினார். இவர்களது தொழில் நிறுவனங்கள், `ராம்கோ குழுமம்' என்ற பெயரில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

181. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி

தொடக்கப் பள்ளி முதல் பல மேல் நிலைப் பள்ளிகளையும் உருவாக்கினார் பி.ஏ.சி.ராமசாமி ராஜா.அதைத் தொடர்ந்து அவரது மகன் ராமசுப்பிரமணிய ராஜா, ஐ.டி.ஐ,பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி, இப்பகுதியின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தினார்.

182. தமிழ்நாட்டுக்குப் பெயர் தந்த  சங்கரலிங்கனார்

`மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை தமிழ்நாடு என்று பெயரிட்டு அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து, உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தவர், தியாகி சங்கரலிங்கனார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா, `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினார். விருதுநகரில் சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

183. எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி

மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளரான தீபம்  நா.பார்த்தசாரதி, திருவில்லிப்புத்தூர் வட்டம் வத்திராயிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.

184. மேலாண்மை பொன்னுசாமி

மறைந்த, சாகித்ய அகாடமி விருதுபெற்ற மேலாண்மை பொன்னுசாமி இராஜபாளையம் அருகில் உள்ள மேலாண்மறைநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

185. திரை பிரபலங்கள்

அங்காடித்தெரு, வெயில் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான வசந்தபாலன், விருதுநகரைச் சேர்ந்தவர். சுப்பிரமணியபுரம், நாடோடிகள் ஆகிய படங்களின் இயக்குநர் சமுத்திரகனி  இராஜபாளையத்தைச் சேர்ந்தவர். மறைந்த, இந்திய திரை உலகின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி, சிவகாசி வட்டத்தில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

புகழ்மிக்க உணவுப்பொருள்கள்

186. திருவில்லிபுத்தூர் பால்கோவா

தமிழகத்திலேயே திருவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாதான் மிகவும் புகழ்பெற்றது. இங்கு தயாராகும் பால்கோவா, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது.

187. சாத்தூர் காராச்சேவு

சாத்தூரில் தயாராகும் காராச்சேவு ருசி மிக்கது. இங்கு தயாராகும் காரச்சேவு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

188. பாலவநத்தம் ஜிலேபி

அருப்புக்கோட்டை அருகில் உள்ள பாலவநத்தம் என்ற கிராமத்தில் தயார்செய்யப்படும் இனிப்பு வகையான ஜிலேபி, சுவையானது. இக்கிராமத்தில் பல இடங்களில், ஜிலேபி மட்டுமே தயார்செய்து விற்கப்படுகிறது.

189. விருதுநகர் பரோட்டா

விருதுநகரில் உள்ள ஹோட்டல்களில் மட்டுமே பரோட்டாவில் ஒரு வகையான `எண்ணெய் பரோட்டா' தயார்செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள வேறு ஊர்களில்கூட இந்தப் பரோட்டாவைப் பார்க்க முடியாது.

படம்: வி.ஸ்ரீனிவாசுலு

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

சுற்றுலாத் தலங்கள்

190. அய்யனார் அருவி

அடர்ந்த காட்டின் நடுவே இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் 15 அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவி அழகின் உச்சம். இங்குள்ள அய்யனார் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இந்தப் பேரழகை ரசித்து வர விருதுநகரிலிருந்து 12 கி.மீ பயணிக்க வேண்டும்.

191. வழக்குப் பாறை

அய்யனார் அருவிக்கு அருகில் 'வழக்குப் பாறை' என்றழைக்கப்படும் இடம் ஒன்று நீர் ஓடிவரும் சரிவான மேடுபள்ளமற்ற பாறைப் பகுதியாகும். நீர் ஓடிவரும் காலங்களில் வேகமாகச் சறுக்கி வந்து தடாகத்தில் விழுவதைச் சிறுவர் சிறுமியர்  விரும்புவர்.

192. முதலியார் ஊற்று

மலைப்பகுதியில் உள்ள இந்த இடத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் பொழுதுபோக்கிற்காகவும், வேட்டையாடவும் சென்றுள்ளனர். இங்கிருந்து தேனி, சின்னமனூர் பகுதிகளின் எழிலைப் பார்த்து ரசிக்கலாம்.

193. குகன் பாறை

வேம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையில் குகன்பாறை அமைந்துள்ளது. இந்த மலையில் உள்ள குகையை, சமணத் துறவிகளின் பள்ளியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

194. குள்ளூர்சந்தை நீர்த் தேக்கம்

அர்ஜுனா நதியின் கிளை நதியான கெளசிகா மகாநதியின் குறுக்கே அமைந்துளந்து குள்ளூர்சந்தை நீர்த்தேக்கம். பல வகையான நீர்ப்பறவைகள் இந்த நீர்த்தேக்கத்துக்கு வலசை வருகின்றன.

195. வேம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

தோட்டங்கள், படகு சவாரி ஆகியவற்றில் சிறந்த சுற்றுலாத் தலமாகிறது வேம்பக்கோட்டை நீர்த்தேக்கம். மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப் பக்கச் சரிவின் நீரோட்டங்களிலிருந்து இதற்கான நீர் கிடைக்கிறது.

196. பிளவக்கல் அணை

திருவில்லிப்புத்தூர் வட்டம் கூமாப்பட்டியின் அருகே அமைந்துள்ளது பிளவக்கல் அணை. இங்கே அமைந்துள்ள மலையின் உச்சியில், ஒரு பெரிய கல் இயல்பாகவே பிளந்து உள்ளதால், 'பிளவக்கல்' என்ற பெயர் ஏற்பட்டது. இங்கே, பெரியாறு அணை, கோவிலாறு அணை என இரு அணைகள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு படகு வசதி செய்யப்பட்டுள்ளது.

197. செண்பகத்தோப்பு காட்டு அணில் சரணாலயம்

திருவில்லிப்புத்தூரின் அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின், 480 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியே செண்பகத் தோப்பு வனம். இங்குள்ள குன்றுகள் 100 மீட்டர் முதல் 2,000 மீட்டர் வரை வேறுப்பட்ட உயரத்தில் உள்ளன. இங்கு சுமார் 75 செ.மீ நீளமுள்ள அரிய சாம்பல் நிற அழகிய அணில்கள் வாழ்கின்றன. இந்தபகுதியை, `சாம்பல் நிற அணில்கள்' கொண்ட சரணாலயம் என்றழைக்கின்றனர். இந்தச் சரணாலயம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தவிர பிற மாதங்களில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம்.

198.குமாரசாமி ராஜா நினைவு இல்லம்

 பி.குமாரசாமி ராஜா அவர்களுக்கு நினைவு இல்லத்தை அமைத்துள்ளது தமிழக அரசு. இவ்வில்லத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுலாப்பயணிகள் பார்த்துச் செல்கின்றனர்.

199. காமராசர் நினைவு இல்லம்

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு. அவரது கைக்கடிகாரம், ஆடைகள் மற்றும் பயன்படுத்திய சிலபொருள்களும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

200. விருதுநகர் குளம்

விருதுநகரின் மையத்தில் பிரமாண்டமான தெப்பக்குளம் உள்ளது. தெப்பத்தைச் சுற்றி நான்கு பக்கமும் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் மழை நீரை, தெப்பத்துக்குள் செலுத்தும் வகையில் பெரிய அளவுக்கு ஒரு மழைநீர் சேமிப்புத் திட்டத்தை இங்குள்ள வணிகர்கள் செயல்படுத்தி உள்ளனர். இதனால், நீண்டகாலமாக வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் இப்போது தண்ணீர் அலையடிக்கிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #8 - விருதுநகர் 200 - இன்ஃபோ புக்

தொகுப்பு க. மாரிமுத்து: விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தாராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் திருவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர். இவர், TNPSC, Railway, SSC, UPSC, Postal போன்ற மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாக, தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார். இவர், 2018 ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் `நம்பிக்கை மனிதர் விருது' பெற்றுள்ளார்.

தொகுப்பில் உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்

படங்கள்: ஆர்.எம். முத்துராஜ்  

அட்டை ஓவியம் : பிரேம் டாவின்ஸி

நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை