Published:Updated:

செட்டிநாடு உடான் விமான நிலையம்... அடிக்கல் நாட்டுவாரா, மோடி?

"தமிழக அரசு விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கும்பட்சத்தில் இழப்பீடாக மத்திய அரசு 22 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்தே கால்நடைகள் பண்ணையை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்!"

செட்டிநாடு  உடான் விமான நிலையம்... அடிக்கல் நாட்டுவாரா, மோடி?
செட்டிநாடு உடான் விமான நிலையம்... அடிக்கல் நாட்டுவாரா, மோடி?

காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் சாதிக்க முடியாத, உடான் விமான நிலையம் திட்டத்தை செட்டிநாட்டில் அமைக்க, பிரதமர் மோடியின் பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகக் கடந்த நவம்பர் மாதம் மதுரை ஏர்போர்ட் ஆப் இந்தியா அதிகாரிகள் ஆய்வுசெய்து, அதைச் செயல்படுத்துவதற்குத்  தகுதியான முழு அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. எனவே, நாளை (27-ம்) தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் மோடி, செட்டிநாட்டில் அமையப்பெறும்  உடான் விமான நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடான் விமான நிலையம் குறித்து சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் அக்னி பாலா, “காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளில் பவர்ஃபுல் ஆட்சியாளராக வலம் வந்தவர், ப.சிதம்பரம். 'நான், சிவகங்கை என்கிற கண்ணாடி வழியாக இந்தியாவைப் பார்க்கிறேன்' என்று சொன்னவர். ஆனால், சொந்த தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. 14 நாடுகளில் சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்துவிட்டார். அவர் சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் செட்டிநாடு கால்நடைப் பண்ணையில் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட விமான ஓடுதளம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திச் சிறு விமான நிலையம் அமைக்கலாம் என்று வர்த்தகச் சங்கங்கள் கோரிக்கைகள் வைத்தன. அதற்கான திட்டங்களைத்  தயார் செய்து ஃபைல் அனுப்பட்டபோதுகூட எந்த முயற்சியும் எடுக்காதவர். 

ப்ரொபோசலே இல்லாத விருதுநகருக்கு, மாணிக்க தாகூர் எம்.பி விமான நிலையம் அமைக்க அனுமதி வாங்கும்போது, சிதம்பரத்தால் அப்போது வாங்கியிருக்க முடியாதா? அப்போது அவர், விமான நிலையம் அமைக்க ஆர்வம் காட்டவில்லை. சொந்த தொகுதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாதவர். அவர் தொகுதி முழுவதும் ஏ.டி.எம். வங்கி எனத் திறந்துவைத்ததுதான் சாதனை. விமான நிலையம் அமையவிடாமல் சிதம்பரம் தன்னுடைய பழைய அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்க நினைக்கிறார். ஆனால் பிரதமர் மோடி, செட்டிநாட்டில் விமான நிலையம் தொடங்க அடிக்கல் நாட்டுவார்" என்றார், நம்பிக்கையுடன்.

இதுகுறித்து செட்டிநாடு கால்நடைகள் பண்ணையின் முன்னாள் இணை இயக்குநரும் சமூக ஆர்வலருமான ஆதிஜெகநாதன், “1950-ம் ஆண்டு 1,907 ஏக்கரில் ராமநாதபுரம் மாவட்டக் கால்நடைகள் பண்ணை அமைக்கப்பட்டது. அந்தப் பண்ணையில் ஆடுகள், நாட்டு மாடுகள், கோழிகள், வெள்ளைப் பன்றிகள் ஆகியன வளர்க்கப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு இதில், 317 ஏக்கரில் மானாவாரி விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதியில் ஆண்டுதோறும் 892 மில்லி மீட்டர் மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து இப்பண்ணை 115 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. விமான நிலையத்திற்கு ஏற்ற அனைத்துப் புவியியல் அமைப்புகளையும் பெற்றிருக்கிறது, இந்த இடம். அதனால்தான் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது இங்கே விமான ஓடுதளம் அமைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில், தமிழகத்தில் கயத்தாறு, உச்சிபுளி, செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே விமான ஓடுதளம் அமைத்திருக்கிறார்கள். இங்கே இருக்கும் விமான ஓடுதளம் பழுதடையாமல் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பண்ணையில் புலிக்குளம், காங்கேயம், உம்பளச்சேரி மற்றும் நாட்டு மாடுகள் இருந்தன. சுமார் 1,200 மாடுகள் இருந்த இடத்தில் 200-க்கும் குறைவான மாடுகள்தான் தற்போது வளர்க்கப்பட்டு வருகின்றன. இதை வளர்க்க இத்தனை ஏக்கர் நிலம் தேவையில்லை. மாடுகளுக்கான மேய்ச்சல், புல் தரை கிடையாது. மழையில்லாததால் 20-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலமே தண்ணீர் பாய்ச்சப்பட்டு, மாடுகளுக்குத் தேவையான தீவனங்கள் பயிரிடப்படுகிறது.

கொத்தரி சாலையை மையமாகக் கொண்டு, பண்ணை இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவு, பள்ளத்தூர் திருச்சி ரோட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்தப் பிரிவில் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இன்று வரைக்கும் இப்பகுதி பாதுகாக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது. தற்போதைய பி.ஜே.பி. அரசாங்கம் பெங்களூரு, ஓசூர், சேலம், தஞ்சாவூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் உடான் திட்டத்தில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கியிருக்கிறது. செட்டிநாட்டில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் பலகோடி மதிப்பில் கட்டுவதற்குத் தயாராகி வருகிறது. காரைக்குடி பகுதியைச் சுற்றி ஏராளமான சினிமா டி.வி. சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, உள்நாட்டு விமான நிலையம் அமைக்க உகந்த இடமாகச் செட்டிநாடு கால்நடைகள் பண்ணை இருக்கிறது. தமிழக அரசு விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கும்பட்சத்தில் இழப்பீடாக மத்திய அரசு 22 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்தே கால்நடைகள் பண்ணையை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்" என்றார், மிகவும் தெளிவாக.

காரைக்குடி தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் சாமி.திராவிடமணி, “எங்க தொகுதி எம்.பி-யாக இருந்த ப.சிதம்பரத்திடம், 'செட்டிநாட்டில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை மனு கொடுத்தோம். அதற்கான ஆவணங்களைத் தயார்செய்து, சிவில் ஏவியேசன் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு அனுப்பிவைத்தோம். அப்போது பிரதமர் அலுவலகத்திலிருந்து, 'செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் ஆரம்பிக்க முடியாது. விருதுநகரில் விமான நிலையம் அமைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மதுரை, திருச்சியில் விமான நிலையம் இருக்கிறது. ஆகவே, செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க முடியாது' என்று பதில் வந்தது. அதற்கு, 'மதுரைக்கும், விருநகருக்கும் 45 கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கிறது' என்று பதில் அனுப்பினோம்.

அழகப்பா பல்கலைக்கழகம், சிக்ரி, மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பயிற்சி மையம், பெரிய வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை காரைக்குடிக்குச் சிறப்புச் சேர்த்துவருகிறது. மேலும் அறிஞர்கள், தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்கள் எனப் பலரும் காரைக்குடியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் ஆலயம், செட்டிநாடு அரண்மனை போன்றவையும் சுற்றுலாத்தலமாக இருக்கிறது. இதனால், இங்கு வெளிநாட்டுப் பயணிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். பனை ஓலைப் பொருள்கள், செட்டிநாடு பலகாரம், ஆத்தங்குடி டைல்ஸ், அரியகுடி குத்துவிளக்கு என ஏராளமான பொருள்கள் 100 கிலோ மீட்டர் தரைவழி மார்க்கமாகக் கார், பஸ் மூலமாகத் திருச்சி சென்று விமான மூலம் அனுப்ப வேண்டி இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராக வலம்வந்த ப.சிதம்பரம் தன் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தில் விமான நிலையம் கொண்டுவர தடையாக இருந்தார் என்று பி.ஜே.பி-யினர் செய்துவரும் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்பதற்காக, அவரின் நிழாக வலம்வரும் காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்திடம் பேசினோம். "காரைக்குடி செட்டிநாட்டில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க, இந்தத் தொகுதியிலிருந்து யாருமே மனு கொடுக்கவில்லை. அப்படியொரு ப்ரொபோசல் காரைக்குடியிலிருந்து சென்றிருந்தால், எங்களுக்குத் தெரியாமல் இருக்காது. சிதம்பரத்திடம் காரைக்குடி வர்த்தகச் சங்கம், உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று ஒரு தடவைகூட மனு கொடுக்கவில்லை. செட்டிநாட்டில், உள்நாட்டு விமான நிலையம் பி.ஜே.பி. கொண்டுவந்தால் எங்களுக்கும் நல்லதுதான். சிதம்பரம் பெயரைக் கெட்டபெயராக்க வேண்டும் என்று இப்படித் திரித்துவிடுகிறார்கள்' என்றார்.

நல்லது நடந்தால் சரிதான்.