அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!

தன்னிகரில்லா தமிழகம்
News
தன்னிகரில்லா தமிழகம்

சந்திப்பு: சக்திவேல்

“திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு பின்தங்கிவிட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை'

- பொத்தாம் பொதுவாக நம் புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கும் பொய்களில் முக்கியமானது இது. தமிழ்நாட்டில் சீரழிவுகள் இருக்கின்றனதான். ஊழலும் லஞ்சமும் குளறுபடிகளும் தலைவிரித்தாடுகின்றனதான். தனிப்பட்ட சில குடும்பங்கள் மட்டும் கோடிகோடியாகக் குவிக்கின்றனதான். இது எதையுமே மறுப்பதற்கில்லை. இவ்வளவு சீரழிவுகளுக்கு இடையிலும் வளர்ச்சியை நோக்கி முன்வரிசையில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது தன்னிகரில்லாத தமிழ்நாடு!
இந்த வளர்ச்சிக்குத் தனிப்பட்டவிதத்தில் எந்தக் கட்சியுமே சொந்தம் கொண்டாடிவிட முடியாது. மாநிலத்தைக் காங்கிரஸ் ஆட்சி செய்த காலம்தொடங்கி, இன்றைய கழக ஆட்சிகள் வரையிலும் தொடரோட்டமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் மறுமலர்ச்சி இது. காமராஜர், பக்தவத்சலம் என்று காங்கிரஸ் முதல்வர்களின் காலத்திலும், அதைத் தொடர்ந்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,  ஜெயலலிதா என்று கழகங்களின் முதல்வர்கள் காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கான பலன் இது.

தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியில் மத்தியில் ஆட்சி செய்திருக்கும் காங்கிரஸ், ஜனதா, எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசுகளுக்கும், தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் பி.ஜே.பி-க்கும் பங்கிருக்கிறது. மக்களுக்காகவும், மக்களின் வாழ்வாதாரங்களுக்காகவும், இயற்கை வளங்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிவரும் இடதுசாரி இயக்கங்கள், ம.தி.மு.க., பா.ம.க., திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., புதிய தமிழகம் மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள், சிறுபான்மை யினருக்கான கட்சிகள், எண்ணற்ற சமூக அமைப்புகள், விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூகப் போராளிகள்தொடங்கி, சாமான்யப் பொதுமக்கள்வரை தமிழகத்தின் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.

சரி, வளர்ச்சி... வளர்ச்சி என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடவில்லை. இதற்கான விரிவான தரவுகளை முன் வைக்கிறார் சுரேஷ் சம்பந்தம். தமிழகத்தில் பெயர் சொல்லும் தொழில் முனைவோர்களில், முக்கியமானவர் சுரேஷ் சம்பந்தம். திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டுக்கால ஆட்சியில், தமிழகம் பின்தங்கிவிட்டது என்பதான அசட்டுக் கற்பிதங்களைத் தகர்க்கின்றன, அவர் முன்வைக்கும் தரவுகளும், தகவல்களும்.

தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!

“தமிழ்நாடு தொழில் துறையின் வளர்ச்சியை, மற்ற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் எந்த அளவுக்கு முன்னோக்கி வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஜி.டி.பி கணக்கீட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். தொழிற்சா லைகள் அதிகம் அமைந்திருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தொழிற்சாலை வேலைவாய்ப்பு களிலும் முதலிடத்தில் இருக்கிறோம். சுமார் 40,000 தொழிற்சாலைகள் தமிழகத்தில் இருக்கின்றன. கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் இந்தத் தொழிற் சாலைகளில் பணிபுரிகிறார்கள். இந்தத் தொழில் வளர்ச்சியை அடைய, மற்ற மாநிலங்களுக்கு இன்னும் பல பத்தாண்டுகள் ஆகலாம்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘தமிழ்நாட்டின் தொழில் துறையை வலுவாக்கிய காரணிகளாக எதைப் பார்க்கிறீர்கள்?’’

‘‘இரண்டு காரணிகளை முக்கியமானதாக நினைக்கிறேன். ஒன்று, கல்வியில் நாம் காட்டிய அக்கறை. மற்றொன்று, சமூக நீதியில் நமக்கு இருந்த தெளிவு. முதலில் பள்ளிக்கல்வியைப் பார்ப்போம். 1950-ம் ஆண்டில், தமிழகத்தில் 6,000 ஆக இருந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை, 1960-ம் ஆண்டுக்குள் 27,000 என்னும் அளவுக்கு உயர்த்தினார்கள் நம் ஆட்சியாளர்கள். கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். இதன்மூலம், 77 விழுக்காடு குழந்தைகளை நம்மால் பள்ளிக்கு அழைத்துவர முடிந்தது. இதுதான் அடித்தளம். உயர்கல்வியை எடுத்துக்கொண்டால், 1980 - 2000 காலகட்டத்தில், 550-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாகின. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு கல்வி சார்ந்த முன்னெடுப்பைப் பார்க்க முடியாது. அதனால்தான், இந்தியாவின் 100 சிறந்த கல்வி நிலையங்களில் 37 கல்வி நிலையங்கள், இப்போது தமிழகத்தில் இருக்கின்றன. மத்திய மனிதவள அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் விகிதம், 25.2 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் 46.9 விழுக் காட்டினர் உயர் கல்வி பெறுகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையே கல்வி வளர்ச்சி தான். அந்த விதத்தில், தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாகக் கல்வி அமைந்திருக்கிறது.

அடுத்தது சமூகநீதி. இங்கே சமூக நீதியை, இடஒதுக்கீடு என்பதாக மட்டுமே சுருக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. சில அரசியல் கட்சிகளின் பிரசாரமும் அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது. ஆனால், சமூகநீதி என்பது வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல... அதுதான், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையும்கூட. தமிழகம், இன்று பெற்றிருக்கும் வளர்ச்சியை, ‘Inclusive Growth’ என்று சொல்கிறார்கள், பொருளாதார அறிஞர்கள். நாங்கள் அதை, Compounding Effect என்போம். அதாவது, கொஞ்சம்பேரைப் பல அடுக்கு முன்னேற்றுவதைவிட, அதிகம் பேரைச் சில அடுக்கு முன்னேற்றி இருக்கிறோம். இதனால்தான், இந்தியாவிலேயே மிகச்சிறந்த நகர்ப்புற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்களை நகர்ப்புறவாசிகளாக மாற்றியிருக்கிறோம். அதாவது, அவர்களை ஏழை வர்க்கம் என்பதில் இருந்து நடுத்தர வர்க்கம் என்ற நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இது, மிகப்பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டின் தொழில் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய தேதியில், தமிழ்நாட்டில் மட்டும் பத்து விமான நிலையங்கள் இருக்கின்றன. இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இத்தனை விமான நிலையங்கள் இல்லை. தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி, மற்ற மாநிலத்தவரைவிட அதிகளவில் இருக்கிறது என்பதையே, இது நமக்கு உணர்த்துகிறது. இதற் கெல்லாம் காரணம், அந்தச் சமூகநீதி.

தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று மார்தட்டுகிறோம் அல்லவா? அது, தற்செயலானது அல்ல. ‘தமிழர்கள் அடிப்ப டையிலேயே அமைதி யானவர்கள், அதனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. எந்த ஒரு சமூகத்தில் ஏழை களுக்கும் பணக்காரர்களுக்குமான விகிதம் குறைவாக இருக்கிறதோ, அந்தச் சமூகமே அமைதிமிகு சமூகமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் அற்ற நிலையில் மக்கள் வாழ்வார்கள். தமிழகம், அப்படிப்பட்ட சமூகம்; தமிழர்கள் அப்படி வாழும் மக்கள். இதற்குக் காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்திருப்பதும், பொருளாதாரச் சுதந்திரம் அடைந்திருப்பதுமே. இது, எல்லாமே சமூகநீதி தந்தது என்பதை மறக்கக்கூடாது. இனியாவது, சமூகநீதி என்பதை இடஒதுக்கீடு என்று மட்டுமே சுருக்கக் கூடாது. இன்னொரு புறம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு, நம் இருமொழிக் கொள்கையும் வழி அமைத்தது. Promoted English, Protected Tamil என்ற வகையில் அமைக்கப்பட்ட அந்தக் கொள்கையால்தான், தமிழகம் நவீன மாநிலமானது.

PAI (Public Affairs Index) என்றொரு கணக்கெடுப்பு முறை இருக்கிறது. அரசுத் துறைகளில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள், இந்திய மாநிலங்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிடுவார்கள். அதுதான் இந்த P.A.I. அதில் கட்டமைப்பு, பொருளாதாரச் சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு போன்ற அலகுகளில், தமிழ்நாட்டுக்கு முதலிடம் அளித் திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்தலில், இரண்டாம் இடத்தில் இருக்கிறது தமிழகம் என்று சொல்லி யிருக்கிறார்கள். இந்த அதிகாரிகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் களும் அல்ல. ஆனால், தமிழ்நாட்டைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இருக்கி றார்கள். ஆனால், நாம் ‘தமிழகம் தாழ்ந்து கிடக்கிறது’ எனும் பொய்யை, நம்ப விரும்புகிறோம்; நம்பவும் செய்கிறோம்.’’

‘‘ஆனால், ‘டாஸ்மாக் வருமானத்தால்தான் தமிழ்நாடு அரசு ஓடுகிறது’ என்கிறார்களே?’’

‘‘இது, இன்னொரு பொய். தமிழ்நாட்டின் மொத்த ஜி.டி.பி 16 லட்சம் கோடி ரூபாய். அதில், டாஸ்மாக் வருமானம் 27,000 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது, மொத்த ஜி.டி.பி-யில் 1.67 விழுக்காடு மட்டுமே டாஸ்மாக்கின் பங்கு. ஆனால், என்னவோ டாஸ்மாக்கால் மட்டுமே தமிழ்நாடு இயங்குகிறது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆட்சியாளர்கள். டாஸ்மாக்கை மூடிவிட்டால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும் என்று திரும்பத்திரும்பச் சொல்லி வருவதெல்லாம் உண்மையல்ல. இந்த விஷயத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுகிப் பார்க்க வேண்டும்.’’

தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!

‘‘மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கான சூழல் எப்படியிருக்கிறது?’’

‘‘சமீபகாலமாக, தமிழ்நாட்டின் தொழில் முனைவு கொஞ்சம் தேங்கிவிட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக, ஆட்சியாளர்கள் தொழில் முனைவில் அக்கறை காட்டாததால், அந்தத் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது உலக முதலீட்டாளர் மாநாடு போன்ற சில முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்மீது விமர்சனங்கள் இருந்தாலும், அந்த முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும். உண்மையில், நமக்கே தெரியாமல் நாம் மத்திய அரசோடு ஒரு பொருளாதார யுத்தத்தை நடத்தி வருகிறோம். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தீவிர வலதுசாரி பொருளாதாரத்தை நோக்கிப் போவதைக் கண்கூடாகவே பார்க்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதாரம், ‘சோஷலிசம்’ சார்ந்த பொருளாதாரம். நாம், அமெரிக்கா போன்ற நாடுகளைப்போல ஆக வேண்டும் என்று செயல்படுவதைவிட, நார்வே போன்ற நாடுகளைப்போல ஆக வேண்டும் என்று செயல்படுபவர்கள். ஆனால், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், நமக்குப் பெரிய ஆபத்தாக மாறிவருகின்றன. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள், சிறுகுறு தொழில்களைச் சிதைத்துப்போட்டிருக்கின்றன. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது பெரிய நிறுவனங்களைவிட, சிறுகுறு நிறுவனங்களையே அதிகளவு சார்ந்திருக்கிறது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, அதற்கு வேட்டுவைக்கப் பார்க்கிறது. ஏன் இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், அதற்குப் பின்னால் பெருமுதலாளிகளின் பங்கு இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, மேலோட்டமாகப் பார்த்தால், இந்திய அரசை அரசியல்வாதிகள் இயக்குவதாகத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. அப்படி நம்பவைக்கப்படுகிறோம்.

‘‘தொழில் முனைவு சார்ந்த புரிதல் தமிழ்ச் சமூகத்தில் எந்தளவுக்கு இருக்கிறது?’’

‘‘அடிப்படையில், தொழிலுக்கும் தொழில் முனைவுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. தொழில் என்பது இங்கே ஏற்கெனவே இருப்பதை, அப்படியே தொடர்வது. ஆனால், தொழில் முனைவு என்பது புதிய கண்டுபிடிப்புகளை (Innovation) அடிப்படையாகக் கொண்டது. அந்தப் புரிதல் முதலில் ஏற்பட வேண்டும். அடிப்படையில், ஒன்றை உணர வேண்டும். தமிழ்நாடு உலக அரங்கில் கவனிக்கப்படுவதற்கு, நம் மொழியின் பெருமை மட்டுமே காரணம் அல்ல. தமிழ்ச் சமூகம் வணிகம்சார்ந்து செய்த சாதனைகளும், அந்த அங்கீகாரத்துக்கு மிகமுக்கியக் காரணம். ஆனால், இப்போது தொழில் செய்தலையே வெறுக்கும் சமூகமாக மாறி நிற்கிறோம். குஜராத்தில் பனியாக்கள் போல தமிழ்நாட்டில் நகரத்தார் சமூகம் இருந்தார்கள். அவர்களெல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.’’

‘‘தமிழ்நாட்டில், ‘ஸ்டார்ட் அப்’களின் நிலை எப்படியிருக்கிறது?’’

‘‘நாம் இன்றைய இளைஞர்களிடத்தில், ‘ஸ்டார்ட் அப்’கள் குறித்து அதிகம் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், இன்னமும் நம் தொலைக்காட்சிகள் மெகா சீரியல்களை மட்டுமே கட்டிக்கொண்டு அழுகின்றன. மேற்குலக நாடுகளின் தொலைக்காட்சிகள், அதிக அளவில் ‘ஸ்டார்ட் அப்’ குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அது, இளைஞர்களுக்கு ஒரு விழிப்பு உணர்வை அளிக்கிறது. அதேநிலை இங்கேயும் ஏற்பட வேண்டும். ஆனாலும், இன்றைய இளைஞர்களில் ஒரு தரப்பினர், அவர்களாகவே ‘ஸ்டார்ட் அப்’களைப் பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்; அதைப் பற்றி விவாதிக்கிறார்கள். முன்பெல்லாம், இன்ஃபோசிஸ், டி.சி.எல் போன்ற பெருநிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வதையே அதிகம் விரும்பினார்கள். இப்போது, சிறியளவிலான ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் மனப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவே பெரிய மாற்றம்தான். இந்த மாற்றம், ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளை ஆரம்பிக்கும் அளவுக்கு, நம் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு, ‘ஸ்டார்ட் அப்’கள் கொண்டாடப்பட வேண்டும். அப்படிக் கொண்டாடப்பட்டாலே, ‘ஸ்டார்ட் அப்’களை நோக்கி மாணவர்கள் கவனம் திருப்புவார்கள். அதேநேரம், அதில் ஏற்படும் தோல்விகளையும் கொண்டாடத் தெரிந்திருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, மென்பொருள் துறையில் ‘ஸ்டார்ட் அப்’ முயற்சிகளில் இறங்கும் இளைஞர்கள், முதல் முயற்சியிலேயே வெல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் அவர்கள் வென்று காட்டுகிறார்கள். முதல்முறை 100 பேரில் 5 பேர் வென்றால், இரண்டாவது முயற்சியில் 20 பேர் வெல்கிறார்கள். முதல்முறை செய்த தவறுகளைக் களைந்து, அடுத்த முறை இன்னும் உற்சாகத்துடன் இறங்குகிறார்கள். அதனால்தான், மென்பொருள் துறையில் அதிக ‘ஸ்டார்ட் அப்’கள் சாத்தியமாகி வருகிறது. இந்த மாற்றத்தைச் சில்லறை வணிகம், உற்பத்தித் துறையிலும் கொண்டுவர வேண்டும்.

தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!
தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!

அதற்கு, invention மற்றும் innovation என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். புதிய ‘ஸ்டார்ட் அப்’களில் வெற்றிபெற, Invention மட்டுமே போதாது. கூடவே Innovation-ம் இருக்க வேண்டும். Invention என்பது வெறுமனே ஒரு ஐடியாவைப் பிடிப்பது மட்டுமே. ஆனால், innovation என்பது, பிடித்த ஐடியாவை மார்க்கெட்டுக்குக் கொண்டு வருவது, அதை வைத்து முதலீடு திரட்டுவது, திரட்டிய முதலீட்டைச் சரியாக சந்தைப்படுத்துவது எனப் பலமுகங்கள் கொண்டது. சுருக்கமாக, innovation என்பது, ஒரு Value exchange. அதை கைக்கொள்ள, தொழில் முனைவில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்கள் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஸ்டார்ட் அப்களில் ஏற்படும் தோல்விகளைக் கடக்க முடியும். Innovation இல்லாத invention பயனில்லாதது.’’

‘‘தொழில் முனைவோராக மாற விரும்புவோர், முதலில் கருத்தில்கொள்ள வேண்டியது?’’

‘‘லாபநோக்கு என்பது இரண்டாம் பட்சமாகவே இருக்க வேண்டும். மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணமே பிரதானமாக இருக்க வேண்டும். People, Planet, அப்புறமே Profit. இந்த எண்ணம் இல்லாததால்தான், ஸ்டெர்லைட் சறுக்கியது. அந்த நிறுவனம் மக்களை மதிக்கவில்லை. சூழல் சீர்கேட்டைப் பொருட்படுத்தவில்லை. இறுதியில், அவர்களின் அலட்சியம், அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவும் போக, சுற்றுப்புற கிராம மக்களை அதிகளவில் பணியில் அமர்த்தவும் இல்லை ஸ்டெர்லைட் நிர்வாகம். அங்கே பணிபுரிந்தவர்களில் 30 விழுக்காட்டினர்கூட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அப்புறம் எப்படி மக்கள் ஆதரிப்பார்கள்? இதையெல்லாம், புதிய தொழில் முனைவோர்கள் புரிந்துகொண்டு, முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், சூழலை நாசப்படுத்தாத விதத்திலும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. நம் அடுத்தகட்ட தொழிற்செயல்பாடுகள் அதை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.’’

‘‘ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழகத்தில் தொழில் துறையின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?’’

‘‘தமிழகத்தின் தொழில் துறை வலுவாகவே இருக்கிறது. ஆனால், இது மட்டும் போதாது. தொழில்சார் முன்னெடுப்பில், நம் அடுத்தகட்ட இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாம் நிர்ணயிக்க வேண்டும். அரசும், தொழிற்துறையினரும், இளைஞர்களும், மாணவர்களும் அதை நோக்கியே செயல்பட வேண்டும். அதாவது, 16 லட்சம் கோடி என்றிருக்கும் ஜி.டி.பி என்கிற அளவை, 64 லட்சம் கோடி அளவுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மண்ணின் சூழலையும், மக்களின் அமைதியையும் பாதிக்காத தொழில் முன்னெடுப்புகளால் அதைச் சாத்தியப்படுத்த வேண்டும்.’’

ஓவியங்கள்: சந்தோஷ் நாராயணன்; அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி