Published:Updated:

"இன்றைய ஆட்சியாளர்களும் தாண்டவமூர்த்தியின் கட்டுப்பாட்டில்தான்!" ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா? மினிதொடர்-4

சசிகலா உறவினர்கள், சபாநாயகர், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார்கள். சுதாகரன் திருமணத்தைப் போன்று காஸ்ட்லி திருமணமாகத் தாண்டவமூர்த்தி நடத்தினார். சிறுதாவூர் பங்களாவில் அடியெடுத்து வைத்த ராசிதான் இந்த உச்சத்திற்குக் காரணம்.

"இன்றைய ஆட்சியாளர்களும் தாண்டவமூர்த்தியின் கட்டுப்பாட்டில்தான்!" ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா? மினிதொடர்-4
"இன்றைய ஆட்சியாளர்களும் தாண்டவமூர்த்தியின் கட்டுப்பாட்டில்தான்!" ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா? மினிதொடர்-4

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என யாருமே சிறுதாவூர் பங்களா பக்கம் வருவது கிடையாது. பங்களா முழுக்கவே தாண்டவமூர்த்தி என்பவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தாண்டவமூர்த்தியின் மாமனார் ஏகாம்பரம்தான் அங்குள்ள நிலத்தில் நெல் பயிரிடுகிறார். நிரந்தரப் பணியாளர்கள் எனப் பங்களாவில் தற்போது யாரும் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை நிழல் மனிதராக வலம்வந்த தாண்டவமூர்த்தி, தற்போது தினகரன் அணியில் சேர்ந்து மாவட்ட அம்மா பேரவைத் துணைச் செயலாளராக அரசியலில் கோலோச்சத் தொடங்கிவிட்டார். தாண்டவமூர்த்தி வளர்ந்த கதை 'படையப்பா', 'அண்ணாமலை' போன்ற படங்களில் குறுகிய காலத்தில் உச்சம் தொடும் ரஜினி கதைகளையெல்லாம் விஞ்சும்.

யார் இந்த தாண்டவமூர்த்தி?

தாண்டவமூர்த்தியைப் பற்றித் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். தலையில் தயிர் பானை சுமந்துகொண்டு விற்பனை செய்வார். சசிகலா சிறுதாவூரில் தங்கும்போது விவசாயக் கூலி செய்துவந்த இவரிடம், பங்களா நிலத்தில் எந்தப் பயிர் வைக்கலாம் என சசிகலா ஆலோசனை கேட்பார். இவரும் வெகுளியாகப் பதில் அளிப்பார். படிப்படியாக ஏகாம்பரத்திடம் சசிகலா ஆலோசனை செய்வது தொடர்ந்தது. இதனால் சசிகலா பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு ஏகாம்பரத்துக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவில் பயிரிடப்படும் பொறுப்பை ஏகாம்பரத்திடம் ஒப்படைத்தார், சசிகலா. சிறுதாவூர் பங்களாவுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் அதிகாரம் ஏகாம்பரத்துக்கு வந்தது. ஏகாம்பரத்தின் மகளுக்கும் அருகில் உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. தாண்டவமூர்த்தியும் அவரின் அப்பா கோவிந்தசாமியும் அப்போது ஒரு சாதாரண விவசாயக் கூலித் தொழிலாளிகள். தன்னுடைய இருசக்கர வாகனத்துக்கு மாதத் தவணைகூடக் கட்டமுடியாதவராக இருந்தார், தாண்டவமூர்த்தி. இந்தநிலையில் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற தாண்டவமூர்த்தியின் திருமணத்துக்கு சசிகலாவே நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். இது, ஏகாம்பரத்தின் செல்வாக்கை உயர்த்தியது. தாண்டவமூர்த்தியும் சசிகலாவுக்கு அறிமுகமானார். அப்போதிலிருந்து தாண்டவமூர்த்திக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

வில்லங்கத்தால் வந்த விஸ்வரூபம்!

சிறுதாவூர் பங்களாவுக்கு நிலம் வாங்கியதில், ஒருசில இடங்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை செய்தது தெரியவந்தது. அதைச் சரி செய்வதற்காக அதிகாரிகளைப் பார்த்து அவர்கள் சொல்லும் எடுபிடி வேலைகளைச் செய்யும் பொறுப்பைத் தாண்டவமூர்த்தியிடம் ஒப்படைத்தார், சசிகலா. இதை, தனக்குச் சாதமாக்கிக் கொண்ட தாண்டவமூர்த்தி, அதிகாரிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு சசிகலாவுக்கே தெரியாமல் பல வில்லங்க வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இவர் பெயருக்கு மற்றவர்களின் நிலங்களை மிரட்டி வாங்குவதற்கும் ரியல் எஸ்டேட் செய்வதற்கும் அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்டார். 

கைப்பாவையாக மாறிய அரசு எந்திரம்!

தாண்டவமூர்த்தியும் அவரின் தம்பி குமாரும் சேர்ந்து ‘இமயம் குரூப்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்கள். இவர்கள் திருப்போரூர் பகுதியில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருப்போரூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தாண்டவமூர்த்தியின் செல்வாக்கு உயர்ந்தது. அரசு இயந்திரத்தை, தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதிகாரிகளும் தாண்டவமூர்த்திக்கு கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.  குமார், துரைப்பாக்கத்தில் பலகோடி மதிப்பில் வீடு கட்டினார். அரசு அதிகாரிகள் மையம் கொள்ளும் இடமாக அந்த இடம் அமைந்துவிட்டது.

தடல்புடலாக தம்பி திருமணம்!

ஜே.சி.பி., மணல், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என மல்டி பிசினஸ் மேனாக தற்போது வலம் வருகிறார், தாண்டவமூர்த்தி. பதிவுத்துறை, வட்டாட்சியர் அலுவலகம் என எல்லா அலுவலகங்களிலும் இவர் சொல்வதுதான் வேதவாக்காக இருந்துவருகிறது. கடந்த 2013-ல்  தாண்டவமூர்த்தியின் தம்பி குமாரின் திருமணத்துக்காகச் சென்னை அடையாற்றில் ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் என்ற காலியிடத்தை வாடகைக்கு எடுத்தனர். மாநாட்டுக்குப் புகழ்பெற்ற ‘பந்தல்’ சிவா-வின் மேடை, ‘தேவா’ லைட்மியூசிக், ராட்சத க்ரேன் மூலம் வீடியோ என எல்லோரும் வாய்பிளக்கும் அளவுக்குத் திருமணம் நடந்தது. திருப்போரூர் பகுதியில் உள்ளவர்களுக்கெல்லாம் பத்திரிகையுடன் ரூ. 300 மதிப்புள்ள தட்டும் கொடுத்தார்கள். சசிகலா உறவினர்கள், சபாநாயகர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் அந்த திருமணத்துக்கு வந்திருந்தார்கள். சுதாகரன் திருமணத்தைப் போன்று காஸ்ட்லி திருமணமாக தாண்டவமூர்த்தி நடத்தினார். சிறுதாவூர் பங்களாவில் அடியெடுத்து வைத்த ராசிதான் இந்த உச்சத்துக்குக் காரணம்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அவரின் செல்வாக்குக் குறைவதாய் இல்லை. இன்றளவும் அதிகாரிகள் தாண்டவமூர்த்திக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு உதாரணமாக தற்போது அவர் எடுத்துள்ள கான்ட்ராக்ட் அரசு எந்திரத்தில் அவருக்குள்ள அதிகாரத்தைக் காட்டுகிறது. ‘இமயம் குரூப்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பாக திருப்போரூர் அடுத்துள்ள இள்ளளூர் பகுதியில் வாங்கிய நிலத்தை 'வொண்டர் லேண்ட்' என்ற தீம் பார்க்  நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அந்த இடத்தில், 200 கோடி மதிப்பிலான தீம் பார்க் அமைக்கும் புராஜக்டிற்கு மண் நிரப்புதல், சாலை அமைத்தல், சுற்றுச் சுவர் அமைத்தல் என எல்லா கான்ட்ராக்டும் இவர்தான் எடுத்துள்ளார். இந்த தீம் பார்க் அமையும் இடத்துக்கு மண் எடுப்பதற்காக அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி இருக்கிறார். அதிகாரிகளும், இவர் தினகரனின் பினாமி எனத் தெரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வனப்பகுதியை ஒட்டி வருவதால் அந்தப் பகுதியில் தீம் பார்க் அமைக்கக் கூடாது. வனவிலங்குகள் பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் பிரச்னை எழுப்பி வருகிறார்கள். தீம் பார்க் நிலத்தில் ஐந்து நீர்நிலைக் குட்டைகள் இருக்கின்றன. அதையெல்லாம் ஆக்கிரமித்து மண்ணைக் கொட்டி நிரப்பி வருகிறார்கள்” எனத் திருப்போரூர் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

இதுகுறித்து தாண்டவமூர்த்தியிடமே பேசினோம். ”என் மாமனார் அழைப்பின் பேரில்தான் என்னுடைய கல்யாணத்துக்கு சசிகலா வந்திருந்தார். என்னுடைய தம்பி திருமணத்துக்கு வரவில்லை. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்குப் பணம் கொடுத்தால்தானே நிலம் கொடுப்பார்கள். அம்மா, சின்னம்மா பெயரைச் சொன்னா நிலத்தைக் கொடுத்துவிடுவாங்களா? இள்ளளூர் பகுதியில் மண் எடுப்பது தொடர்பாக அந்த நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும். 100 லாரிகளில் மண் எடுக்கிறார்கள். எங்களின் லாரிகள் பழுதாகி நிற்கின்றன. அதற்கும், அந்த நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவங்க பேரைச் சொல்லி பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் எவ்வளவோ பேர் பணம் சம்பாதித்திருப்பார்களே? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாராவது, எதையாவது என்மீது பழிசுமத்திக் கொண்டிருப்பார்கள்.  நான் உண்டு… என் வேலை உண்டு எனச் செல்பவன் நான்” என்றார்.

இன்றளவும் சிறுதாவூர் பங்களா தாண்டவமூர்த்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உள்ள அதிகாரிகளும் தாண்டவமூர்த்திக்கு நெருக்கமாய் இருக்கிறார்கள்!

...தொடரும்.