Published:Updated:

ராமேஸ்வரம்: `தமிழக அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார்!'- பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

`2021 மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஆண்டு. இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்.’

``இரு பெரும் தலைவர்களான கருணாநிதி - ஜெயலலிதா இல்லாத சூழலில், தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார்'' என்று கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

நிழல் கிரகங்களான ராகு - கேது நேர் எதிர் ராசியில் இருப்பவை. வலமிருந்து இடமாகச் சுற்றும் இந்த கிரகங்கள், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரே நாளில் இடப்பெயர்ச்சி நிகழும் தினத்தில், அவற்றுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்றுக் காலை தன் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்திருந்தார். அங்கிருக்கும் புரோகிதர் சாமிநாத சர்மா என்பவரின் வீட்டில் நடைபெற்ற திலஹோமம் மற்றும் ராகு - கேது இடப்பெயர்ச்சிக்கான சிறப்பு யாகத்தில் பங்கேற்று வழிபாடு செய்தார். 30 புரோகிதர்களுடன் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்த சிறப்பு யாகத்துக்குப் பிறகு கார் மூலம் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் ஆகியோர் அக்னி தீர்த்த கடற்கரைக்குச் சென்றனர். அங்கு புரோகிதர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தை காரில் இருந்தபடியே விஜயகாந்தும் அவரது குடும்பத்தினரும் தெளித்துக்கொண்டனர்.

ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம்
ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம்

மாலையில் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, விநாயகர், முருகன் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா,``எங்கள் மேலாளரின் திருமணத்துக்காக ராமநாதபுரம் வந்தோம். அப்படியே ராகு - கேது பெயர்ச்சி நாளான இன்று ராமேஸ்வரம் கோயில் திறக்கப்பட்டதால், குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தோம். சாமி தரிசனம் செய்த மனநிறைவோடு சென்னைக்குச் செல்கிறோம். தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது. ஆனால், தை மாதத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கேப்டன் அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார். எப்போதுமே தனித்துப் போட்டியிட்டுக் களம்கண்ட இயக்கம் தே.மு.தி.க. அதன் பின்னர் கூட்டணிக்குச் சென்றிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. அதுவரை பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை நாளை என்பதுகூட ரொம்ப தூரம் எனச் சொல்லப்படுகிறது.

`எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா?' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

கருணாநிதி – ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. 2021 மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் ஆண்டு. இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும். அ.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. இந்நிலையில், மக்கள் எடுக்கும் முடிவே ஆட்சியைத் தீர்மானிக்கும். நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், ஸ்டாலின் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார். ரஜினி, கட்சி ஆரம்பித்தபிறகுதான் அவருடன் கூட்டணியா என்பது குறித்து கருத்து சொல்ல முடியும்’’ எனச் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

பேட்டியின்போது தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றியச் செயலாளர் திலீப்காந்த், ராமேஸ்வரம் நகரச் செயலாளர் முத்துக்காமாட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு