Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் குறைந்தது!

Vikatan Correspondent
பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் குறைந்தது!
பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் குறைந்தது!
பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் குறைந்தது!

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 115 அமெரிக்க டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 46 டாலர்களாக சரிவடைந்துள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 9 முறை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.71ம் குறைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 வீதம் மத்திய அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) உயர்த்தியது. கடந்த இரண்டரை மாதங்களுக்குள் கலால் வரி உயர்த்தப்படுவது இது நான்காவது முறையாகும். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ.20,000 கோடி வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசுகளும் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

வாட் வரி மாற்றத்துக்கு பிறகு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் 56 காசும், டீசலின் விலை 2 ரூபாய் 44 காசும் குறைந்தது. இதனால் சென்னை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 63 ரூபாய் 94 காசில் இருந்து 61 ரூபாய் 38 காசாகவும், டீசலின் விலை 53 ரூபாய் 78 காசில் இருந்து 51 ரூபாய் 34 காசாகவும் குறைந்தது.

இதேபோல் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 42 காசும், டீசல் விலை 2 ரூபாய் 25 காசும், கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 2 காசும், டீசல் விலை 2 ரூபாய் 1 காசும், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசும், டீசல் விலை 2 ரூபாய் 44 காசும் குறைந்தது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.