Published:Updated:

"400 முஸ்லிம் குடும்பங்கள் வேற பக்கம் போயிட்டாங்க..." - அயோத்தி விசிட் ரிப்போர்ட்

அயோத்தி
அயோத்தி

அதான் ராமர் கோயில் கட்டப்போறாங்களே. தாராளமா கட்டட்டும். நல்லபடியா எல்லாரும் வந்து போகிற இடமா அயோத்தி மாறட்டும். அவங்க அரசாங்கம். கோர்ட்டு தீர்ப்பு. அதை ஏத்துக்கிட்டுதானே ஆகணும்.

அயோத்தியிலிருந்து ஃபைஸாபாத் செல்லும் வழியில் இருக்கிறது இக்பால் அன்சாரியின் வீடு. சிறிய வீடு அது. வீட்டின் எதிர்ப்பக்கம் பந்தல் அமைக்கப்பட்டு, இரண்டு காவலர்கள் அமர்ந்திருந்தனர். நமது புகைப்படக் கலைஞர் அசோக்குமார், வீட்டின் முகப்பைப் புகைப்படம் எடுக்க கேமராவை உயர்த்தினார். காவலரின் குரல் எங்களைத் தடுத்தது. "காரில் சார் இருக்கார். அவர்கிட்ட சொல்லி, நோட்டில் ரிஜிஸ்டர் பண்ணுங்க" என்றார். அருகில் நின்றிருந்த காரில் காவல் அதிகாரி அமர்ந்திருந்தார். நம்மைப் பற்றி விசாரித்த வரிடம் விவரம் சொன்னதும், ரிஜிஸ்டரை நீட்டினார். அதில் எங்கள் இருவரின் பெயர், முகவரி, அலைபேசி எண்களை எழுதி வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/333DCug

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் புன்னகைத்து வரவேற்றார் இக்பால். "தமிழ்நாடா... அந்தப் பக்கம்தான் மக்கள் நல்ல தெளிவுடன் இருக்காங்க" என்றார். இக்பால் அன்சாரியின் தந்தை முகம்மது ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முஸ்லிம்கள் தரப்பின் முக்கிய மனுதாரர்களில் ஒருவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. மசூதி இடிக்கப்பட்டபோது, தங்களது குடும்பமே பல மாதங்கள் சோகமாக முடங்கி விட்டது எனக் குறிப்பிட்டார் இக்பால்.

"அந்த நாள்களை நினைக்க விரும்பவில்லை. அது நினைவுக்கு வந்தா, ஒருகணம் நெஞ்சை அறுத்துப்போட்டதுபோல இருக்கும். ஆனா, எதையும் நாங்க மனசுல வெச்சுக்கலை. உண்மையில, இந்த அயோத்தி பூமியில ஒருபோதும் இந்து - முஸ்லிம் சண்டை வந்ததில்லை. அண்ணன் தம்பியாத்தான் பழகுறோம். வியாபாரம் தொடங்கி பல விஷயங்கள்ல ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். பாபர் மசூதி இடிப்புக்கு அப்புறமும் இங்கே இதுதான் நிலைமை. இங்க ஒண்ணுமே இல்லை. ஆனா, இதை வெச்சு நாடு முழுவதும் அரசியல் செய்றாங்க" என்ற இக்பாலிடம் தீர்ப்புகுறித்துக் கேட்டேன். சில நொடிகளுக்கு அவர் ஒன்றும் பேசவில்லை. முகத்தில் வெறுமை தெரிந்தது.

"அதான் ராமர் கோயில் கட்டப்போறாங்களே. தாராளமா கட்டட்டும். நல்லபடியா எல்லாரும் வந்து போகிற இடமா அயோத்தி மாறட்டும். அவங்க அரசாங்கம். கோர்ட்டு தீர்ப்பு. அதை ஏத்துக்கிட்டுதானே ஆகணும். ஏன்னா... என்ன தீர்ப்புன்னாலும் ஏத்துக்குறோம்னு சொல்லிருக் கோமே" என்றவர் குரலில் விரக்தி தெறித்தது. ஐந்து ஏக்கர் நிலம் பற்றிக் கேட்டபோது "எங்கே கொடுக்கப்போறாங்கன்னு தெரியலை. எதுவா இருந்தாலும் சரி" என்றார் எங்கோ பார்த்தபடி. இதைப் பற்றி இதற்குமேல் அவர் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டு விடைபெற்றோம்.

"400 முஸ்லிம் குடும்பங்கள் வேற பக்கம் போயிட்டாங்க..." - அயோத்தி விசிட் ரிப்போர்ட்

*

போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் முன், ராமர் கோயில் அமையவிருக்கும் வளாகத்தை மீண்டும் வலம்வந்தோம். வெளிவட்டப் பாதையில் நடந்தோம். சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு நெருங்கவே முடியாத அளவுக்கு, சந்துகளில்கூட காவலர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்குமே கேமராவைத் தூக்கவிடவில்லை. 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் மஞ்சளும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருபது அடி உயரத்துக்கு கம்பிவேலி போடப்பட்டிருந்தது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அந்த இடத்தைச் சுற்றும்போது ஒரு மசூதி சிதிலமடைந்திருப்பது தெரிந்தது. அதை புகைப்படம் எடுக்க நம் புகைப்பட நிருபர் அசோக்குமார் முயன்றபோது, பத்தடி தள்ளி நின்று இருந்த காவலர் குரலிலேயே தடுத்தார். அவரது குரலில் அவ்வளவு கடுமை. கொஞ்சம் தூரத்தில் வேறொரு மசூதியும் இருந்தது. அங்கு இருந்து பார்த்தால் ராமர் கோயில் அமையவிருக்கும் இடத்தையும் பார்க்கலாம். இரண்டும் கண்பார்வை எட்டும் தூரத்திலேயே அமைந்திருந்தன. அந்த மசூதியில் ஐந்து வேளை தொழுகை நடப்பதாகச் சொன்னார்கள். "மசூதியில் பாங்கு ஒலிக்கும்போது அருகில் இருக்கும் கோயில்களில் பஜனை செய்யும் சத்தமும் ஒலிக்கும். இரண்டும் கலந்து கேட்கும்’’ என்றார் ஒருவர்.

சற்று தூரத்தில் காவலரிடம் ஓர் இளைஞர் வாதிட்டுக்கொண்டிருந்தார். அருகில் சென்றதும் நம் கழுத்தில் கிடந்த மீடியா ஐ.டி கார்டை பார்த்துவிட்ட அந்த இளைஞர், "ஆதார் கார்டு தொலைஞ்சுப்போச்சு. இது, கார்டு தொலைஞ்சதுக்காக நான் கொடுத்திருக்கிற புகார் காப்பி. இது, தொலைஞ்சுபோன ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பி. ரெண்டைக் காட்டினாலும் உள்ளேவிட மறுக்குறாங்க. என் சொந்த ஊர் இது. உள்ளே கடை இருக்கு" என்றார் ஆற்றாமையுடன்.

நான் காவலரிடம், "அவர்தான் புகார் ரசீதும் வைத்திருக்கிறாரே.. அப்புறம் என்ன?" என்று கேட்டேன். காவலர் சற்றே தயக்கத்துடன், "முசல்மான் சார்" என்றார். அவரிடம் வாதாடக்கூடிய சூழல் அங்கில்லை. அந்த இளைஞரின் முகத்தில் அப்பட்டமாக விரக்தி தெரிந்தது. அவரிடம் பேசினேன். "ஒண்ணும் பிரச்னை இல்லை சார். வேற வழியா போனா சுத்து. போய்க்கிறேன். என்ன பண்றது... இங்க எங்க நிலைமை இதுதான். இத்தனைக்கும் நான் பொறந்த ஊர் இது. இந்த மாதிரியான நடவடிக்கைகளால இந்த ராமர் கோயில் அமையவிருக்கும் இடத்தைச் சுற்றி இருந்த சுமார் 400 முஸ்லிம் குடும்பங்கள் வேற பக்கம் போயிட்டாங்க. மூணு நாலு தலைமுறையா சிலர் மட்டுமே இருக்கோம்" என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து சென்றார். அவரது நடையிலும் உடல்மொழியிலும் தெறித்தது கோபம்!

"400 முஸ்லிம் குடும்பங்கள் வேற பக்கம் போயிட்டாங்க..." - அயோத்தி விசிட் ரிப்போர்ட்

*

ராணி பஜார் காலனியில் இருக்கிறது அயோத்தி போலீஸ் ஸ்டேஷன். முகப்பில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்றிருந்தனர். பெரிய அதிகாரிகள் யாரும் ஸ்டேஷனில் இல்லை. பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்தான் இருந்தனர். அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். "இதுவரைக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கலை. ஊர் நார்மலாத்தான் இருக்கு" என்றவர்கள், "எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

"ஃபைஸாபாத்" என்றேன். பலமாகச் சிரித்தார் ஒரு காவலர். குழப்பத்துடன் பார்க்கவே... "அதன் பெயர் ஃபைஸாபாத் இல்லை. அயோத்தி. முன்புதான் அது ஃபைஸாபாத் மாவட்டம். ஒரு வருடத்துக்கு முன்பே எங்கள் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அதை அயோத்தி மாவட்டமாக அறிவித்துவிட்டார். அங்க போய்ப் பாருங்க. பொது இடங்கள்ல ஃபைஸாபாத் என்ற வார்த்தையையே அழிச்சிருப்பாங்க. இனிமே அயோத்தி மட்டும்தான்" என்றார்.

- செய்தியாளர் பரிசல் கிருஷ்ணாவின் அயோத்தி நேரடி விசிட் ரிப்போர்ட்டிங்கை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > நிலம் நீதி அயோத்தி - 3 - மசூதியில் பாங்கு... கோயிலில் பஜனை... இரண்டும் கலந்தே ஒலிக்கும்! https://www.vikatan.com/social-affairs/judiciary/discuss-about-ayodhya-verdict-part-3

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு