Published:Updated:

பெட்ரோல் விலை ரூ.7.50 உயர்வு: கூட்டணி, எதிர்க் கட்சிகள் கண்டிப்பு

பெட்ரோல் விலை ரூ.7.50 உயர்வு: கூட்டணி, எதிர்க் கட்சிகள் கண்டிப்பு
பெட்ரோல் விலை ரூ.7.50 உயர்வு: கூட்டணி, எதிர்க் கட்சிகள் கண்டிப்பு
பெட்ரோல் விலை ரூ.7.50 உயர்வு: கூட்டணி, எதிர்க் கட்சிகள் கண்டிப்பு

புதுடெல்லி: நாட்டில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 7.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

முன் எப்போதும் இல்லாத அளவில், ஒரே நாளில் 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளையில், டீசல், சமையல் எரிவாயு விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

சென்னையில் பெட்ரோலின் விலை, லிட்டருக்கு 69.55-ல் இருந்து ரூ.77.53 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவது இது 16வது முறையாகும்.

கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி லிட்டருக்கு ரூ.1.91 அதிகரிக்கப்பட்டது.
கடந்த 2010-ல் தனது கட்டுப்பாட்டில் இருந்து பெட்ரோல் விலை நிர்ணயிப்பதை அரசு விடுவித்த பிறகு, பெட்ரோல் விலை வெகுவாக உயர்த்தப்பட்டு வந்தது கவனத்துக்குரியது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை, பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.

கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு...

பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தங்கள் கட்சியை கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்காதது ஏன்? என்றும் அவர் கேல்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, இந்த விலை உயர்வைக் குறைக்கச் சொல்லி மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் கடும் கண்டனம்...

பெட்ரோலின் விலையை உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும்,  ஏழை, நடுத்தர மக்கள் மீது தாங்கொணா சுமையை சுமத்தி வஞ்சிக்கும் செயல் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.

மேலும், பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும், மக்கள் விடும் கண்ணீர் மத்திய அரசை வீழ்த்தும் ஆயுதமாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
    
மக்கள் மீது இரு மடங்கு சுமை ஏற்றப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ள பிஜேபி, இந்த விலை உயர்வைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சாதாரண சாமானிய மக்கள் துயரத்துக்கு ஆளாவார்கள் என்று கூறியுள்ளது.

மேலும், பட்ஜெட் கூட்டம் முடிந்து 24 மணி நேரத்துக்குள் மக்கள் தலையில் சுமை வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விலை உயர்வுக்கு ரூபாய் மதிப்பு சரிவே காரணம் என்பதை ஏற்கமுடியாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.