Election bannerElection banner
Published:Updated:

ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

`பெட்ரோல், டீசல் ஏன் ஜி.எஸ்.டிக்குள்ள கொண்டு வரலை? ஜி.எஸ்.டி-யில் 28%க்கு மேல் வரி விதிக்க முடியாது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுங்கவரி 23% மாநில அரசின் வாட் வரி 34%. ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகி விடும். இந்தத் தந்திரம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?' என்ற வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது உண்மையில் சாத்தியம்... சாத்தியமில்லை என்பதைப் பார்க்கும் முன் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். 

2017, ஜூன் 16-ம் தேதி கணக்கீட்டின் படி, கச்சா எண்ணெய் சர்வதேச விலை 47 டாலர். இந்திய மதிப்பில் 3,050 ரூபாய்.

1 பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர். 

இதன் படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு - 19.18 ரூபாய்.

இதன் பிறகு, நுழைவு வரி (Entry Tax), சுத்திகரிப்பு (Refinery Processing), இறக்குமதி செலவு (Landing Cost) மற்றும் இதர இயக்கச் செலவுகள் (Operational Costs with Margins) சேர்த்து லிட்டருக்கு ரூ.5.65 செலவாகிறது. 

மார்ஜின், போக்குவரத்து, சரக்கு விலை (Margin, Transportation, Freight cost) சேர்த்து லிட்டருக்கு ரூ.2.68 வரை செலவாகிறது. 

சுத்திகரித்தப் பிறகு எரிபொருளின் அடிப்படை செலவு லிட்டருக்கு ரூ.27.51 

இதனையடுத்து கூடுதலாக, மத்திய அரசால் விதிக்கப்படும் சுங்க வரி (Excise Duty) லிட்டருக்கு ரூ.21.48 

வாட் வரிக்கு (VAT) முன் டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் விலை லிட்டருக்கு ரூ.48.99 

பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் லிட்டருக்கு ரூ.2.57 

வாட் வரிக்கு முன் பெட்ரோல் செலவு (தோராயமானது) லிட்டருக்கு ரூ.51.56 

கூடுதலாக, வாட் வரி (டில்லி) 27% (இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்) மற்றும் 25 பைசா (செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி) சேர்த்து லிட்டருக்கு ரூ.13.92 

ஆக, 2017-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி இறுதியில், டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விலை - ரூ.65.48 

இதுவே சென்னையில் என்று எடுத்துக் கொண்டால் இங்கு வாட் வரி 34%-க்கு வரி விதிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.02 

ஆக ஒட்டுமொத்தத்தில் ரூ.27.51 என்று இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இறுதியில் பல வரிகள் சேர்க்கப்பட்டு ரூ.68.02 என்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் வரிகள் மட்டும் ரூ.40.51 -க்கு வசூலிக்கப்படுகிறது. 

பொதுவாக மத்திய அரசின் சுங்க வரி விதிப்பாலும், மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுமட்டுமின்றி, பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதற்கு முன் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்து வந்தன. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்ற, இறக்கத்தைக் காரணமாகக் காட்டி, பெட்ரோலிய நிறுவனங்கள் இதன் விலையை மாற்றியமைக்கின்றன. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 42.73 டாலராக இருக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன் 100 டாலருக்கும் மேல் அதிகரித்து இருந்தது. இப்போது இதன் விலை பாதிக்கும் மேல் குறைவடைந்துவிட்டது. இனி வரும் நாள்களில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இந்தியாவில், நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 என்ன, ரூ.200ஐ கூடத் தொட அதிக வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் எரிபொருளின் மீதி விதிக்கும் வரி. 

இந்த நிலையில் ஜி.எஸ்.டி.க்குள் ஏன் பெட்ரோல், டீசல் கொண்டு வரவில்லை என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்தைக் கேட்டோம். 

"ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் வரி விதிப்பு தொடர்பாக என்ன விவாதிக்கப்பட்டது என்பது எந்த ஒரு விவரமும் இல்லை. இது குறித்து பொதுமக்களுக்கும் எதுவும் தெரியப்படுத்தவில்லை. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது என்பது வசதியாக இருக்காது. ஏனெனில் இவ்விரண்டு அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதுதான் மிக முக்கிய காரணம். 

தமிழகத்தைப் பொறுத்தவரை எரிபொருள் மற்றும் மது விற்பனை மூலம் ஒட்டு மொத்த வருமானத்தில் பாதிக்கு மேல் கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையைவிட மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக வரி விதிக்கிறது. இப்போது, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் குறையும். ஆகையால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 138 சதவிகிதம் வரை வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும்" என்றார் அவர். 

சிகரெட், மது போன்ற பொருள்கள் மீதான நுகர்வை ஊக்கமளிக்கக் கூடாது என்பதற்காக இவற்றிற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருள்கள் மீது அதிக வரி விதிப்பது என்பது நியாயம்தானா? 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு