Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | உலகின் மிகக் கொடிய தேநீர் | பகுதி - 24

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இன்று இவ்வளவு பெரிய மனக்குழப்பங்களிலும், நீதன் முன்புபோல முட்டாள்தனமாக ஏதாவது செய்து தொலைக்காமல், என்னுடன் பேசுவதற்கு முடிவெடுத்தது, அவனுக்குள் முகிழ்ந்திருந்த நிதானமாகப் பட்டது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | உலகின் மிகக் கொடிய தேநீர் | பகுதி - 24

இன்று இவ்வளவு பெரிய மனக்குழப்பங்களிலும், நீதன் முன்புபோல முட்டாள்தனமாக ஏதாவது செய்து தொலைக்காமல், என்னுடன் பேசுவதற்கு முடிவெடுத்தது, அவனுக்குள் முகிழ்ந்திருந்த நிதானமாகப் பட்டது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

பொங்கலுக்குப் பிறகு முதல்நாள் காலை வேலைக்குப் போயிருந்தேன்.

முதல்நாள் இரவு வேலை செய்த முகாமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காலையில் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தங்களுடன் கொண்டு திரிந்த சாவிக்கொத்துகளை வாசலிலுள்ள பெட்டியில் செருகிவிட்டு, ரேடியோ கருவிகளை சார்ஜர்களைப் பொருத்திவிட்டு வாசல் பக்கத்தால் ஒவ்வொன்றாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.

பகல் வேலைக்கு வந்தவர்கள் தமக்குரிய சாவிகள், ரேடியோ கருவிகளோடு, பணி தொடங்குவதற்கு முன்னரான 15 தகவல் அறிவிப்புக் கூடத்தில் குழுமியிருந்தார்கள்.

முதல்நாள் இரவுப் பணிக்குப் பொறுப்பாயிருந்த ஸ்ருவேர்ட் எங்களது பகல் வேலைக்குரிய முக்கியக் குறிப்புகளைப் பதிவேட்டில் எழுதியிருந்தான். உரிய நேரத்து மருந்து உட்கொள்ளாதவர்கள், உணவு மண்டபத்துக்கு வந்து சாப்பிடாதவர்கள், நீண்ட நேரம் சந்தேகத்துக்கிடமான வகையில் தனியாக முகாமுக்குள் யோசனையில் அலைந்தவர்கள் என்று பல அவதானிப்புகள் இந்தப் பதிவேட்டில் எழுதப்படுவது வழக்கம்.

ஏல்லாவற்றையும்விட வேறொன்று குறித்து, ஸ்ருவேர்ட் அன்று காலை என்னுடன் தனியாகப் பேச வேண்டுமென்றான்.

அல்பா கம்பவுண்டுக்கு வெளியே இருவரும் வந்தோம். சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் பொருத்தி, தூபமிட்டான். களைத்த விழிகளில் வழிந்த தூக்கத்தைக் கழுவிக்கொண்டு சிகரெட் புகை மேலெழுந்து போனது.

``நீதனின் நிலவரம் அவ்வளவு சரியில்லை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரது சந்திப்பு தொடர்பாக நீதன் குழப்பமடைந்திருப்பது குறித்து ஸ்ருவேர்ட் பேசுவதாக எண்ணிக்கொண்டேன்.

``அவனது போக்கில் இரண்டு நாள்களாகப் பெரிய மாற்றங்கள் தெரிகின்றன. அவன் எல்லாவற்றிலும் களைத்துப்போய்விட்டது போன்ற அறிகுறிகள் அவனது உடல்மொழியில் காணக்கூடியதாக இருக்கின்றன.”

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

வெள்ளையினத்தவர்கள் மாற்றான் உடல்மொழியை வைத்து கரிசனை கொள்வது மிகப்பெரிய விடயம். அதுவும், இந்த முகாமில், எனது அனுபவத்தில் பெண்கள் ஓரளவுக்கு அகதிகள் குறித்த கரிசனை உடையவர்கள். அதிலும் மிகக்குறைவானவர்கள் மாத்திரம்தான். ஏனைய உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரை, இங்குள்ள அகதிகள் அனைவரும் இந்த நாட்டையும் தங்களையும் எரிச்சலூட்டுவதற்காகப் படகேறி வந்தவர்களே என்ற மதிப்பீட்டில் அலைபவர்கள். அகதிகள் இந்த முகாமிலிருப்பதால்தான் தங்களுக்கு வேலை இருந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படைப் புரிதல்கூட முக்கால்வாசி உத்தியோகத்தர்களுக்குக் கிடையாது. அகதிகள் இல்லாவிட்டால், குடிவரவு அமைச்சு, வெற்று முகாமைப் பாதுகாப்பதற்குத் தங்களுக்கு ஊதியம் வழங்கும் என்பது இவர்களது நினைப்பு.

இப்படியானதொரு பின்னணியில், நீதன் குறித்த ஸ்ருவேர்ட்டின் அவதானிப்பு எனக்கு சிறு ஆச்சர்யத்தைத் தந்தது.

``நான் களைச்சுப்போனன். நீதான் அவனோட கதைக்கக்கூடிய ஆள், எதுக்கும் பார்த்துக்கொள்.”

ஸ்ருவேர்ட் சிகரெட்டின் அடிக்கட்டையை நசித்து எறிந்துவிட்டு, கை தந்துவிட்டு விடைபெற்றான்.

முகாம் முற்றாக எழுந்து நடமாடத் தொடங்கியிருந்தது. பத்து மணி வெயில் உதைபந்தாட்டத் திடலில் வெள்ளித்திரவமாக மிதந்துகொண்டிருந்தது. மெல்போர்ன் கோடைக்குரிய இதமான வெப்பம் வெளியில் திரியும் எவருடனும் கைகோப்பதற்குத் தயாராகக் காத்திருந்தது.

வழக்கமாகத் தூக்கம் கலைத்துக்கொண்டு, ஜிம்முக்காக எழுந்து வருகின்ற நீதனை எதிர்பார்த்து, அல்பா கம்பவுண்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஸ்ருவேர்ட் எழுதிவைத்த பதிவேட்டில், நீதன் தொடர்ச்சியாக வாந்தியெடுத்தது, அதற்கு முன்னர் விருந்தினர் மண்டபத்துக்கு ராதா வந்து சென்றிருந்தது, அதற்குப் பிறகு ஒருவித மாறாட்டத்தோடு உதைபந்தாட்டத் திடலில் நடந்து திரிந்தது என்று பதிவு செய்திருந்த அனைத்துச் சம்பவங்களையும் படித்திருந்தேன். என்ன நடந்திருக்கும் என்று சம்பவங்களைக் கோர்வையாக்கி ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாகவுமிருந்தது.

நான் சென்று நீதனை அவனது அறையில் தட்டியெழுப்பினால், நான் ஏதோ முன்முடிவோடு வந்திருக்கிறேன் என்று அவன் எண்ணக்கூடும் என்ற காரணத்தால், அவன் எழுந்து வரட்டும் என்று காத்திருந்தேன்.

மதியம், அகதிகள் எல்லோரும் உணவு மண்டபத்துக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். நீதனைக் காணவில்லை.

அல்பா கம்பவுண்டில் நீண்டகால அகதிகள் எல்லோரும் மெல்ல மெல்ல எழுந்து தூக்கக் கலக்கத்தோடு தேநீர் அருந்தியபடி அல்பா கம்பவுண்ட் வெளிவிறாந்தையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

``ரீ போடவா?”

கடவுள் கேட்டான்.

``வேண்டாம், வேண்டாம் குடிச்சிட்டன் கடவுள், நன்றி.”

சொல்லிக்கொண்டே நீதனின் அறைக்குப் போனேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதனின் அறைக்கு வெளியே சென்று காலடிகளை அமைதியாக்கினேன். உள்ளே குளித்து முடிந்த சத்தம் அப்போதுதான் ஓய்ந்தது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வெளியில் வந்துவிடுவான் என்பது உறுதியாகியது. மீண்டும் அல்பா கம்பவுண்ட் விறாந்தைக்கு வந்தேன்.

``அண்ணே…”

பின்னால் வந்து தோள்களில் மெதுவாக இறங்கிய கைகளைப் பார்ப்பதற்காகத் திரும்பினேன்.

மிகவும் களைத்துப்போன முகம். முடி வாரவில்லை. பெறுமதியற்ற கண்களால் இரவில் என்ன பயன் என்பதுபோல வெளுத்துப்போயிருந்தது.

``ரீ போடவா?” என்ற அவனது வழக்கமான கேள்விக்குக் குரலில் தெம்பிருக்கவில்லை. மனதில் அதற்கான ஞாபகமுமில்லை என்பதுபோலத் தெரிந்தது.

``கொஞ்சம் தனியக் கதைக்கவேணும் அண்ணே.”

``ரீ போட்டுக்கொண்டு வாறன், ரெண்டு பேருக்கும்.”

நான் சொன்னவுடன், சற்றுத் துணுக்குற்றான். தான் தேநீர் ஊற்றுவதற்கு மறந்துபோனது அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அலையும் அவன் மனதை நான் கடிவாளம் போடுவது போன்ற பிரமையில், தன்னை ஒப்படைத்துவிட்டு நின்றான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

உதைபந்தாட்டத் திடலுக்கு அருகிலுள்ள தகரக் கொட்டகையில் இருவரும் சென்றமர்ந்தோம். பேசத் தொடங்கினோம்.

நான் ஊற்றிக்கொடுத்த தேநீரை நான் சொல்லும்போது மாத்திரம்தான் அவனால் அருந்த முடிந்தது. அவ்வளவு தூரம் அவன் புறத்தை அவன் மறந்திருந்தான். அந்தத் தேநீரை முழுமையாக அருந்தி முடித்த அரை மணி நேரத்தில், முதல் நாள் தான் கண்ட கனவையும், அதற்கு முன்னர் ராதா வந்து போனதையும், அவள் கேட்டுப்போன கேள்வியையும் சொன்னான்.

அழுத்தமற்ற அவனது குரலில் சகலதும் உண்மையாக வெளிவந்தன என்பது உணரக்கூடியதாயிருந்தது.

கதையையும் கனவையும் முழுமையாகச் சொல்லி முடித்தவனுக்கு நான் சிறு மௌனத்தை வழங்கியது போதுமாயிருந்தது.

``ராதா கேட்டது சரிபோலக் கிடக்கு அண்ணே. எனக்கும்...”

வார்த்தைகளோடு அலைந்தான்.

தரையைப் பார்த்தபடி அந்த வசனத்தைச் சொன்னான். அவனுக்குள் எரியும் குற்றப் பெரு நெருப்பை சுவாலைகள் தூக்கி வந்து கண்கள் வழியாக எனக்குக் காண்பித்தது. அதை அவன் மறைக்க நினைத்தான். ஆனால், அவனால் அது முடியவில்லை. நிராயுதபாணியாக நின்று குற்றம் புரிந்து பிடிபட்ட பேதையாக என் முன்னால் தெரிந்தான்.

தான் சுமந்த காதலையும், குடும்பத்தையும், பொறுப்பையும் எல்லாவற்றையும் துறந்துவிட்டு,

ஒரு சுயநலப் பேயாக இந்த முகாமின் கள்ள வழிகளில் ஒன்றின் வழி தப்பியோடுவதற்குத் திட்டமிட்டவன்போலத் தன்னை ஒப்புவித்தான்.

இதையெல்லாம் ஒரு முன்னாள் போராளியாக – ஒரு தேசத்துக்காக ஆயுதம் ஏந்தியவனாக – நீதனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனால் நியாயம் செய்ய முடியவில்லை. ஆனால், எல்லாவற்றையும் மீறியவனாகத் தன்னை ஓரிரு இரவில் உற்பத்தி செய்திருக்கிறான்.

``அடுத்த கிழமை இன்டர்வியூவில என்ன சொல்லுறது எண்டுதான் எனக்கு இப்ப குழப்பமாயிருக்கு அண்ணே.”

ராதாவை ஏற்றுக்கொண்டு வெளியே போவதற்கு வழியிருக்கிறது என்றால், நீதன் ஏன் தேவையில்லாமல் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றை – புலனாய்வுத்துறையிலிருந்த கதைகளை - ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினரிடம் கொட்டிவைக்க வேண்டும்? சிலவேளை, அது ராதா சொன்ன வழிகளுக்கு நிரந்தரமாகக் குழி தோண்டிவிடும்.

நீதன் முன்பொரு தடவை முகாமிலிருந்த வெறுப்பின் உச்சத்தில் பிளேட்டினால் தன் கைகளைக் கீறிய காயங்கள் சாதுவாக வெளியே தெரிந்தன.

அது காய்ந்துபோயிருந்தாலும் ஆபத்தான காயங்கள். அது எனக்குத் தெரியவந்து, உடனே முறைப்பாடு செய்ய வேண்டும், இது எப்போது நடந்தது என்று மிரட்டியபோது, என் கைகளைப் பிடித்துக் கெஞ்சி, யாரிடமும் சொல்ல வேண்டாம், அது ஒரு நாள் மனைவியின் நினைவில் கிழித்துக்கொண்டது என்று என்னைத் தடுத்துவிட்டான். ``இனிமேல் செய்ய மாட்டேன்” என்று தனது பிள்ளைமேல் சத்தியம் செய்திருந்தான். என் தொழில் விதிகளை மீறி அவனைப் பற்றி குடிவரவு அமைச்சில் முறைப்பாடு செய்துகொள்ளாமல் தவிர்த்த தருணம் அது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இன்று இவ்வளவு பெரிய மனக்குழப்பங்களிலும், நீதன் முன்புபோல முட்டாள்தனமாக ஏதாவது செய்து தொலைக்காமல், என்னுடன் பேசுவதற்கு முடிவெடுத்தது, அவனுக்குள் முகிழ்ந்திருந்த நிதானமாகப்பட்டது. இருந்தாலும், அவனது பேச்சும், அதில் தெரிந்த களைப்பும் அவனில் சிறு அச்சத்தையும் காண்பித்தன.

உண்மையைச் சொல்லப்போனால் -

அன்று அவனை நான் சற்றுக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள முயன்றிருக்க வேண்டும்.

அத்தனை நாள்கள் பேசிய கண்களின் ஊடாக அவனை இன்னும் கூடுதலாகப் படித்திருக்க வேண்டும்.

இரண்டொரு கேள்விகளை அதிகம் கேட்டிருக்க வேண்டும்.

நிதானமாக இன்னொரு தேநீரைப் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

பழக்கமில்லாத ஒரு சிகரெட்டை நானும் அவனுடன் புகைத்திருக்க வேண்டும்.

கணனியில் கிடந்த அனீஸாவினதும், லியோவினதும் படங்களைப் பிரதியெடுத்து அவனுக்குக் காண்பித்து அவனது மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஒரு பெரும் கடலின் வன்மத்தை மீறி வந்த அவனது வாழ்வின் திமிரை, மீண்டும் அவனுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் -

``எதற்கும் யோசிக்காதே” என்று முட்டாள்போல அவனுக்கு ஆறுதல் சொன்னேன். நான் விட்ட மிகப்பெரிய தவறு அது.

நீதன் எனக்கு எப்போதுமே ஒரு புலனாய்வுப் போராளி. நான் கோழைபோல விட்டு வந்த எனது தேசத்தை மீட்பதற்கு, ஆயுதத்தோடு அலைந்து திரிந்தவன். சாவை ஒரு சக தோழனாக நேசித்தவன். அவனது அருகாமை எப்போதும் எனக்குள் பெரு விருட்சமாகத் தெரிந்தது. அவனது உரையாடல்கள் விழுதுகளாக என்னுள் அலைந்தன. அவனால் முடியாதது எதுவுமில்லை என்றுதான் எப்போதும் நினைத்தேன். அவன் நினைத்தால், இங்குள்ள அதிகாரிகள் அனைவரையும் வெள்ளவத்தை பொலீஸ் போல உச்சிக்கொண்டு தப்பிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால், அவனுக்குள் அவனை சகல திசைகளிலும் உருக்குலைத்தபடியிருந்த புதிய பரிணாமத்திலான போரினை நான் மதிப்பிடவில்லை. ஆயுதமற்ற போரில் அவன் மிகவும் பலவீனமானவன் என்பதை உணர்ந்திருக்கவில்லை.

நான் ஊற்றிக்கொடுத்த தேநீரும் உறுதிமொழிகளும் அவனுக்குள் புதிய நம்பிக்கைகள் வேர்விடுவதற்கு இடம் கொடுத்திருக்கும் என்றுதான் விடைகொடுத்தேன். அவனது கைகளில் அன்றுணர்ந்த இளஞ்சூடு, அவனுக்குள் எரிந்துகொண்டிருந்த இறுதி நெருப்பு என்று நான் அறியவில்லை.

அன்றிரவு – நான் பணி முடித்து வீடு சென்றிருந்தவேளை – நீதன் தனது அறையில் மாரடைப்பில் இறந்துபோனான்.

தனது தேசத்துக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் முழுவீச்சாக ஒவ்வொரு கணமும் அவன் மூச்சிழுத்தபோது, விரிந்து விரிந்து கொடுத்த இதயம், அன்றிரவு ஏனோ காற்று நிரப்ப மறுத்தது. நரம்புகளில் பாய்ந்த ரத்தம் மூளையை முற்றாக மறந்தது. எத்தனையோ எதிரிகளை, பெரும் கண்டங்களை, கடல்களை வென்று வந்தவன், ஒரு சிறு அறையில் இருளின் மடியில் வாழ்க்கையின் பொல்லாப் பாதங்களில் நசிந்துபோனான்.

அடுத்த நாள் காலை வேலைக்குச் சென்றேன்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism