Published:Updated:

‘‘பிரச்னை மக்கள்கிட்டேயும் இருக்கு!’’

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு

கொரோனா பரவல்... குஷ்பு தடாலடி

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளராக ஷூட்டிங் தொடங்கப் பல முயற்சி களை முன்னெடுத்தவர், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு.

படப்பிடிப்புகள் தொடங்கி இப்போது மீண்டும் தீவிர ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கொரோனா காலம் குறித்து குஷ்புவிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘கொரோனா பிரச்னையால் ஊரடங்கு தொடங்கியதுமே சின்னத்திரை சீரியல்கள் கடுமையான சரிவைச் சந்தித்தன. ஒரு தயாரிப்பாளரா எப்படி உணர்ந்தீங்க?’’

‘‘ஒரு சீரியல் ஷூட்டிங் நடக்குதுன்னா நடிகர், நடிகைகளைத் தவிர்த்து எப்படியும் நூறு தொழிலாளர்களாவது ஸ்பாட்டில் இருப்பாங்க. இந்த லாக்டெளனால் அதிகமா பாதிக்கப்பட்டது அவங்கதான். ஏன்னா, இவங்க எல்லாருமே தினமும் சம்பாதிச்சு சாப்பிடக்கூடிய அன்றாட வேலையாட்கள். சேமிப்புனு பெருசா எதுவும் இருக்காது. அவங்க தினமும் சாப்பாட்டுச் செலவுகளுக்கே ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

சீரியல் ஷூட்டிங்கை மட்டுமே நம்பி 12,000 தொழிலாளர்கள் இருக்காங்க. அதே நேரத்துல நிறைய தயாரிப்பாளர்களும் சீரியல் கமிட்மென்ட்ஸை நம்பித்தான் இருந்தாங்க. அவங்களும் பொருளாதாரரீதியா ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. இவங்க எல்லாருடைய நிலைமையும் மோசமா இருந்தது. அதனாலதான் ஷூட்டிங்கைத் திரும்பவும் தொடங்க நிறைய முயற்சிகள் எடுத்தோம்.’’

‘‘திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ சூழல் எப்படியிருந்தது?’’

‘‘அரசாங்கம் ஷூட்டிங் தொடங்க அனுமதி கொடுத்தும், எங்களால உடனே ஷூட்டிங் ஆரம்பிக்க முடியலை. ஏன்னா, நாங்க நிறைய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியதா இருந்தது. ஷூட்டிங்கை எங்கே நடத்துறது, அதற்கான அனுமதினு நிறைய வேலைகள். ஷூட்டிங் நடத்த நிறைய கண்டிஷன்ஸ் இருந்ததுனால அதை எல்லார்கிட்டயும் சொல்லிப் புரியவைக்க வேண்டியதா இருந்தது. லொகேஷன்ல அறுபது பேரும் ஒண்ணா நிக்கக் கூடாது; தேவையில்லாத ஆட்கள் கண்டிப்பா ஸ்பாட்ல இருக்கக் கூடாது; சாப்பாடு இப்படித்தான் இருக்கும்; ஒரு வண்டில மூணு பேருக்கு மேல போகக் கூடாது; டிராப் பண்ணிட்டு வண்டி உடனே போயிடணும்; பிரேக் டைம்ல கூட்டமா இருக்கக் கூடாதுனு ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிப் புரியவெச்சோம்.

எல்லா டெக்னீஷியன்ஸுக்கும் தொழிலாளர் களுக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்தோம். இப்போ திரும்பவும் ஷூட்டிங்கை நிறுத்திட்டோம். ஸ்பாட்ல ஒருத்தருக்கு கொரோனா வந்தாக்கூட எல்லாருமே குவாரன்டைன் போகணும். அதனால ரிஸ்க் எடுக்க முடியாது. திரும்பவும் அரசாங்கம் எப்போ சொல்றாங்களோ அப்போதான் ஷூட்டிங் போவோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘‘சென்னையில் கொரோனா பரவல் அதிகமாகிட்டே போகுதே... தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்னு நாலு மாவட்டங்களை மட்டும்தான் அரசாங்கத்தால கன்ட்ரோல் பண்ண முடியலை. இவை தவிர, மற்ற மாவட்டங்கள் கொஞ்சம் கன்ட்ரோல்ல இருக்கு. இருந்தாலும், அங்கேயும் இப்போ சென்னையில இருந்து போனவங்களால கொரோனா தொற்று அதிகமாகுது. மக்கள் பொருள்கள் வாங்கக் கூட்டம் கூட்டமா கடைகளுக்குப் போறாங்க. இந்தத் தீவிர லாக்டெளன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிகூட ரங்கநாதன் தெரு, ரிச்சி ஸ்ட்ரீட்னு முக்கியமான இடங்கள்ல அவ்ளோ கூட்டம்.

குஷ்பு
குஷ்பு

`அத்தியாவசியப் பொருள்கள் எல்லாமே மக்களுக்குக் கிடைக்கும்’னு அரசு திரும்பத் திரும்பச் சொன்னாலும் யாரும் சரியா கேட்குறதில்லை. `நமக்கு வராது’னு ரொம்ப அலட்சியமா இருக்காங்க. ஆனா யாருக்கு, எங்கேயிருந்து வரும்னு யாருக்கும் தெரியாது. டாஸ்மாக்ல எவ்வளவு கூட்டமா இருந்ததுன்னு எல்லாருமேதானே பார்த்தோம். சமூக விலகலை எங்கேயாவது பார்க்க முடிஞ்சுதா... பிரச்னை மக்கள்கிட்டேயும் இருக்கு. நாமளும் சரியா இருக்கணும்.’’

‘‘அப்போ அரசு எடுக்குற நடவடிக்கைகள் சரியாத்தான் இருக்குன்னு சொல்றீங்களா?’’

‘‘அரசாங்கம் பக்கமும் தவறு இருக்கு. மாநில அரசு மட்டுமில்லை, மத்திய அரசும் ட்ரையல் அண்ட் எரர் மெத்்தட்லதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. `இதை மூடிட்டு, அதை திறக்கலாமா’னு யோசிச்சு செய்யறாங்க. ஏன்னா, இது மாதிரியான இயற்கைப் பேரிடர் மற்றும் வியாதியை யாருமே இதுக்கு முன்னாடி பார்க்கலை. இந்தியா மட்டுமில்லாம, உலகம் முழுக்கவே இந்தப் பிரச்னையிருக்கு. எங்கே தவறு நடக்குதுனு கொஞ்சம் உத்துப் பார்க்க வேண்டியதா இருக்கு. தவிர, பொருளாதார ரீதியாவும் நிறைய விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கு. மக்கள் வேலைக்குப் போகலைனா எப்படிச் சாப்பிடுவாங்கனு யோசிக்க வேண்டியிருக்கு. இந்த நேரத்துல அரசாங்கம், மக்கள்னு எல்லாருமே பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.’’

‘‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே அரசியல்ல நீங்க சீனியர். அவங்களோட அரசியல் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘இன்னும் ரஜினி சார் நேரடியா அரசியலுக்கு வரலை. வந்த பிறகு அவரைப் பற்றிப் பேசுவோம். கமல் சாரை எப்பவும் நான் விமர்சிக்க மாட்டேன். என் நெருங்கிய நண்பர் அவர். பர்சனலா, கமல் சார் வெற்றியடையணும்தான் நான் நினைப்பேன். அவருடைய வெற்றியைப் பார்த்து சந்தோஷப்படுவேன். நாடாளுமன்றத் தேர்தல்லயே அவரால் கட்சி நடத்த முடியும், வாக்குகள் வாங்க முடியும்னு நிரூபிச்சிட்டார். குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை வாங்கிட்டார். பெரிய சாதனையாத்தான் நான் இதைப் பார்க்குறேன்.’’

‘‘இந்த கொரோனா சூழலால் `2021 தேர்தல் தள்ளிப்போகும்’னு ஒரு பேச்சிருக்கே... நீங்க என்ன நினைக்கிறீங்க?’’

‘‘தள்ளிப் போகாது. முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும் மே மாசத்துக்கு முன்னாடியே தேர்தல் நடக்கும்னு நினைக்கிறேன்.’’