Published:Updated:

ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார்... முடிவெடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க தலைமை!

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

வாய்ப்புக் கேட்டு காய் நகர்த்தும் அனைவரையும் கடந்த ஒரு வாரமாக முதல்வரின் நிகழ்ச்சிகளில் காணலாம். ஏ.சி.சண்முகம், தம்பிதுரை, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அனைவருமே முதல்வரின் சுற்றுப்பயணத்தில் சத்தமில்லாமல் பின்தொடர்கிறார்கள்.

அம்மா வழியில் நடக்கும் ஆட்சி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் வழியில் அதிரடியாக ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க முடியாமல் திணறிவருகிறார் என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது. கட்சிகளுக்குள் போட்டியிருந்தால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடக்கும். இல்லையென்றால் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை சட்டசபை செயலாளர் அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கிவிடுவார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தி.மு.க சார்பில் மூன்று உறுப்பினர்களுக்கு வாய்ப்பு இருப்பதால் அந்தக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த மார்ச் முதல் தேதியன்றே அறிவித்துவிட்டார். தற்போது எம்.பி-யாக இருக்கும் திருச்சி சிவா, தி.மு.க-வின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகிய மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு சீட்டுக்கு முயற்சி செய்தது. ஆனால், தி.மு.க-வே மூன்று இடங்களிலும் களம் இறங்கிவிட்டது. வரும் 9-ம் தேதி அன்று தி.மு.க உறுப்பினர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

அ.தி.மு.க நிலைமைதான் இப்போது அதோகதியில் இருக்கிறது. அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து மூன்று வேட்பாளர்களைத் தேர்வு செய்யவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்வரைச் சுற்றியே கடந்த பத்து நாள்களாக வலம் வருவதால் மூவரைத் தேர்வு செய்வது சிக்கலாகியிருக்கிறது. கூட்டணிக் கட்சியினரும் அதே கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த முறை பா.ம.க-வுக்கு வாய்ப்புக் கொடுத்ததுபோல இந்தமுறை எங்களுக்குத் தரவேண்டும் என்று தே.மு.தி.க–வுக்காக முதல்வரைச் சந்தித்து முறையிட்டுள்ளார் சுதிஷ். அதேபோல் த.மா.க தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்புக்கொடுங்கள் என்று அந்தக் கட்சியினர் பவ்யம் காட்டிவருகிறார்கள்.

இப்படி, கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள் ஒருபுறமிருக்க, அ.தி.மு.க-வினருக்குள்ளேயும் கடும் போட்டியிருக்கிறது என்கிறார்கள். ``தற்போது துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கே.பி.முனுசாமி பன்னீர் அணியைச் சேர்ந்தவர். அவர் ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தனக்கு இந்த முறை ராஜ்யசபா வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லிவருகிறார். அவர், வடமாவட்டங்களில் வலுவாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஒதுக்க முடியாமல் திண்டாடுகிறார் முதல்வர். மற்றொருபுறம் ஏ.சி சண்முகம், என்ன விலை கொடுத்தாவது இந்த முறை எம்.பி-யாகிவிட வேண்டும் என்று சுற்றிவருகிறார். சமீபத்தில் முதல்வரைச் சந்திக்க வந்த பி.ஜே.பி பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மூலமும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க-நிர்வாகிகள்
அ.தி.மு.க-நிர்வாகிகள்

மற்றொருபுறம் தளவாய்சுந்தரம், முதல்வருக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சீட் வாங்கிவிடலாம் என்று கணக்குப் போட்டுவருகிறார். இவர்களைத் தாண்டி ``கடந்த முறை இஸ்லாமியருக்கு வாய்ப்புக் கொடுத்ததுபோல இந்த முறை கிறிஸ்துவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். அதன் பிரதிநிதியாக எனக்கு வாய்ப்பு வேண்டும். எனக்குக் கொடுக்கும் வாய்ப்பு கிறிஸ்துவருக்கு கொடுப்பது மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் பரவலாக உள்ள நாடார் சமூகத்துக்கும் சேர்த்து கொடுத்ததுபோல இருக்கும்” என்று மனோஜ் பாண்டியன் முதல்வரிடமே மனம் திறந்து பேசியிருக்கிறார். ஏற்கெனவே துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, ``சீனியராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் காலத்து ஆள் நான். உங்களுக்கு டெல்லியில் பிரச்னை ஏற்பட்டபோதெல்லாம் அதைச் சரிசெய்து கொடுத்தவன். எனக்கு ஒரு சீட்டை கொடுங்கள்” என்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க முதல்வரின் நெருக்கமான நண்பரான சேலம் இளங்கோவன் தனி டிராக்கில் மூவ் செய்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. இந்த ராஜ்யசபா தேர்தலில் இரண்டு பெண்கள் வெளியே வருகிறார்கள். எனவே, ஒரு பெண்ணுக்கு அ.தி.மு.க-வில் வாய்ப்புத் தர வேண்டும் என்று கோகுல இந்திராவும், முதல்வர், துணை முதல்வர் இருவரையும் சந்தித்து வேண்டுகோள் வைத்துவருகிறார். அ.தி.மு.க-வின் ஆட்சி மன்றக்குழு விரைவில் கூட இருக்கிறது. இந்த ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் வைத்து வேட்பாளர்களை பரீசிலனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தன்னைச் சந்திப்பவர்களிடம் சொல்லிவருகிறார் என்கிறார்கள்.

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்-தம்பிதுரை
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்-தம்பிதுரை

ஆனால், ``ஆட்சி மன்றக் குழு என்று சொல்வதெல்லாம் ஒரு பேச்சுக்குதான். உண்மையில் முதல்வரால் வேட்பாளர்கள் தேர்வில் முடிவு எடுக்கமுடியவில்லை. அதனால்தான் இழுபறியாகிவருகிறது. அடுத்த ஆண்டு ஆட்சி இருக்குமா இருக்காதா என்கிற சந்தேகத்தில் பல மூத்த நிர்வாகிகள் ராஜ்யசபா எம்.பி-யாகி அடுத்த ஆறு ஆண்டுகளை ஓட்ட நினைக்கிறார்கள். அதேநேரம் கூட்டணிக் கட்சியினரும் மல்லுக்கட்டுகிறார்கள். கூட்டணிக் கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். ஆனால், தனது கட்சியில் யாரை நியமிப்பது என்கிற குழப்பம் அவரிடம் இப்போது உள்ளது.

வாய்ப்புக்காக காய் நகர்த்தும் அனைவரையும் கடந்த ஒரு வாரமாக முதல்வரின் நிகழச்சிகளில் காணலாம். ஏ.சி.சண்முகம், தம்பிதுரை, தளவாய்சுந்தரம் உள்ளிட்ட அனைவருமே முதல்வரின் சுற்றுப்பயணத்தில் சத்தமில்லாமல் பின்தொடர்ந்து வந்து முதல்வரை தனித்தனியாக சந்தித்து தங்கள் கோரிக்கையை வைத்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. வரும் மார்ச் 8-ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் உறுதியாக வர வாய்ப்புள்ளது’’ என்கிறார்கள்.

தலைமைப்பண்பை நிரூபிக்க எடப்பாடிக்கு இது ஒரு சவால்!

அடுத்த கட்டுரைக்கு