Election bannerElection banner
Published:Updated:

இந்தத் தொகுதிகளெல்லாம் கட்டாயம் வேண்டும்... தி.மு.க-விடம் லிஸ்ட் கொடுத்த காங்கிரஸ்

தி.மு.க - காங்கிரஸ்
தி.மு.க - காங்கிரஸ்

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு எந்தெந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற லிஸ்ட்டை தி.மு.க-விடம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான நேர்காணலைத் தொடங்கிவிட்டன. ஆனால், தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டுக் குழப்பங்கள் நீங்கியதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் கேட்டது என்னவோ 54 இடங்கள். ஆனால், தி.மு.க 18 இடங்களைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். பின்னர் 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் இறங்கிவந்ததாகத் தகவல் வெளியானது. தற்போது 24 தொகுதிகளுக்கு இரண்டு கட்சிகளும் உடன்பட்டுவிட்டன என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

ராகுல் காந்தி தமிழகத்தில் இரண்டாம்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு இன்றுதான் டெல்லி திரும்பியிருக்கிறார். இதுவரை தி.மு.கவுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து, காங்கிரஸ் தலைமைக்கு விளக்க தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்கள் டெல்லி விரைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியிலிருந்து அந்தக் குழு திரும்பி வந்ததும், தி.மு.க-வுடனான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: காங்கிரஸ் கேட்பது எத்தனை... தி.மு.க தர நினைப்பது எத்தனை?
திமுக தலைவர்கள்
திமுக தலைவர்கள்

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் வாங்கத் தொடங்கியிருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி, வரும் 5, 6-ம் தேதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடத் திட்டமிட்டிருக்கும் தொகுதிகள் எவை, யார் யார் எந்தத் தொகுதிக்கு விருப்ப மனு அளித்திருக்கிறார்கள் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம்.

``கடந்த தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகள் உட்பட மொத்தம் 70 தொகுதிகள் அடங்கிய லிஸ்ட்டை தி.மு.க-விடம் கொடுத்திருக்கிறோம். அதில் வெற்றி பெற்ற எட்டு தொகுதிகள், 10,000-க்கும் கீழ் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சோளிங்கர், செய்யாறு, மதுரவாயல், ராயபுரம், மயிலாப்பூர், திருமங்கலம், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் தெற்கு, தென்காசி, கரூர், அறந்தாங்கி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளை உறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.

தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை
தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தென் மாவட்டங்களில் திருச்சி, முசிறி, மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதி, நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்” என்றவர்கள். ``தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததும், வேட்பாளர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்போம்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு