Published:Updated:

'Tek Fog' செயலி... அரசியல் எதிரிகளை அச்சமூட்டுகிறதா பா.ஜ.க?

'Tek Fog' செயலி
பிரீமியம் ஸ்டோரி
News
'Tek Fog' செயலி

ட்விட்டர் டிரெண்டிங் பகுதியை ஹேக் செய்து குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை வெளியேற்றுவது எங்களது தினசரி வேலையாக இருந்தது.

``ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான டிரெண்டிங்குகளை உருவாக்குவதற்கும், பா.ஜ.க-வுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள்மீது வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் `Tek Fog’ என்கிற ரகசிய செயலி ஒன்றை பா.ஜ.க ஐடி விங் பயன்படுத்துகிறது’’ - ஜனவரி 6 அன்று ‘தி வயர்’ ஊடகம் வெளியிட்ட இந்தச் செய்திதான் நாடு முழுவதும் ஃபயராகப் பற்றிக்கொண்டிருக்கிறது!

2020, ஏப்ரல் மாதம் ட்விட்டரில், தன்னை பா.ஜ.க ஐடி விங்-கின் அதிருப்தி ஊழியர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர், ``டியர் பா.ஜ.க., 2014 முதல் நான் உங்களது ஐடி விங்கில் பணியாற்றினேன். இப்போது வேலையை விட்டுவிட்டேன். 2018-ல் எங்களுக்கு அரசு வேலை தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், தரவில்லை. மாறாக பலிகடா ஆக்கிவிட்டீர்கள்...’’ என்று பதிவிட்டிருந்தார். அவரே மற்றொரு ட்வீட்டில், ``பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணியில் என்னை `The Tek Fog’ என்ற செயலியைப் பயன்படுத்தச் சொன்னார்கள். இது பா.ஜ.க ஐடி விங்கில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ரகசியச் செயலி. இந்தச் செயலி மூலம் குறுக்குவழியில் ஹேஷ்டேக்குகளையும், சமூக வலைதளப் பதிவுகளையும் பதிவேற்ற முடியும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, `தி வயர்’ ஊடகம், பா.ஜ.க ஐடி விங்-கில் பணிபுரிந்த ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``ட்விட்டர் டிரெண்டிங் பகுதியை ஹேக் செய்து குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை வெளியேற்றுவது எங்களது தினசரி வேலையாக இருந்தது. அதோடு பா.ஜ.க-வுக்கு எதிரான பத்திரிகையாளர்களுக்கு ஆன்லைனில் தொந்தரவு கொடுப்பதும் எங்கள் வேலை’’ என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரிடம் “இப்போது ஏன் இதை வெளிப்படையாகச் சொல்ல முன்வந்தீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ``பா.ஜ.க தேசிய இளைஞரணியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும், தற்போதைய மகாராஷ்டிர பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளருமான தேவாங் டேவ், `2019-ல் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்கள் அனைவருக்கும் அரசு வேலை நிச்சயம்’ என்று வாக்குறுதியளித்தார். அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததாலேயே இதையெல்லாம் வெளியே சொல்கிறோம்’’ என்று பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து, டெக் ஃபாக் செயலியைத் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியோடு அலசி ஆராய்ந்தது ‘தி வயர்.’ அதன் மூலம் இந்தச் செயலி, முழுக்க முழுக்க இணைய வெறுப்புப் பிரசாரங்களுக்கும், தனிநபர் தாக்குதல்களுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறது ‘தி வயர்.’ ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் தேவாங் டேவ், ``எனது குழுவிலுள்ளவர்களோ, நானோ இது போன்ற எந்தச் செயலியுடனோ, செயலியைச் சார்ந்தவர்களுடனோ தொடர்பில் இருந்ததில்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், `டெக் ஃபாக் போன்ற செயலிகள், தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தி, தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இது பிரைவசிக்கும் பேச்சுரிமைக்கும் தடையாக இருக்கிறது. பொது உரையாடல்களையும், நாட்டின் ஜனநாயகத்தையும் சுரண்டும் இந்த விவகாரம் பற்றி வரும் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் செயலியைக் கடுமையாக விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ``டெக் ஃபாக்-உடன் அரசாங்கமும் பா.ஜ.க-வும் வெளிப்படையாகக் கைகோத்திருக்கின்றன. இந்தச் செயலி வெறுப்புப் பேச்சுகளையும், பொய்களையும் ஊக்குவிக்கிறது; பெண்களைக் குறிவைக்கிறது. குறிப்பாக, காங்கிரஸைக் குறிவைத்து ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த உதவுகிறது. டெக் ஃபாக் செயலியுடன் தொடர்பிலிருப்பவர்கள், பா.ஜ.க இளைஞரணியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பெகாசஸ் விவகாரத்தைக் கையிலெடுத்து விசாரித்து வருவதைபோல டெக் ஃபாக் விவகாரத்தையும், தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறது.

'Tek Fog' செயலி... அரசியல் எதிரிகளை அச்சமூட்டுகிறதா பா.ஜ.க?

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி தமிழ்நாடு பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமாரிடம் கேட்டோம்... ``ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளின் அல்காரிதமே தனி. நாம் எங்கிருந்து ஒரு பதிவைப் போடுகிறோம் என்பது முதற்கொண்டு அனைத்தையும் கண்டறியும்படி பக்காவாக புரோகிராம் செய்துவைத்திருக்கிறார்கள். நானே ஒரு ஹேஷ்டேக்கை பலமுறை ட்வீட் செய்தாலும், ட்விட்டர் ஒரே ஒரு முறை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதனால், போலியாக டிரெண்டிங் செய்வதெல்லாம் முடியாத காரியம். கடந்த வாரம் பஞ்சாப்பில் நடந்த விவகாரம் தொடர்பான ஹேஷ்டேக்கை மூன்று லட்சம் பேர் வரை பயன்படுத்தியிருந்தார்கள். எங்கள் கட்சிக்கு இந்தியா முழுவதும் 30 லட்சத்துக்கும் மேல் ஆக்டிவான ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவிகிதம் பேர் ட்வீட் செய்திருக்கிறார்கள். இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கில் ஹேஷ்டேக்குகள் வந்திருக்க வேண்டும்... அப்படி ஒன்றும் நடக்கவில்லையே? எனவே டெக் ஃபாக் செயலி பற்றிய செய்திகளெல்லாம் வெறும் புரளிகள்’’ என்றார்.

நாட்டின் ஆட்சி அதிகார மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில், இது போன்ற செயலிகள் மூலம் நடத்தப்படும் நாடகங்கள், நாட்டின் ஜனநாயகத்தையே அசைத்துப் பார்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!