Published:Updated:

பத்திரப் பதிவுத்துறை ‘பகீர்’ சர்ச்சைகள்!

பத்திரப் பதிவுத்துறை
பிரீமியம் ஸ்டோரி
பத்திரப் பதிவுத்துறை

- திடீர் சஸ்பெண்ட்... முரட்டு கமிஷன்... மூக்கை நுழைக்கும் குடும்பம்

பத்திரப் பதிவுத்துறை ‘பகீர்’ சர்ச்சைகள்!

- திடீர் சஸ்பெண்ட்... முரட்டு கமிஷன்... மூக்கை நுழைக்கும் குடும்பம்

Published:Updated:
பத்திரப் பதிவுத்துறை
பிரீமியம் ஸ்டோரி
பத்திரப் பதிவுத்துறை

“கமிஷன் என்கிற விஷயத்தில் எந்தத் துறையுமே விதிவிலக்கு அல்ல என்றாலும், பத்திரப் பதிவுத்துறையில் கைமாறுபவை முரட்டுக் கமிஷன்களாக இருக்கும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேலிடத்தைச் சார்ந்தவர்களின் அதிகார துஷ்பிரயோகம் கொடிகட்டிப் பறக்கும். நேர்மையான அதிகாரிகள் - கமிஷன் கேட்டு முரண்டு பிடிப்பவர்கள் என இரு தரப்பின் மீதும் சஸ்பெண்டுகள் பாயும். அப்படி, ‘பொதுநலன் கருதி’ என்ற காரணத்துடன் சார்பதிவாளர் ஒருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை!

`இந்த சஸ்பெண்டுக்குக் காரணமே முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான்’ என்கிறது விவரமறிந்த வட்டாரம். விசாரிக்கக் களமிறங்கினோம், சஸ்பெண்ட் விஷயத்தோடு சேர்த்து மேலும் பல `பகீர்’ சர்ச்சைகள் வெளிவந்தன...

பத்திரப் பதிவுத்துறை அமைச்சருக்கு நெருக்கமான ஒருவரை வளைத்தோம். “கடந்த 13-ம் தேதி காலை, முதல்வர் அலுவலகத்திலிருந்து அமைச்சருக்கு ஒரு கால் வந்திருக்கிறது. எதிர்முனையில் விஷயம் சொல்லப்பட, கேட்டுப் பதற்றமான அமைச்சர், துறையின் உயரதிகாரி ஒருவருக்கு உடனே போன் செய்து, “என்னய்யா நினைச்சுக்கிட்டிருக்கார் அந்த ஆளு... சி.எம் வீட்டு ஆட்கள்கிட்டயே காசு கேட்டிருக்கார்... இன்னைக்கு ஈவினிங்குக்குள்ள அவரை சஸ்பெண்ட் பண்ணுங்க” என்று சத்தம் போட்டிருக்கிறார். அன்று மாலையே பத்திரப் பதிவுத்துறையின் டி.ஐ.ஜி சுபித்ரா லட்சுமியின் ஒப்பத்தோடு, பெரும்புதுார் சார் பதிவாளர் ஹரிநாத் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஆணை வெளியானது. அந்த சஸ்பெண்ட் ஆணையில் ‘பொதுநலன் கருதி’ என்று காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார் சுருக்கமாக.

பத்திரப் பதிவுத்துறை ‘பகீர்’ சர்ச்சைகள்!

“முதல்வர் பேரைச் சொல்லி யார் யாரோ பேசுறாங்க... பணத்தை ரெடி பண்ணுங்க!”

இந்தத் திடீர் சஸ்பெண்ட் விவகாரத்தில் என்ன நடந்தது, அந்தப் ‘பொதுநலன்’தான் என்ன? எனப் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம், “லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்குள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்படும்போதுகூட ‘பொதுநலன் கருதி’ என்றுதான் காரணம் குறிப்பிடப்படும். இது வழக்கமான நடைமுறைதான். அதை விடுங்கள். முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர், சமீபத்தில் ஒரு சொத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்காக பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத் தன் ஆட்கள் இருவரை அனுப்பியிருக்கிறார். அவர்களிடம் அந்தப் பத்திரப்பதிவைச் செய்வதற்கு 12 லட்சம் ரூபாய் எதிர்பார்த்திருக்கிறது சார் பதிவாளர் ஹரிநாத் தரப்பு. ‘நாங்கள் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான நபர் அனுப்பி வந்திருக்கிறோம்’ என்று சம்பந்தப்பட்ட நபரின் பெயரையும் சார் பதிவாளரிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு ஹரிநாத் தரப்பு, ‘இப்படித்தான் பல பேர் முதல்வர் பேரைச் சொல்லி, ஓசியில வேலையை முடிச்சுட்டுப் போறாங்க. முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவங்கன்னா நேர்ல வரவேண்டியதுதானே?’ என்று சொல்ல அதிர்ந்து போயிருக்கிறார்கள். விஷயத்தைப் பெண் பிரமுகரின் கணவருக்குச் சொல்ல, டென்ஷனான அவர், சார்பதிவாளர் தரப்பை போனில் தொடர்புகொண்டு தன்னைப் பற்றிச் சொல்லி, வேலையை முடித்துக்கொடுக்கும்படி கோபமாகச் சொல்லியிருக்கிறார். ‘முதல்வர் பெயரைச் சொல்லி, சொந்த பந்தம்னு யார் யாரோ பேசுறாங்க. அதையெல்லாம் நம்பிக்கிட்டிருக்க முடியுமா? உங்களுக்கு வேலை முடியணும்னா, உடனே பணத்தை ரெடி பண்ணி தர்ற வேலையைப் பாருங்க’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறது ஹரிநாத் தரப்பு. ஷாக்கான பெண் பிரமுகரின் கணவர், அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார்.

“தலைவர் உயிரோட இருந்திருந்தா... எனக்கு இந்த அவமானம் வந்திருக்குமா?”

அகிம்சைக்குப் பேர்போன பெயர்கொண்ட அமைச்சரிடம், பெண் பிரமுகரும் அவருடைய கணவரும் பேசியிருக்கிறார்கள். ‘இந்நேரம் தலைவர் உயிரோட இருந்திருந்தா... எனக்கு இந்த அவமானம் வந்திருக்குமா... இதையெல்லாம் நானாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுபோக மாட்டேன். அவர் ஆட்சியில, நான் என்ன நிலையில இருக்கேன்கறதை அவரே விசாரிச்சுத் தெரிஞ்சுக்கட்டும்’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு போனை கட் செய்தாராம் பெண் பிரமுகர். பதறிப்போன ‘அகிம்சை’ அமைச்சர், உடனடியாக முதல்வர் தரப்புக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார். பிறகு, துறையின் அமைச்சர் மூர்த்தியிடம் முதல்வர் தரப்பு பேச, அதைத் தொடர்ந்தே துறைரீதியாக விசாரணை நடந்து அன்று மாலையே சஸ்பெண்ட் செய்யப்பட்டார் சார்பதிவாளர் ஹரிநாத்” என்றார்கள் விரிவாக.

முதல்வர் குடும்பத்தின் பெண் பிரமுகர் தரப்பில் இது குறித்து கேட்டோம், “பெண் பிரமுகரின் கணவர் உட்பட மூன்று நபர்களின் பெயரில் இடம் பதிவு செய்யவே சார் பதிவாளரை அணுகியிருக்கிறார்கள். ஆரம்பத்தில், ‘இது யாருடைய இடம் என்று சொல்லாமலேயே பதிவுசெய்ய வேண்டும்’ என்று சொல்ல, அதற்கு ‘பன்னிரண்டு லட்சம் ரூபாய் ஆகும்’ என்று சார்பதிவாளர் தரப்பு சொல்லியிருக்கிறது. ‘அவ்வளவு கொடுக்க முடியாது’ என்றவர்கள், வேறொரு தொகையைச் சொல்லி, அதற்கு உடனே அட்வான்ஸ் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சார்பதிவாளர் தரப்பு ‘12 லட்சம்’ என்பதில் உறுதியாக இருக்க, வேறு வழியில்லாமல்தான் விவகாரத்தை முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை வந்தது” என்றார்கள்.

மூர்த்தி
மூர்த்தி

அதேநேரம், சார்பதிவாளர் ஹரிநாத்துக்கு நெருக்கமானவர்கள், “பெண் பிரமுகர் தரப்பு, தாங்கள் வாங்கும் இடத்துக்கான மதிப்பைக் குறைவாகக் குறிப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என ஹரிநாத்தை நிர்பந்தித்திருக்கிறது. அதற்கு ஹரிநாத், ‘பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி ஒப்புதல் இருந்தால் மட்டுமே என்னால் பதிவுசெய்ய முடியும்’ என்று மறுத்துவிட்டதால், கடுப்பாகி, அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்” என்கிறார்கள்.

‘சார்பதிவாளர் ஹரிநாத் வசூல் விஷயத்தில் பலே கில்லாடி’ என்று அவரது அலுவலகத்தில் பணிபுரிபவர்களே கண்சிமிட்டுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க, ஹரிநாத்தைத் தொடர்புகொண்டோம். அவரது போன் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருக்கிறது.

பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டோம், “இந்த சஸ்பெண்ட் விவகாரத்தில், முதல்வர் குடும்பத்துக்குத் தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த சார்-பதிவாளர் லஞ்சம் கேட்டதாகத் துறைரீதியாகப் புகார் வந்தது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் சப்-ரிஜிஸ்ட்ரார் வெங்கடசுப்ரமணியன், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-ரிஜிஸ்ட்ரார் வேதியம்மாள் ஆகியோரும் இதே போன்ற லஞ்சப் புகாரில் அதே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை” என்றார்.

சபரீசனைக் கைகாட்டும் சர்ச்சை நிறுவனம்!

முதல்வர் குடும்பத்தின் பெண் பிரமுகர் ஒருவரிடமே லஞ்சம் கேட்டு அதிகாரி சஸ்பெண்டானது ஒருபுறம் இருக்க, முதல்வரின் மருமகன் சபரீசன் பெயரைப் பயன்படுத்தி ரியல் எஸ்டேட் துறைக்குள் ஒரு நிறுவனம் அதிரடி காட்டுவது குறித்துப் புலம்புகிறார்கள் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள்!

“ஆங்கில எழுத்தொன்றில் செயல்படும் அந்த நிறுவனம், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1,000 கோடி ரூபாய்க்கு மேலான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அரசுத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் பெயரைக் கேட்டாலே அஞ்சவேண்டிய நிலை உள்ளது. காரணம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ‘தனது நிறுவனம், சபரீசனுக்கு நெருக்கமானது’ என்று அனைத்து அரசுத்துறை அதிகாரிகளிடமும் சொல்லி வைத்திருப்பதுதான். டி.டி.சி.பி-க்கான உத்தரவு பெற்றால் மட்டுமே, கட்டுமான நிறுவனங்கள் கட்டடம் கட்டி விற்க முடியும். இந்த அப்ரூவல் விவகாரத்தில் பிற நிறுவனங்களை நெருக்கடிக் குள்ளாக்கி ஆதிக்கம் செலுத்துகிறது சர்ச்சை நிறுவனம். இந்த நிறுவனத்தின் பத்திரப்பதிவு முதல் கட்டுமானப் பணிகளுக்கான ஆணைகள் வரை உடனடியாக வழங்கும் அதிகாரிகள், பிற நிறுவனங்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காலதாமதம் செய்கிறார்கள். அனுமதிக்காகக் காத்திருக்கும் நிறுவனங்களிடம் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்று பேரம் பேசும் சர்ச்சை நிறுவனம், பேரத்துக்குப் பணியாதவர் களுக்குப் பத்திரப்பதிவு தொடங்கி அனைத்து அரசு அப்ரூவல்களையும் கூடுதலாகக் காலதாமதம் செய்யவைத்துத் தனி ஆவர்த்தனம் செய்கிறது” என்கிறார்கள் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள்.

பத்திரப் பதிவுத்துறை ‘பகீர்’ சர்ச்சைகள்!

பள்ளிக்கரணையைக் கூறுபோட்ட பத்திரப் பதிவாளர்கள்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைத் தனியாருக்குக் கூறுபோட்ட பின்னணியில் நடந்த ஊழல் விவகாரங்கள் குறித்து அறப்போர் இயக்கம் கள ஆய்வில் இறங்கியது. சேகரித்த ஆவணங்களுடன் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சமீபத்தில் புகாராகக் கொடுத்துள்ளது. அது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பேசினோம்.

“12,000 ஏக்கராக இருந்த சதுப்பு நிலம், தற்போது வெறும் 1,700 ஏக்கராகச் சுருங்கியிருக்கிறது. அதாவது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரசின் நிலத்தைத் தனியார்கள் கூறுபோட்டு விற்றுவிட்டார்கள். அவர்களுக்குப் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்தார்கள். அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2004-ம் வருடம், 66.7 ஏக்கர் நிலத்தை ‘ஆங்கிலேயர் காலத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதாக’ச் சொல்லிவந்த ஒரு குழு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு டிரஸ்ட்டின் பெயரில் அதைப் பதிய வந்தது. ராயபுரம் சப்-ரிஜிஸ்ட்ரார் அங்கயற்கண்ணி அவர்களுக்குப் பத்திரம் பதிந்து தந்தார். ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் என்கிறரீதியில், 66 லட்ச ரூபாய் மதிப்பில் பதிவுசெய்தார். அரசு நிர்ணயித்த தொகையைவிட அது மிக மிகக் குறைவு. அதனால், இந்தப் பத்திரப்பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆர்.டி.ஓ (ஸ்டாம்ஸ்) பிரச்னையைக் கிளப்பினார். 2012-ம் வருடம், ஒருவர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, சென்னை போலீஸின் மத்தியக் குற்றப்பிரிவினர் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், அங்கயற்கண்ணி பெயரே எஃப்.ஐ.ஆரில் இல்லை. அவர்தான் இன்று கூடுதல் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி (இன்வெஸ்டிகேஷன்) பதவியில் இருக்கிறார்.

அடுத்து, பெரும்பாக்கத்தில் நடந்த கொள்ளை. அங்கு, 50 சென்ட்டுக்கும் குறைவான நிலத்தை ஏழு ஏக்கர் நிலம் அளவுக்கு சதுப்பு நிலத்தை அபகரிக்கும் விதமாகப் பதிவுசெய்தார் சப்-ரிஜிஸ்ட்ரார் கீதா. அவர்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று கீதா, உதவி பதிவுத்துறை தலைவர் பதவியில் இருக்கிறார். அதேபோலவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 2010-ல் பல சர்வே எண்களைக்கொண்ட புறம்போக்கு நிலங்களைப் பதிவுசெய்தார் சைதை சப்-ரிஜிஸ்ட்ரார் ரவீந்திரநாத். அவர் தற்போது அமைச்சர் மூர்த்தியின் சொந்த ஊரான மதுரையில், உதவி பதிவுத்துறைத் தலைவராக இருக்கிறார். அதேபோலவே, இல்லாத சர்வே எண்ணில் 10-க்கும் மேற்பட்ட பிளாட்டுகளைப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பதிவுசெய்தார் சப்-ரிஜிஸ்ட்ரார் ரகுமூர்த்தி. அவர், தற்போது கள்ளக்குறிச்சியில் மாவட்டப் பதிவாளர் (ஆடிட்) பதவியில் இருக்கிறார். இந்த வழக்கில் தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது நீதிமன்றம். ஆனாலும், இந்த ஊழல்வாதிகளைப் பதிவுத்துறையின் உயரதிகாரிகள் காப்பாற்றி வருகிறார்கள். பத்திரப் பதிவுத்துறையை மாஃபியாக்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

இந்தப் புகார்கள் குறித்துப் பத்திரப் பதிவுத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். “அங்கயற்கண்ணி விவகாரத்தில், அவர் 66.7 ஏக்கர் சதுப்பு நிலத்தைப் பத்திரம் பதிவுசெய்தது உண்மை. ஆனால், சுதாரித்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பத்திரத்தைத் தரவில்லை, நிறுத்தி வைத்துவிட்டார். நீதிமன்றத்துக்குப் பிரச்னை போனது. தற்போது அந்தப் பத்திரம் சென்னை டி.ஜ.ஜி-யிடம் உள்ளது. வருவாய்த்துறை தரப்பிலும் அந்தப் பட்டாக்கள் கேன்சல் செய்யப்பட்டு, காலி நிலங்களாகவே தற்போது உள்ளன. இருந்தாலும், அங்கயற்கண்ணி செய்த தவற்றுக்காக அவருக்கு 17 பி சார்ஜ் தரப்பட்டது. அதில், விசாரணையும் நடந்துவருகிறது. அடுத்து, உதவி ஐ.ஜி-யான கீதா, பள்ளிக்கரணை ஏரியாவில் எந்த நிலத்தையும் பதியவில்லை. இன்னொரு உதவி ஐ.ஜி-யான ரவீந்திரநாத், பட்டா இருந்ததால்தான் மூன்று பதிவுகளைச் செய்திருக்கிறார். பிறகு நடந்த விசாரணையில் அந்தப் பதிவுகளும் கேன்சல் செய்யப்பட்டன. இந்தப் புகார்களின் பின்னணியில், பத்திரப் பதிவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இருப்பது அரசுக்கும் தெரியும். கடந்தகாலங்களில் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கிறார். அதன் விசாரணை முடிவில் நிறைய பேர் சிக்கப்போவது உறுதி” என்றனர்.

“தமிழகம் முழுக்க 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. அவற்றில், தினமும் சுமார் 12,000 ஆவணங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு அலுவலகத்தை மையமாக வைத்து மட்டும் உள்ளேயும் வெளியேயும் சுமார் 3 கோடி ரூபாய் லஞ்சப்பணமாகக் கைமாறுகிறது” என்கிறார்கள்.

சில அதிகாரிகளின் பணத்தாசையாலும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களின் அடாவடி மூக்கு நுழைப்பாலும், மோசடியாக நிலம் அபகரிக்கப்படுகிறது... வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந்நிலை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism