Published:Updated:

``மக்கள் போராட்டங்கள் என்பது ஜனநாயக அடிப்படையானது" - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா

`குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் எதிரானது.’

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், கடந்த 8 நாள்களுக்கு மேலாக குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தொடர்முழக்கப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதே கோரிக்கையை முன்வைத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஞாயிறன்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பிரமாண்டப் பேரணி நடத்தினர்.

`அது யாரும் போட்ட பிச்சை அல்ல; சட்டம் தந்த உரிமை!'- `தேசம் காப்போம்' பேரணியில் திருமாவளவன்

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ``எதிர்த்துப் போராடு” மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்குப் பாடகர் கோவன் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் உற்சாகம் தந்தது.

திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பாலன், தமிழ்த் தேச விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சாய் பாலாஜி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், வழக்கறிஞர் ராஜு, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால கவுடா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, ``1949 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போதே, குடியுரிமை என்பதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது எனத் தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக உள்ளது.

குறிப்பாக மதத்தைக் காரணம் காட்டி சலுகை அல்லது பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்புச் சட்டம் ஒருபோதும் ஏற்காது. அதுமட்டுமல்லாமல், தேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாயமாக்கப்பட்டதை ஏற்கமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5, 11, 14,15, 16 ,19 மற்றும் 21 உள்ளிட்டவை தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மூலம் நமது உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை அரசு மீறமுடியாது.

குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 5 இந்தியர் பிறப்பால் குடியுரிமை பெறுவதாகக் கூறுகிறது. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும் என்கிறது. இது முரண்பாடாக இல்லையா? குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் எதிரானது.

மக்கள் போராட்டங்கள் என்பது ஜனநாயக அடிப்படையானது. ஆனால், மக்கள் போராடக்கூடாது என காவல்துறை அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதமானது. அனைத்திற்கும் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி வாங்க வேண்டிய சூழல் சரியல்ல. எந்த நிலை வந்தாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், இந்திய மக்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கத் தவறாதீர்கள். நானும் உங்களுடன் இருக்கிறேன்" என முடித்தார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின்  “எதிர்த்துப் போராடு” மாநாடு
மக்கள் அதிகாரம் அமைப்பின் “எதிர்த்துப் போராடு” மாநாடு

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், ``மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்காமல் குடியுரிமை பற்றிப் பேசுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 326 பிரிவின்படி குடியுரிமை பெற்றவர்தான் வாக்களிக்க முடியும். இப்போது வாக்காளர் அடையாள அட்டை ஆவணமாகக் கருதப்படாது என்கிறார்கள். சட்டத்தின்படி ஒரு குடிமகன்தான் பாஸ்போர்ட் பெற முடியும். ஆனால், பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணமில்லையாம். ஏப்ரல் மாதம் குடியுரிமை நிரூபிக்கக் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்பட்டு நாடற்றவர்களாக உருவாக்க முயல்கிறார்கள்.

காளியப்பன்
காளியப்பன்

இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைவரும் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள். மோடி, அமித் ஷா, பழனிசாமி ஆகியோர் இந்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் எனப் பொய் பரப்புகிறார்கள். இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்துவதே இவர்களின் நோக்கம். இந்தச் சட்டம் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எதிர்ப்பவர்களை, கருத்து சொல்பவர்களை முடக்குவதுதான் இவர்களின் திட்டம்.

பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனத் தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால், இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை ஏன் பரப்புகிறார்கள்?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா

இந்தியாவில் ராணுவம், காவல் துறை அனைத்தும் மத வெறியர்களாக மாறி உள்ளார்கள். திட்டமிட்டுக் கலவரம் நிகழ்த்தப்படுகிறது. பாபர் மசூதியில் மோசமான தீர்ப்பு. உச்ச நீதிமன்றமே நம்பும் படியாக இல்லை. போராட்டத்தைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த நாட்டின் பன்மைத் தன்மையைப் பாதுகாக்க, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வீதிக்கு வருவோம் " எனப் பேசினார்.

வழக்கறிஞர் ராஜு, ``ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள், தேசத்துரோகிகள் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். இங்கு நடப்பது கோமாதாவுக்கும் காளை அடக்குபவர்களுக்குமான போராட்டம்.

எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களே போராடினார்கள். முறியடித்தனர். வழக்கு சுமந்தோம், போராடினோம், சிறை சென்றோம். எந்தத் தலைவர்கள் வந்தார்கள். மக்களை ஒன்றுபடுத்தத் தலைவனில்லை. கட்சியில்லை. பி.ஜே.பி, அ.தி.மு.க வேண்டாம் என்பதானால் தி.மு.க 39 எம்.பிக்கள் வெற்றி பெற்றனர். சி.ஏ.ஏ அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

மக்களே, அ.தி.மு.க அமைச்சர்கள் உங்கள் ஊர்ப் பக்கம் வந்தால் கேள்வி கேளுங்கள். நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளது. பட்ஜெட்டில் பற்றாக்குறை பட்ஜெட் போடப்படுகிறது. இதைச் சமாளிக்கவே, பொதுத்துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சிகள். தேசத்தின் ஒட்டுமொத்தப் பிரச்னைக்குமான தீர்வு மக்கள் போராட்டங்கள் மூலம் மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டுவதுதான். ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு” என முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு