Published:Updated:

`` யாரும் தூங்கிவிடாமல் கல்வி கற்க வேண்டும்!" திறந்தவெளி வகுப்பறை விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை!

கல்லூரி தோட்டத்தில் ஊஞ்சலாடும் ஆளுநர் தமிழிசை
கல்லூரி தோட்டத்தில் ஊஞ்சலாடும் ஆளுநர் தமிழிசை

“தடுப்பூசி செலுத்தினால்தான் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேபோல மாணவர்கள் தடுப்பூசி செலுத்தினால்தான் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்படும் எனக் கொண்டுவரலாம்” –துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி, லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் திறந்த வெளி வகுப்பறையின் தொடக்கவிழா இன்று நடைப்பெற்றது. விழாவில் கலந்துகொண்டு ஆங்கில வகுப்பறையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உரையாடிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் அந்த எண்ணை மையமாக வைத்து இயற்கையை பாதுகாக்க பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி புதுவையில் 75,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். நாம் சுதந்திரமாக செயல்பட சுதந்திரப் போராட்ட தியாகிகள்தான் காரணம். மாணவர்கள் அதனை நினைவில் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி பசுமையாக மாறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மரக் கன்றை நட வேண்டும். ஏனெனில் ஒரு வேப்ப மரம் நான்கு ஏசிக்களின் குளிர்ச்சியைத்தரும் எனச் சொல்கின்றனர். இயற்கை வகுப்பறை மாணவர்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். அத்துடன் மரங்களின் சலசலப்பு, காற்று, பூக்களின் மனம் போன்றவை தாலாட்டவும் செய்யும். அதனால் யாரும் தூங்கிவிடாமல் கல்வி கற்க வேண்டும். ஆதிகாலத்தில் மரத்தடியில்தான் குருக்கள் வகுப்பறைகளை நடத்தினர். தற்போது அது மீண்டும் திரும்பியிருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் கேள்வி கேட்கும்போது ஒரு சிலர் மட்டும் தயங்கி தயங்கி பதில் கூறுகின்றனர். வாய்ப்புகள் சிலமுறைதான் கதவைத் தட்டும். அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கல்லூரி வளாகத்தை முழுமையாக பசுமையாக மாற்றியுள்ளனர். இந்த பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இது முன்மாதிரிக் கல்லூரியாக திகழ்கிறது. மரங்களை நடுவதன் மூலம் இயற்கையையும், பூமிப் பந்தையும் பாதுகாக்கலாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த கல்லூரி மாணவர்கள் 70 சதவிகிதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். அது 100 சதவிகிதமாக உயர வேண்டும். மாணவர்கள் தடுப்பூசிக்கு பிரசாரகர்களாக மாற வேண்டும், தாங்களும் தடுப்பூசி போட வேண்டும். நோயற்ற புதுவையை உருவாக்க வேண்டும். கல்லூரிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்கள் முன்பே ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி போட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதை உதாசீனப்படுத்திவிட்டு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

விநாயகர் சிலைக்கு அனுமதி ஏன்? – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் காரணம்!

கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க நிரந்தர தீர்வு தடுப்பூசிதான். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் பெரியளவில் பாதிக்காது. கொரோனா 3-வது அலையை நாம் தடுக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு. கல்லூரிகளில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்ற விபரத்தை கேட்கும்படி கூறியுள்ளோம். தடுப்பூசி செலுத்தினால்தான் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேபோல மாணவர்கள் தடுப்பூசி செலுத்தினால்தான் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்படும் எனக் கொண்டுவரலாம். கட்டாயப்படுத்துவது வருத்தமளிக்கிறதுதான் என்றாலும் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு