Published:Updated:

`ஹெல்மட் அணியவில்லை' ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த டிராபிக் போலீஸ்! என்ன நடந்தது?

``எனக்கு தெரிந்த போலீஸ் நண்பர் ஒருவரிடத்தில் கேட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் வந்துவிட்டது.அதனை செலுத்த வில்லை என்றால் எப்போதும் அது உனக்கான பிளாக் மார்க்காகவே இருக்கும்" எனக் கூறியதாக ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேட்டுத்தெருவில் வசிப்பவர் குருநாதன். ஆட்டோ டிரைவரான இவர் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

மதுரை போக்குவரத்து போலீஸ் விதித்த அபராதம்
மதுரை போக்குவரத்து போலீஸ் விதித்த அபராதம்

கடந்த ஏழு வருடங்களாக சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.போக்குவரத்து காவல்துறையின் விதியின்படி ஆட்டோவிற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்துள்ள நிலையில் மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீஸார் சார்பில் குருநாதனின் செல்போனுக்கு மேசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்தவில்லை, ஹெல்மட் அணியவில்லை எனக் கூறி மொத்தம் 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,அதனைச் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மதுரைக்கே செல்லாத தனக்கு எப்படி மதுரை போலீஸார் அபராதம் விதிக்கமுடியும் என குழம்பியிருக்கிறார். தன்னுடைய நண்பர்களான சக ஆட்டோ டிரைவர்களிடம் இதனைத் தெரிவிக்க அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த விவகாரத்தை சிஐடியுவின் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தில் தெரிவித்து முறையிட்டிருக்கிறார்.

இது குறித்து குருநாதனிடம் பேசினோம், ``நான் கடந்த 5ம் தேதி கும்பகோணத்தில் சவாரி சென்று கொண்டிருந்தேன் அப்போது எனக்கு மெசேஜ் ஒன்று வந்தது.அதில் ஆட்டோவில் இன்சூரன்ஸ் இல்லை, ஹெல்மெட் அணியவில்லை என அதற்காக ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீஸ் சார்பில் எனக்கு அந்த மெசேஜ் அனுப்பட்டிருந்தது. இதனை சக நண்பர்களான ஆட்டோ டிரைவர்களிடம் கூறினேன். ``நீ எப்படா மதுரைக்கு போன" என கேலி செய்தனர். பின்னர் சிஐடியு சங்கத்தில் தெரிவித்தேன். அவர்கள் இது குறித்து என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் என்னுடைய ஆட்டோவிற்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வருகிறேன் அத்துடன் சம்வத்தன்று நான் பஸ்ஸில்கூட மதுரைக்கு செல்லவில்லை.அப்படியிருக்கையில் எனது ஆட்டோவில் இன்சூரன்ஸ் இல்லை, நான் ஹெல்மட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர். மதுரை போக்குவரத்து போலீஸாரின் அலட்சியமே இதற்கு காரணம். கும்பகோணத்தில் எனக்கு தெரிந்த போலீஸ் நண்பர் ஒருவரிடத்தில் கேட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் வந்துவிட்டது.

Vikatan
ஆட்டோ
ஆட்டோ

அதனை செலுத்த வில்லை என்றால் எப்போதும் அது உனக்கான பிளாக் மார்க்காகவே இருக்கும்.ரூ 200 தானே அபராத பணத்தைக் கட்டிவிடு " என சாதரணமாகக் கூறினார்.

கொரோனா ஆரம்பித்ததிலிருந்தே போதிய வருமானமின்றி தவித்து வருகிறேன். போலீஸாரின் கவனக்குறைவு மேலும் என்னுடைய மன நிம்மதியை இழக்க செய்திருக்கிறது.இதையடுத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம். அலட்சியமாக செயல்பட்ட மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு அபராதம் விதித்து போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்வதுடன் அதனை ஆவணமாக தரவேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு