Published:Updated:

சீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...

சீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...
பிரீமியம் ஸ்டோரி
News
சீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...

கொரோனா நேரத்தில் கொந்தளிக்கும் எல்லை!

‘‘நமக்குப் பிடிக்காவிட்டால் நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அண்டை வீட்டுக்காரரை மாற்ற முடியாது’’ என்று வாஜ்பாய் ஒருமுறை சொன்னார். அடம் பிடிக்கும் அண்டை தேசப் பங்காளிகளால்தான் இந்தியாவுக்குப் பிரச்னை. எப்போதும் பாகிஸ்தான், இப்போது சீனா.

இந்திய-சீன எல்லையில் இப்போது எழுந்திருக்கும் பதற்றம், கார்கில் போருக்குப் பிறகு மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையுடன் ஒப்பிடும்போது, சீன எல்லையை ‘அமைதிப் பிரதேசம்’ எனலாம். 1976-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கு துப்பாக்கி முழக்கம் கேட்டதில்லை. 2017-ம் ஆண்டு இந்திய-பூடான் எல்லையில் சீனா அத்துமீறி சாலை போட முயன்றபோது, இந்திய ராணுவம் அதைத் தடுத்தது. 73 நாள்கள் இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே முறைத்துக்கொண்டு நின்றாலும், மோதல் நடக்கவில்லை. கடைசியில் சீனா விலகிச் சென்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த முறை அப்படி இல்லை. வழக்கத்துக்கு மாறாக ஆக்ரோஷம் காட்டுகிறது சீனா. சில இடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எல்லை தாண்டியிருக்கிறார்கள்; படைகளைக் குவிக்கின்றனர். என்ன நடக்கிறது எல்லையில்... எதனால் மோதல் ஏற்பட்டது.. விளைவுகள் என்னவாக இருக்கும்... சீனா திடீர் ஆவேசம் காட்ட என்ன காரணம்?

சீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...

கோடு இல்லை... ரோடு போடாதே!

சாலை மற்றும் ரயில் வசதிகளை இந்திய எல்லை வரை சீனா செய்துவைத்திருக்கிறது. சீனா நினைத்தால் சில மணி நேரங்களில் எல்லையில் படைகளைக் குவிக்க முடியும். ஆனால், இந்திய எல்லைப் பகுதியில் இப்படி வசதிகள் கிடையாது. வீரர்கள் நீண்ட தூரம் நடந்து சென்றே எல்லையைக் காவல் புரிகின்றனர். ‘ஏதாவது திடீர் மோதல் வந்தால், இதுவே இந்தியாவுக்குப் பெரிய பலவீனம் ஆகிவிடும்’ என்பதை உணர்ந்த மத்திய அரசு, எல்லையை ஒட்டி 73 இடங்களில் சாலைகள் அமைக்கத் திட்டமிட்டது. இதேபோல ஒன்பது ரயில் பாதைகளும், சில விமான இறங்குதளங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டன. 1999-ம் ஆண்டு இதற்கு அனுமதி தரப்பட்டது. ஆனால், இதுவரை 35 சாலைகளே போடப்பட்டுள்ளன. ரயில் பாதைப் பணிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. விமான இறங்குதளங்கள் மட்டும் விரைவில் தயாராகிவிட்டன.

டோக்லாம் மோதலுக்குப் பிறகு இந்த விஷயத்தில் மத்திய அரசு வேகம் காட்டிவருகிறது. இந்தச் சூழலில், ‘எங்கள் எல்லையில் இந்தியா அத்துமீறி ஆக்கிரமித்து சாலை போடுகிறது’ என நேபாள நாட்டைச் சொல்ல வைத்தது சீனா. அடுத்து அதுவே களமிறங்கிவிட்டது.

லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி, உலகிலேயே மிக உயரமான இடத்திலிருக்கும் விமான இறங்குதளம். இந்திய விமானப்படையின் இந்த விமானதளத்தை லடாக்கின் பிற பகுதிகளுடன் இணைத்து, 255 கிலோமீட்டர் நீளத்துக்குச் சாலை போட்டது இந்தியா. இந்தப் பிரதான சாலையிலிருந்து சீன எல்லை வரை சில இடங்களில் சாலை போட ஆரம்பித்தார்கள். எல்லாமே இந்தியப் பகுதியில் நிகழ்பவைதான்! ஆனால், ‘எங்கள் எல்லையில் ரோடு போடாதே’ என்று மோதியது சீனா. கால்வன் (Galwan) நதியின் பள்ளத்தாக்குப் பகுதியான அங்கு ஏற்பட்ட ஒரு சர்ச்சைதான் தற்போதைய இந்திய-சீன மோதலின் ஆரம்பப்புள்ளி. அங்குதான் மீண்டும் நெருப்பு புகைகிறது. இந்தியா தன் எல்லையை வலுப்படுத்திக்கொள்வதை சீனா விரும்பாததே மோதலுக்குக் காரணம்.

சீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...

போருக்குத் தயாராகிறதா சீனா?

எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதை சுட்டிக்காட்டி, ‘போருக்கு ஆயத்தமாகிறது அந்த நாடு’ என்கிறார்கள் சிலர். ஆனால், அது உண்மையில்லை! அதற்கான காரணங்கள் வலுவானவை...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • இந்தியாவிலிருக்கும் சீனர்களை அந்த நாடு திரும்பி வருமாறு அழைப்புவிடுத்ததைச் சிலர் குறிப்பிடுகிறார்கள். கொரோனா அதிகரிக்கும் சூழல் உள்ளதாலும், விமானப் போக்குவரத்துக்கு அனுமதி கிடைத்ததாலுமே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அமெரிக்காவிலிருக்கும் சீனர்களுக்கும் இதேபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

  • ஆண்டுதோறும் நடக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு, அந்த நாட்டின் முக்கியமான நிகழ்வு. அதில் ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், ‘‘சிக்கலான சூழ்நிலைகளைச் சமாளித்து, நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருங்கள். போருக்கு ஆயத்தமாகும் அளவுக்குப் பயிற்சிகளை அதிகப்படுத்துங்கள்’’ என்றார். இதையும் ஒரு காரணமாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், கடந்த ஆண்டு மாநாட்டிலும் இப்படித்தான் அவர் பேசினார்.

  • இந்த ஆண்டு மாநாட்டுக்குப் பிறகு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அளித்த 100 நிமிடப் பேட்டியிலும் இந்தியா பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. சீன அரசு மீடியாக்களும் இந்திய எல்லைப் பிரச்னையைப் பெரிதுபடுத்தவில்லை.

  • கொரோனாவால் உலகப் பொருளாதாரமே சரிந்துவிட்ட நேரத்தில், அதன் பாதிப்பு சீனாவிலும் எதிரொலிக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலையிழப்பு அதிகரித்திருக்கிறது. கொரோனா விவகாரத்தால் பல நாடுகள் சீனா மீது கோபத்தில் உள்ளன. இந்தக் கோபம் வர்த்தகத்திலும் எதிரொலிக்கும். இதனால் சீனாவின் ஏற்றுமதி குறையும். இந்த நிலையில், 130 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய சந்தையான இந்தியாவை அந்த நாடு பகைத்துக்கொள்ளாது.

  • ‘பெல்ட் ரோடு’ என்ற பெயரில் ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் மெகா கட்டமைப்புத் திட்டத்துக்காக பல லட்சம் கோடி ரூபாயை சீனா செலவிட்டிருக்கிறது. பல நாடுகளுக்குக் கடனும் கொடுத்தது. இப்படிக் கடன் பெற்ற நாடுகள் பலவும் இப்போது கொரோனாவால் திணறுகின்றன. அவர்களைச் சமாளித்து இந்தத் திட்டத்தைத் தொடர நிறைய பணம் சீனாவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் போருக்குச் செலவிட முடியாது.

  • உலகமே பதற்றத்திலிருக்கும் நேரத்தில், போரில் இறங்கும் ஒரு நாடு இயல்பாகவே தனிமைப்படுத்தப்படும். அமெரிக்காவுடன் வல்லரசுப் போட்டியில் இருக்கும் சீனா, இப்படிப்பட்ட தனிமைப்படுத்தலை விரும்பாது. இப்போதே ‘இந்திய-சீன எல்லைப் பிரச்னையில் சமாதானம் பேசத் தயார்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதுபோன்ற அறிவிப்புகளையே அவமானமாகக் கருதும் நிலையில் சீனா இருக்கிறது. அதனால்தான் ட்ரம்பின் அறிவிப்பு வெளியான மே 27-ம் தேதி, ‘இந்திய-சீன உறவின் உன்னதம்’ பற்றி இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் திடீரென்று பேசினார்.

ஏன் இந்த ஆக்ரோஷம்?

சரி, போர் மனநிலை இல்லையென்றால் சீனா ஏன் இப்படி ஆக்ரோஷம் காட்ட வேண்டும்? அதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

  • ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டம் மீண்டும் வலுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பால் சீனாவிலும்கூட மக்கள் மத்தியில் கொந்தளிப்பான மனநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மிரட்டவும், எல்லைப் பிரச்னையைக் காட்டி தேசபக்தியைத் தூண்டவும் இது தேவை.

  • ‘கொரோனா விவகாரத்தில் உலக நாடுகள் சுமத்தும் பழியால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. எப்போதும்போல வலிமையாகவே இருக்கிறோம்’ என்று காட்ட வேண்டியிருக்கிறது.

  • சீனாவிலிருக்கும் நிறுவனங்களை ஈர்க்கும் இந்தியாவின் முயற்சியைத் தடுத்து, ‘என்னைப் பகைத்துக்கொள்ளாதே’ என்று எச்சரிக்கவும் இப்படிச் செய்கிறது சீனா.

கடந்த ஆண்டுகளில் எல்லையில் சர்ச்சைகள் வந்தபோதெல்லாம் உறுதியாக நின்று சமாதானம் பேசி, ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்காமல் இந்தியா காத்தது. இம்முறையும் அதுவே நடக்கும்.

எல்லையில் தொல்லை ஏன்?

சீன ராணுவத்தினர் அடிக்கடி இந்திய எல்லைக்குள் வருவது பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. இந்தப் பக்கம் பாகிஸ்தானுடன் நமக்குத் தீர்மானமான ஓர் எல்லைக்கோடு இருக்கிறது. சீன எல்லையில் அப்படி எதுவும் இல்லாததே இதற்குக் காரணம். இந்திய-சீனப் போருக்குப் பிறகு சீன ராணுவம் எங்கே நிலைகொண்டதோ, அதுவே எல்லையாகக் கருதப்படுகிறது. வரையறுக்கப்பட்ட கோடுபோல அது இல்லை.

இரு நாடுகளின் எல்லைப் பகுதியின் நீளம் 3,488 கிலோமீட்டர். இதில் லடாக் எல்லையில்தான் சீனா அதிகம் ஊடுருவுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 130 முறை சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்ததாகப் பதிவு உள்ளது. ‘இந்த இடம் வரை நம் பகுதி’ என இந்தியா ஓர் எல்லையை நினைக்கிறது. சீனா இன்னோர் எல்லையை நினைக்கிறது. இரு தரப்பிலிருந்தும் வரைபடங்களைப் பகிர்ந்துகொண்டு, இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்டலாம். உலகெங்கும் இதுதான் வழக்கம். ஆனால், ஒரு கட்டத்தில் சீனா இதையும் நிராகரித்துவிட்டது.

சீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...

லடாக்கின் அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பு இது. இதேபோல அருணாசலப் பிரதேசத்தை ஒட்டி 90,000 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு உரிமை கொண்டாடுகிறது. இதை இந்தியா எதிர்க்கிறது. ‘அக்சாய் சின் பகுதியை மீட்போம்’ என்பது இந்தியாவின் முழக்கம். ‘‘அக்சாய் சின் பகுதியை உரிமை கோருவதை நிறுத்திவிட்டால், அருணாசலப் பிரதேசத்தை நாங்கள் கேட்க மாட்டோம்’’ என சீனா முன்பு இரண்டு முறை சொன்னது. இந்தியா இதற்குச் சம்மதிக்கவில்லை.

எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக உயர்மட்ட அளவில் இதுவரை 22 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. 2019, டிசம்பரில்கூட டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்துப் பேசினார்.

ஆனால், எல்லைப் பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருக்கவே விரும்புகிறது சீனா!