Published:Updated:

திண்டிவனம் ராமமூர்த்தி வாங்கிய ஸ்டே; சட்ட மேலவையைக் கொண்டு வர வழிவகுக்குமா?!

வெகு எளிதாகச் சட்ட மேலவையைக் கொண்டுவரலாம்.

ஆகஸ்ட் 14-ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்போகிறது. அதில், தமிழகத்தில் புதியதாக சட்ட மேலவை கொண்டுவரும் தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக செய்திகள் கசிந்துவருகின்றன. 1986-ல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது, சட்ட மேலவையைக் கலைத்தார். அதன் பிறகு, இதுநாள் வரை சட்ட மேலவை கொண்டு வரப்படவில்லை. தி.மு.க ஆட்சி வரும்போது, சட்ட மேலவையைக் கொண்டுவருவோம் என்பார்கள். அ.தி.மு.க ஆட்சி வரும்போதெல்லாம் சட்டவ் மேலவை வேண்டாம் என்பார்கள். இப்படிக் கழக பாலிடிக்ஸில் பந்தாடப்பட்டுவருகிறது சட்ட மேலவை. இப்போது மீண்டும் தி.மு.க ஆட்சி பதவி ஏற்றதும், சட்ட மேலவையைக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டிவருகிறார்கள். தமிழகத்தின் நிதி நிலைமை சீர்கெட்டுக் கிடக்கிற நிலையில் எதற்கு சட்ட மேலவை கொண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பிவருகின்றனர். மத்தியில் பி.ஜே.பி-க்கும் தி.மு.கழகத்துக்கும் ஏளாப் பொருத்தம். அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலுள்ள பி.ஜே.பி கட்சி, சட்ட மேலவையை கொண்டுவரும் தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் கிடப்பில் போடுவார்கள். ஆனால், திண்டிவனம் ராமமூர்த்தி வாங்கிய ஸ்டே-வை உடைத்தாலே, வெகு எளிதாகச் சட்ட மேலவையைக் கொண்டுவரலாம் என்கிறார்கள் தமிழக அரசியல் பிரமுகர்கள்.

அது என்ன என்கிறீர்களா?

கடந்த சில வாரங்களாக, தமிழக சட்டசபையில் சட்டமேலவை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் உலாவரும் தகவலைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி டென்ஷன் ஆகியிருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு, தஞ்சையிலிருந்த அவருடைய மருமகனும், வக்கீலுமான ராஜ்மோகனை சென்னைக்கு அழைத்திருக்கிறார். ``சட்ட மேலவையைக் கொண்டுவரக் கூடாது என்று நான் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி பத்து வருடங்களாக நிலுவையில் உள்ளது. அதை உடைக்க நடவடிக்கை எடுத்தாலே போதும்! அதைச் செய்யாமல், முதல்வர் ஸ்டாலின் இப்போது மீண்டும் தீர்மானம் கொண்டுவர நினைப்பது ஏன்?" என்று ஆவேசப்பட்டிருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக, ஆகஸ்ட் 8-ம் தேதியன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டிவனம் ராமமூர்த்தி இறந்துபோனார்.

திண்டிவனம் ராமமூர்த்தி
திண்டிவனம் ராமமூர்த்தி

அவரின் மருமகன் ராஜ்மோகனிடம் பேசினோம். ``2009-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. மாநிலத்தில் கருணாநிதி ஆட்சி. இருவரும் கூட்டணி வைத்திருந்தனர். அதனால்தான், தமிழக சட்டசபையில் மேலவையைக் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றி, டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. நாடாளுமன்றத்திலும் இரு அவைகளிலும் அது ஒ.கே ஆகி, ஜனாதிபதியின் கையெழுத்துக்குப் போனது. க்ளைமாக்ஸில் என் மாமனார் தலையிட்டார். தமிழகத்திலுள்ள சுமார் 14,000 கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சட்ட மேலவையில் ஒட்டுப்போட உரிமை இல்லை என்று ஆளும் தி.மு.க அரசு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை என் மாமனார் எதிர்த்தார். ஆசிரியர், உள்ளாட்சி அமைப்பு, பட்டதாரிகள், எம்.எல்.ஏ-க்கள் என்கிற பல்வேறு பிரிவுகளின் கீழ் மேலவை உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அதில், உள்ளாட்சி அமைப்பு என்கிற பேனரில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும். அவர்களுக்கும் ஒட்டுரிமை வேண்டும். அதை தி.மு.க அரசு ஏன் மறுக்கிறது என்று நியாயம் கேட்டார்.

Live Updates: தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: ``அதிரடி மாற்றங்களுக்கு தமிழக அரசு தயார்!" - பி.டி.ஆர்

ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர் பாணியில் சட்ட மேலவையை விரும்பவில்லை. என் மாமனாரின் முடிவைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, அவர் சார்பில செங்கோட்டையன், ஓ.பன்னீர்செலவம் உள்ளிட்ட குழுவினரை அனுப்பினார். இருதரப்பினரும் ஆலோசனை செய்தோம். தஞ்சை மாவட்டம், திருவையாறு ஏரியாவிலுள்ள மேல உத்தமநல்லூர் என்கிற கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் தங்க ராமகிருஷ்ணனை அழைத்துப் பேசினோம். அவரும் வழக்கு போட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆனது. அதோடு என் மாமனார் விடவில்லை! டெல்லி உச்ச நீதிமன்றத்தில் என் மாமனார் பெயரில் ஸ்டே வாங்கினோம். அது இன்று வரை நிலுவையில் இருக்கிறது. அதற்கான தீர்வை முறைப்படி மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னாலே போதும். ஸ்டே விலக்கிக்கொள்ளப்படும். அதைவைத்தே, சட்ட மேலவையை நடத்தலாமே... பிறகு எதற்கு இப்போது தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்?’’ என்று கேள்வி கேட்கிறார் ராஜ்மோகன்.

தி.மு.க தரப்பில் விசாரித்தோம்!

``உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள திண்டிவனத்தாரின் ஸ்டேயின் நிலையை விசாரித்துவருகிறோம். அவர் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. நிச்சயமாகச் சட்டப் பிரச்னையைச் சரிசெய்து சட்ட மேலவையைக் கொண்டுவருவோம்’’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு