Published:Updated:

நோய்த்தொற்று காலத்திலும் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்!

நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாடாளுமன்றம்

`உறுதிமொழியை நாடாளுமன்றத்துக்கு உள்ளேதான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சட்டத்தில் கூறப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 45 பேர் டெல்லிக்குச் சென்று, நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர் டெல்லிக்குச் செல்ல முடியாததால், பிறிதொரு நாளில் அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் 3-ம் அட்டவணையின்கீழ் உறுதிமொழி (சத்தியப் பிரமாணம்) எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். நம்பிக்கை யுள்ளோர் இறைவனின் பெயரிலும், இறை நம்பிக்கையற்றவர்கள் ‘உளமார’ எனக் கூறியும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

 கே.சந்துரு - மேனாள் நீதிபதி, 
சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு - மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

மாநிலங்களவையில் சிறுபான்மையாக உள்ள பா.ஜ.க, தன்னை பெரும்பான்மையாக மாற்றிக் கொள்வதற்காக தொற்றுநோய் காலத்தையும் பொருட்படுத்தாமல் மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்தியது. ஆனால், நான்கு மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 உறுப்பினர்கள் தங்களை உறுப்பினர்களாக அறிவித்துக்கொள்ள முடியவில்லை.

உறுதி எடுத்துக்கொள்வது எங்கே?

அரசமைப்புச் சட்டம் 99-வது பிரிவில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்டாயமாக அட்டவணை மூன்றிலுள்ள உறுதிமொழியை எடுத்துக்கொண்டால்தான் அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமரலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழியை குடியரசுத் தலைவர் அல்லது அவரால் அத்தாட்சி பெற்றவர் முன்னால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், `உறுதிமொழியை நாடாளுமன்றத்துக்கு உள்ளேதான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சட்டத்தில் கூறப்படவில்லை. அதேபோல், குடியரசுத் தலைவரால் அத்தாட்சி பெற்றவர், எங்கு வேண்டுமானாலும் நேரில் சென்று உறுப்பினரிடம் உறுதிமொழி பெறலாம். பிறகு, ‘சம்பந்தப்பட்ட உறுப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்’ என்று சான்றிதழ் அளிக்க முடியும். இதைச் செய்யாததால், தேர்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் நான்கு மாத காலம் தங்களது பதவியை அனுபவிக்க முடியாத/மக்கள் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

மாற்றுவழியும் உண்டு!

குடியரசுத் தலைவர் அல்லது அவரால் அத்தாட்சி பெற்ற நபரின் முன்னால் உறுதிமொழி எடுத்துக்கொள்ள முடியவில்லையென்றால் வேறொரு வழியும் உள்ளது. இதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்நிகழ்வு தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினருக்கான உறுதிமொழி தொடர்பானது.

சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு ஆளுநர் அல்லது அவரின் அத்தாட்சி பெற்றவரால் உறுதிமொழிப் பிரமாணம் செய்விக்க அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 188-ல் கூறப்பட்டுள்ளது. சட்ட மேலவையில் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் முதல் நாள் கூட்டத்தில், தங்களின் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரை தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர். அவருக்கு அத்தாட்சி அளிக்கப்பட்டு, பிறகு அவரே மற்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

பட்டதாரி தொகுதியில் நின்று வெற்றி பெற்று மேலவைக்குச் சென்றபோது வசந்தா பை என்ற மூத்த வழக்கறிஞர், ‘மேலவையின் தற்காலிகத் தலைவரின் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள மாட்டேன்; ஆளுநரே எனக்கு உறுதிமொழி பிரமாணம் செய்துவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ஆளுநர் அதற்கு பதிலளிக்க வில்லை. அதனால், தனது உறுதிமொழியைக் கடிதத்தில் எழுதி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டப்படி, தான் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக ஒரு பிரகடனத் தீர்ப்பளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உறுதிமொழியை அவர் சட்டப்படி எடுத்துக்கொண்டதாக அறிவித்து நீதிமன்றம், பேரவை நடவடிக்கைகளில் அவரைப் பங்குகொள்ள அனுமதித்தது (1978). இப்படி, கடிதம் வாயிலாகவும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்!

நோய்த்தொற்று காலத்திலும் நாடாளுமன்றம் 
கூட்டப்பட வேண்டும்!

நாடாளுமன்றம் தடைப்படக் கூடாது!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியரசுத் தலைவரின் உத்தரவால் கூட்டப்படும். ‘அவையின் கூட்டத்தொடர் முடிந்து, அடுத்த அவைத்தொடர் கூட்டுவதற்கான இடைப்பட்ட காலம் ஆறு மாதங்களுக்கு மிகைப்படக் கூடாது’ என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் தலைமையில் அமைந்த அமைச்சரவை இரு அவைகளின் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டது.

கடைசியாக நாடாளுமன்றம் மார்ச் 23-ம் தேதி கூடியது. அதற்கடுத்து நடைமுறைப்படி மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை முதல் வாரத்தில் கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனாநோயைக் காரணம் காட்டி இதுவரை நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை. அரசமைப்புச் சட்டப்படி கட்டாயம் செப்டம்பர் மாதத்துக்குள் கூட்டப்பட வேண்டும். அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ‘அவைகளைக் கூட்டுவதற்கான சாத்தியப்பாடு இல்லை’ என்று அறிவித்துவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 55. மேலும், அனைவரும் தொற்றுநோய் காலத்தில் டெல்லிக்கு வருவது சாத்தியப்படாது. கூட்டம் கூட்டப் பட்டாலும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பதற்கு அவையில் இடப்பற்றாக்குறை உள்ளது. மக்களவையில் 100 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 60 உறுப்பினர்களையும் மட்டுமே அமரவைக்க முடியும்.

இடம் ஒரு பொருட்டல்ல!

சரி, அதற்காக இந்த இக்கட்டான நேரத்தில் மக்களை `அம்போ’வென விட்டுவிட முடியுமா? இப்போதுதானே மக்கள் பிரதிநிதிகளின் சேவை மக்களுக்கு அதிகம் தேவை! இந்தப் பிரச்னையை எளிதாக எதிர்கொள்ளலாம்.

‘இரு அவைகளும் குடியரசுத் தலைவர் குறிப்பிடக்கூடிய தேதிகளில், நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் கூட்டப்பட வேண்டும்’ என்றுதான் அரசமைப்பு சட்டத்தின் 85-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. ‘அது நாடாளுமன்றக் கட்டடம்’ என்றோ, ‘டெல்லி நகரத்தில் மட்டுமே கூட்டப்பட வேண்டும்’ என்றோ சட்டத்தில் எங்குமே கூறப்படவில்லை. தவிர, நாடாளுமன்றத்தின் நிலைக்குழுக் கூட்டங்கள் இன்றும் அவை விரும்பக்கூடிய பகுதிகளில் நடப்பது வழக்கமானதுதான்.

நோய்த்தொற்று காலத்திலும் நாடாளுமன்றம் 
கூட்டப்பட வேண்டும்!

தேவை காணொலிக் கூட்டங்கள்!

மாலத்தீவில், தொற்றுநோய் காரணமாக நாடாளுமன்றக் கூட்டங்களை காணொளி மூலம் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவும் ஐக்கிய ராஜ்ஜியமும் (UK) அதே போன்ற முடிவுகளை எடுத்துள்ளன. அதேபோல் இந்தியாவும் நாடாளுமன்றக் கூட்டங்களைக் காணொளி மூலம் நடத்துவதற்கு எவ்விதத் தடையும் இல்லை. ‘குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கக்கூடிய தேதியில், குறிப்பிட்ட இடத்தில் நாடாளுமன்றக் கூட்டங்களைக் கூட்டலாம்’ என்ற அதிகாரத்தை அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது கோடைக்காலங்களில் சட்டமன்றக் கூட்டங்கள் உதகமண்டலத்தில் நடத்தப்பட்டன. “குடல் எரியுது... கும்பி கருகுது... குளுகுளு ஊட்டி ஒரு கேடா?” என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பிறகே சட்டமன்றக் கூட்டம் அங்கு நடப்பது ரத்து செய்யப்பட்டது.

அதேபோல தேவைக்கேற்ப கர்நாடகத்தின் சட்டமன்றம் பெலகாவியிலும், கோடையில் மகாராஷ்டிரா சட்டமன்றம் நாக்பூரிலும் நடந்துவருவது இன்றைய வரலாறு. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காஷ்மீரத்தின் தலைநகரம் ஶ்ரீநகரிலும் ஜம்முவிலும் மாறி மாறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எனவே, உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படடவர்கள் டெல்லிக்குச் செல்லாமலேயே தங்கள் வீட்டிலிருந்தே உறுதிமொழியை எடுத்துக்கொள்வதில் சட்டத்தடை ஏதுமில்லை. அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைக் கூட்டங்களும், தமிழக சட்டமன்றக் கூட்டமும் காணொளி மூலம் நடத்தப்படுவதற்கு குடியரசுத் தலைவரும் ஆளுநரும் முறைப்படி உத்தரவிடுவதற்கும் தடைகள் ஏதுமில்லை!

அப்போதுதான் அமைச்சரவைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவைகளின் கட்டுப்பாட்டில் செயல்படுவதை அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதி செய்ய முடியும். மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற அறைகூவலுக்கும் பொருத்தமாக அமையும்!