Published:Updated:

பா.ஜ.க-விலிருந்து அழைப்பு; ஓ.பி.எஸ் சந்திப்பு; ஒற்றைத் தலைமை யார் முடிவு? - கே.பாக்யராஜ் ஓப்பன் டாக்

கே.பாக்யராஜ் ( Sarpana B. )

"ஓ.பி.எஸ்ஸை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அவரே போன் செய்து அழைத்தார். அது இப்படி ஃபோகஸ் ஆகும்னு எதிர்பார்க்கலை. எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த என்னால், அவர் ஆரம்பித்த கட்சிக்கு ஒரு கஷ்டம் வந்தால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?" - கே.பாக்யராஜ்

பா.ஜ.க-விலிருந்து அழைப்பு; ஓ.பி.எஸ் சந்திப்பு; ஒற்றைத் தலைமை யார் முடிவு? - கே.பாக்யராஜ் ஓப்பன் டாக்

"ஓ.பி.எஸ்ஸை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அவரே போன் செய்து அழைத்தார். அது இப்படி ஃபோகஸ் ஆகும்னு எதிர்பார்க்கலை. எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த என்னால், அவர் ஆரம்பித்த கட்சிக்கு ஒரு கஷ்டம் வந்தால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?" - கே.பாக்யராஜ்

Published:Updated:
கே.பாக்யராஜ் ( Sarpana B. )

’நீயா, நானா?’ என அ.தி.மு.க-விற்குள் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பதவி யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், இயக்குநர் கே.பாக்யராஜ் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து `அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும்' என்றுக் கூறி இருதரப்பையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், பாக்யராஜை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

திடீரென ஓ.பி.எஸ்ஸை சந்திக்கும் எண்ணம் எப்படி வந்தது?

“சில வருடங்களாக அரசியலில் ஒரு பார்வையாளராக அமைதி காத்துவருகிறேன். ஆனாலும், 'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்'ன்னு சொல்வார்களே, அப்படித்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி விமர்சனங்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் மனசு ரொம்ப வேதனையாகிடும். புரட்சித் தலைவர் சினிமாவில் முன்னணி இடத்திற்குக் கஷ்டப்பட்டு வந்தவர். 'என்னைவிட சீக்கிரமா முன்னுக்கு வந்துட்ட. அதனால, சினிமாவில் ஒரு ரசிகனைக்கூட இழந்துடக்கூடாது. சின்ன சங்கடம்கூட வந்துவிடவேண்டாம். நீ சினிமாவை மட்டுமே பார்' என்று பேசும்போதெல்லாம் சர்வ ஜாக்கிரதையாகச் சொல்வார் எம்.ஜி.ஆர்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது அமெரிக்காவில் சென்று பார்த்துவிட்டு வந்து மேடைகளில் பேசினேன். மறுபடியும் இடைத்தேர்தலுக்காகப் பேசினேன். இப்படி எம்.ஜி.ஆருடனும் அ.தி.மு.க-வுடனும் நெருக்கமாக இருந்த என்னால், அவர் ஆரம்பித்த கட்சிக்கு ஒரு கஷ்டம் வந்தால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? மக்கள் நலனுக்காகக் கட்சி ஆரம்பித்தார். அந்தக் கட்சி இப்போ டேமேஜ் ஆகுதேன்னு மனசு கஷ்டமா இருக்கு.

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

20 நாள்களுக்கு முன்பு ஓ.பி.எஸ் போன்செய்து, என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். முதல்வராக இருந்தவர் பேசவேண்டும் என்று கேட்டதை அவாய்டு பண்ண முடியல. அப்படிப் பண்றது மரியாதையும் கிடையாது. சும்மா போய்ப் பேசிட்டு வரலாமேன்னு போனேன். பிரைவசிக்காக ஹோட்டலில் ரூம் போட்டிருந்தார்கள். அங்கு கட்சி ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள். 'தனியா மீட் பண்ணணும்னுதானே வந்தோம்? இத்தனை பேர் இருக்காங்களே'ன்னு கேட்டதுக்கு 'மீட்டிங் நடக்கிறது' என்றார்கள். பின்பு மரியாதை நிமித்தமாக ஓ.பி.எஸ்ஸும் நானும் சால்வை போட்டுக்கொண்டோம்.

'ஒன்றாக இருப்பதற்காகத்தான் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கட்சிக்காக இணைந்து செயல்படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். நானும் 'கடைசித் தொண்டனாக கட்சிக்கு வரத் தயார். நான் பேசினால் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். சின்னத் தத்தளிப்புக்கு உயிரூட்டின மாதிரி இருக்குமே' என்றேன். அவரும் அதைத்தான் விருப்பப்பட்டார். அப்போது, கட்சியினரும் பத்திரிகையாளர்களும் அங்கு வந்துவிட்டார்கள். அதனால், அவர்களைத் தவிர்க்க முடியலை. என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மூவரையும் இணைக்கும் இணைப்புப் பாலம் நீங்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

"ஒவ்வொருவரும் எதிரும் புதிருமாக இருப்பதால் மூர்க்கத்தனமாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால், திடீரென அவங்களே பழசை மறந்துட்டு 'மறப்போம் மன்னிப்போம்' என்று மாறிவிடுவார்கள். வைகோவும் விமர்சிப்பது, பின்பு கூட்டணி சேர்வது என்றிருந்தார். போவதும் வருவதும் அரசியலில் சகஜம்தான். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்."

ஆனால், இ.பி.எஸ் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாரே?

“என்னவென்று தெரியாமல் நாம் சொல்லக்கூடாது. அவரிடமும் பேசலாம் என்றிருக்கிறேன். ஏனோ நான் ஓ.பி.எஸ்ஸை மட்டும் சந்தித்த மாதிரி, ஒரு தோற்றம் உண்டாகியுள்ளது. மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். என் ரசிகர்களே, ‘அண்ணா என்ன இப்படிப் பண்ணிட்டீங்க. நாங்களும் சேர்ந்து வந்திருப்போமே’ என்றார்கள். 'எனக்கு அந்த ஐடியாவே இல்லய்யா. சும்மா பார்த்துப் பேசிட்டு வரப்போனேன். நானே இப்படி ஃபோகஸ் ஆகும்னு நினைக்கலை. அப்படிக் கட்சியில் சேர்ந்தால் சொல்லிட்டுப் போறேன்'ன்னு சொன்னேன்."

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

பா.ஜ.க அ.தி.மு.க-வைப் பயன்படுத்திக்கொண்டதால், அ.தி.மு.க திசை மாறிவிட்டது என்கிறார்களே?

“அவ்வளவு டீப்பாக நான் அரசியலுக்குச் செல்லவில்லை. அ.தி.மு.க திசை மாறிவிட்டதாகவும் நினைக்கவில்லை. காலச்சூழலில் சில விஷயங்களில் சேஞ்ச் மாதிரி தெரியும். நாணலைப் போல வளைந்து கொடுத்து சமாளித்துப் போகவேண்டும். கெட்டியாக நின்றால் உடைந்துவிடும். மூன்றாவதாக ஒரு கட்சி என்ற ஆங்கிளில் போவதைவிட, நாம் ஒன்றாக இருந்தோம் என்பதை நினைத்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்."

பா.ஜ.க-வில் இணைய உங்களுக்கு அழைப்பு வந்ததா?

"முக்கியமான வி.ஐ.பி-க்கள் நம் கட்சியில் சேர்ந்தால் நல்லாருக்குமேன்னு ஆசைப்படுவதும் கேட்பதும் எல்லாக் கட்சியினரும் கேட்பதுதான். அந்த மாதிரிதான் எனக்கு பா.ஜ.க-விலிருந்து அழைப்பு வந்தது. 'யோசித்துச் சொல்கிறேன்' என்று கூறிவிட்டேன். ஆனால், அதற்கு நடுவில் ஏற்பட்ட சில சம்பவங்களால் நிறைய விமர்சனத்துக்குள்ளானேன். ஒரு திரைத்துறையினராகவும் பத்திரிகையாளராகவுமே பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்."

சசிகலாவைச் சந்தித்தீர்களா?

“அம்மா மறைவுக்குப் பிறகு திரையுலத்தினர் சந்தித்ததுபோல், நானும் 'வணக்கம்' சொல்லிட்டு வந்தேன். மற்றபடி பேசுவதற்கு ஒன்றுமில்லை. 'அவசர போலீஸ்' படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டபோது, அம்மாவும் சசிகலாவும் பார்த்தார்கள். அதேபோல, நிகழ்ச்சிகளில் மீட் பண்ணியிருக்கேன். எங்கேயாவது பார்த்தால் நலம் விசாரிப்போம். அவ்வளவுதான்."

நடிகர் சங்கத்தினர் உங்கள் மீது 'ஒழுங்கு நடவடிக்கை' என்றிருக்கிறார்களே?

“அவர்களை நான் எதுவும் காயப்படுத்தின மாதிரி எழுதலை. தேர்தலின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை, அப்படியே பதிவு செய்தேன். சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்பதைத் தெரிவித்தேன். அவர்களைப் பெரிய எதிரி மாதிரியெல்லாம் நினைக்கவில்லை."

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

ஒற்றைத் தலைமைக்கு யார் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?

"தலைவர் இறந்தபோதும் கோஷ்டிப் பூசல் உருவானது. 'இறந்து ஒருவாரம்கூட ஆகல. அதற்குள்ளாகவா? கொஞ்சநாள் கழிச்சு பொதுக்குழுவைக் கூட்டி யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யலாம். அப்போதுதான் ஆரோக்கியமாக இருக்கும்' என்றேன். இப்போதும், அதுபோல்தான் கோஷ்டிபூசல் ஏற்பட்டுள்ளது. என்ன இருந்தாலும் தொண்டர்கள் முடிவுக்குத் தலைமை கட்டுப்படவேண்டும். யாரையும் ஒதுக்காமல் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். அதில், நியாயம் கேட்கலாம். தொண்டர்கள் முடிவு செய்யட்டும்."

கே.பாக்யராஜ் பேட்டியின் முதல் பாகம் இது. இரண்டாம் பாகம் விரைவில்...