அலசல்
Published:Updated:

‘ஈகோ’வால் சறுக்கினாரா ஸ்டாலின்!

ராக்கெட் ஏவுதளம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராக்கெட் ஏவுதளம்

ராக்கெட் ஏவுதளம் யாரால் வந்தது?

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் வேகம் பிடித்துள்ள சூழலில், ‘ராக்கெட் ஏவுதளம் திட்டத்தைக் கொண்டுவர காரணம் நாங்கள்தான்’ என்று சட்டமன்றத்திலேயே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் முட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. இந்த விஷயம் தென்மாவட்டங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வின் எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணன், ‘குலசேகரப்பட்டினத்தில் கலைஞர் மற்றும் கனிமொழியின் முயற்சியால் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’ என்று சட்டமன்றத்தில் சொல்ல... முதல்வர் பழனிசாமி குறுக்கிட்டு, ‘என்னால்தான் திட்டம் வந்தது. கனிமொழியால் இந்தத் திட்டம் கொண்டுவரப்படவில்லை’ என்றார். அப்போது மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு எதையும் பேசவில்லை என்பது, கனிமொழி ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘‘இந்தத் திட்டத்துக்காக ஜெயலலிதா ஒரு வார்த்தை பேசியதில்லை. 2010-லேயே கலைஞர், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். மத்திய அமைச்சர்களை பலமுறை நேரில் சந்தித்து இதுபற்றிப் பேசியிருக்கிறார் கனிமொழி. கோரிக்கை மனுக்களையும் கொடுத்துள்ளார். பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், சசிகலா புஷ்பா எம்.பி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு தாங்கள்தான் கொண்டுவந்தோம் என்பதுபோல முதல்வர் பேசியிருக்கிறார். அதற்கு சிறிதுகூட எதிர்ப்பு தெரிவிக்காமல் ஸ்டாலின் வேடிக்கை பார்த்திருக்கிறார். இதற்குக் காரணம், கனிமொழி மீதான அவருடைய ஈகோதான்’’ என்கிறார்கள் கனிமொழி ஆதரவாளர்கள்.

‘ஈகோ’வால் சறுக்கினாரா ஸ்டாலின்!

அதேசமயம் பகுதி மக்களோ, அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராட்டுகிறார்கள். வெங்கடேஸ்வராபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதி, கனிமொழி தொடங்கி பலரும் குரல்கொடுத்திருக்கிறார்கள். இஸ்ரோ சார்பாக திட்டத்துக்கு நிலம் தேவை எனக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமியும் நிலத்தை வழங்க தீவிரம்காட்டியுள்ளார். அனைவரின் முயற்சியும் பாராட்டுக்குரியது. ராக்கெட் உதிரிபாகங்கள் செய்வதற்கான தொழிற்சாலையை அமைக்கவும் இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. அதற்கு 1,500 ஏக்கர் நிலம் தேவை. நெல்லை - குமரி நெடுஞ்சாலையில் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலத்தை இஸ்ரோவிடம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும்.

யார் கொண்டுவந்தாலும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நன்மைதான். இந்தச் சூழலில் அரசியல் கட்சியினர் போட்டி, பொறாமை கொள்ளாமல் ஒற்றுமையாக ஓரணியில் நின்று குரல்கொடுக்க வேண்டும்” என்றார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!