Published:Updated:

கும்பகோணம்: சவாலான கொலை வழக்கு; ஓராண்டில் தண்டனை பெற்றுத்தந்த போலீஸ் டீமுக்கு குவியும் பாராட்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாராட்டுபெற்ற போலீஸ் டீம்
பாராட்டுபெற்ற போலீஸ் டீம் ( ம.அரவிந்த் )

முதல் மூன்று மாதங்கள் வரை போலீஸுக்குக் கொலையாளிகள் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அந்த அளவுக்குக் கொலைக் கும்பல் சாமர்த்தியமாக, திட்டமிட்டு கொடிய செயலை அரங்கேற்றியிருந்தது.

கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் ஒரு வருடத்துக்குள் கொலைக் குற்றவாளிகளைப் பிடித்து, தகுந்த ஆதாரத்துடன் தண்டனை வாங்கிக் கொடுத்த போலீஸ் டீமை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சான்றிதழ் மற்றும் வெகுமானம் வழங்கி பாராட்டியிருக்கிறார். மேலும் வணிகர்கள், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துவருவது போலீஸ் வட்டாரத்தை உற்சாகமடையச் செய்திருக்கிறது.

சான்றிதழ் கொடுக்கும் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்
சான்றிதழ் கொடுக்கும் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்

கும்பகோணம், மேலக்காவிரி பகுதியைச் சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி ராமநாதன் (63). இவர் கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் தனது மனைவி விஜயாவுடன் வீட்டில் இருந்தபோது, திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் வந்த மர்ம நபர்கள் ராமநாதனின் மனைவி விஜயாவைத் தனி அறையில் பூட்டிவிட்டு ராமநாதனைக் கொலை செய்தனர். பின்னர் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். போலீஸ் தரப்பில் ஆதாயக் கொலை எனக் கூறப்படும் இந்தக் கொலைச் சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் அப்போதைய கும்பகோணம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரை நியமித்து தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் தனிப்படை எஸ்.ஐ கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸ் படையினர் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கொலைசெய்யப்பட்ட ராமநாதன்
கொலைசெய்யப்பட்ட ராமநாதன்

விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் தரப்புக்கு முதல் மூன்று மாதம் வரை கொலையாளிகள் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு கொலைக் கும்பல் சாமர்த்தியமாக திட்டமிட்டு இந்தக் கொடிய செயலை அரங்கேற்றியிருந்தனர். அதன் பிறகு கொலையாளிகள் குறித்து, காவல் உதவி எண் 100-க்கு போன் செய்த ஒருவர், சில தகவல்களைச் சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். அதன் அடிப்படையில் சதேகத்துக்கிடமான அந்தக் கும்பலை பத்து நாள்களுக்கு மேலாக `பாலோ செய்து, கொலையாளிகள் அந்த கும்பல்தான் என்பதை உறுதி செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி கும்பகோணம் ஆல்வான்கோயில் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான தங்கபாண்டியன், மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சன், வினோத், பாலாஜி ஆகியோரைக் கைதுசெய்தனர். கொலைக்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் என அனைத்தையும் போலீஸ் டீம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீதிபதி பெஞ்சமின்ஜோசப் விசாரணை மேற்கொண்டார்.

போலீஸ் டீம்
போலீஸ் டீம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், மேலும் தலா 10 ஆண்டுகள் கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதாகவும், இந்த தண்டனையை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சுமார் ஒரு வருடத்தில் கொலைக் குற்றவாளிகளைப் பிடித்து `சபாஷ்’ போடவைக்கும் வகையில் பெரிய தண்டனை வாங்கிக் கொடுத்து மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ள கும்பகோணம் போலீஸ் டீமுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தனிப்படை எஸ்.ஐ கீர்த்தி வாசன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட போலீஸ் டீமை அழைத்து சான்றிதழ் கொடுத்து, வெகுமானம் வழங்கிப் பாராட்டினார்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இது குறித்து தனிப்படை எஸ்.ஐ கீர்த்திவாசனிடம் பேசினோம். ``ஒரு சில வழக்குகள் அதில் ஈடுபட்டுள்ள போலீஸ் தரப்புக்கு பெரும் சவாலாக இருக்கும். அப்படித்தான் எண்ணெய் வியாபாரி ராமநாதன் கொலை வழக்கும் அமைந்தது. குற்றவாளிகளை நெருங்கவே எங்களுக்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பின்னர் குற்றவாளிகளை உறுதி செய்துகொண்டதுமே அவர்களைப் பிடித்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துவிட்டோம்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததால் குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகளை உடைக்க முடியவில்லை. அத்துடன் ஒரு வருடம் வரை நடைபெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சிகள் பிறழாத வகையில் கவனமாகப் பார்த்துக்கொண்டோம்.

போலீஸ் எஸ்.ஐ கீர்த்தி வாசன்
போலீஸ் எஸ்.ஐ கீர்த்தி வாசன்

துல்லியமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். இவை அனைத்தும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தின. அதன்படி நேற்று வெளியான தீர்ப்பில் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், கூடுதலாக பத்து ஆண்டுச் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எங்களைவிட பொதுமக்களும் வணிகர்களுமே இந்தத் தீர்ப்பை வரவேற்றதுடன், கொண்டாடித் தீர்த்தனர்.

பெரும் சவாலுடன் அமைந்த ஒரு வழக்கை ஒரு வருடத்துக்குள் முடித்ததுடன், பெரிய தண்டனையையும் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதுடன் ஒரு பாடமாகவும் அமையும். இதில் ஈடுபட்ட போலீஸ் டீமை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் சார் நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமானம் வழங்கி சிறப்பித்தார். ஒவ்வொருவரையும் தனித் தனியாகத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். இந்தப் பாராட்டு பெரும் விருதுக்கு சமம். இது எங்களைச் சோர்வடையாமல் இன்னும் வேகமாக ஓடவைக்கும். பொதுமக்களும் வணிகர்களும் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்" என்கிறார் பெருமிதத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு