Published:Updated:

பஞ்சாப்பில் பிரதமர் சந்தித்த ஆபத்து!

பஞ்சாப்
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சாப்

சுமார் ஓராண்டு காலம் டெல்லியில் போராட்டம் நடத்திவிட்டு ஊர் திரும்பியிருக்கும் பஞ்சாப் விவசாயிகள், பிரதமரின் பயணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி ஜனவரி 5-ம் தேதி பஞ்சாப்புக்குப் போனார். ‘பஞ்சாப்பில் என் சகோதர, சகோதரிகளுடன் இன்று இருக்கப்போகிறேன்’ என்று பெருமையுடன் ட்விட்டரில் அறிவித்துவிட்டுக் கிளம்பியவர், பாதியிலேயே திரும்பி வர நேர்ந்தது. ‘பஞ்சாப் காங்கிரஸ் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாமல், பிரதமரை ஆபத்தில் சிக்கவைத்தது’ என்று பா.ஜ.க குற்றம்சாட்ட, ‘பிரதமர் பேசவிருந்த மைதானத்தில் கூட்டம் இல்லாததால்தான், அவர் திரும்பிப் போய்விட்டார்’ என்று பதிலடி கொடுக்கிறது காங்கிரஸ். உண்மையில் நடந்தது என்ன?

பஞ்சாப்பில் விரைவில் தேர்தல் வருகிறது. தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில், முறையாகத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குச் சற்று முன்பாகச் சென்று பல கோடிகளில் திட்டங்களைத் தொடங்கிவைப்பது பிரதமர் மோடியின் வழக்கம். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் வரிசையில் பஞ்சாப்பிலும் 42,750 கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் தொடங்கிவைப்பதாக இருந்தது. பாகிஸ்தான் எல்லைக்கு ஒரு கி.மீ நெருக்கத்தில், ஹுசைனிவாலா என்ற இடத்தில் பகத் சிங் எரியூட்டப்பட்ட தலத்தில் அமைந்துள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கும் ஃபெரோஸ்பூர் நகரில் அவர் பேசுவதாகத் திட்டம்.

பஞ்சாப்பில் பிரதமர் சந்தித்த ஆபத்து!

ஐந்து மாநிலத் தேர்தல்கள் குறித்த ‘டைம்ஸ் நவ்’ கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. உ.பி-யில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய அந்தக் கருத்துக்கணிப்பு, 117 தொகுதிகள்கொண்ட பஞ்சாப்பில் பா.ஜ.க கூட்டணி அதிகபட்சம் மூன்று தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, நான்காவது இடத்தைப் பிடிக்கும் என்று கணித்திருந்த சூழலில்தான் பிரதமரின் பயணம் அமைந்தது.

சுமார் ஓராண்டு காலம் டெல்லியில் போராட்டம் நடத்திவிட்டு ஊர் திரும்பியிருக்கும் பஞ்சாப் விவசாயிகள், பிரதமரின் பயணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘போராடிய விவசாயிகள்மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கச் சட்டம் கொண்டுவர வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அவர்கள் வீதிக்கு வந்தனர். `கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி’ என்ற அமைப்பு மூலம் மாநிலத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு ஃபெரோஸ்பூர் வந்து பிரதமர் வருகைக்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்தனர். “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பஞ்சாப்பில் பா.ஜ.க எந்த அரசியல் நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது’’ என்று எச்சரித்தார், விவசாயிகள் சங்கத் தலைவர் சத்னம் சிங்.

பஞ்சாப்பில் பிரதமர் சந்தித்த ஆபத்து!

இதனால் பஞ்சாப் போலீஸுக்கு விவசாயிகளை சமாளிப்பதே பெரும் வேலையாகிப்போனது. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வாகனங்களில் கிளம்பி வந்த விவசாயிகளை ஆங்காங்கே மடக்கித் திருப்பி அனுப்பினர். இதையும் தாண்டி யாரும் ஃபெரோஸ்பூரில் நுழைந்துவிடக் கூடாது என்று நகரைச் சுற்றிவளைத்து காவல் போட்டனர். 5,000 பஞ்சாப் போலீஸார், பாரா மிலிட்டரி படை, என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் என்று அந்த நகரமே யூனிஃபார்ம் படைகள் சூழக் காட்சியளித்தது.

பத்திண்டா விமான நிலையத்தில் வந்திறங்கும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலா சென்றுவிட்டு, அதே ஹெலிகாப்டரில் ஃபெரோஸ்பூர் வந்து நிகழ்ச்சியில் பேசுவதாகத் திட்டம். அதனால், இந்த இடங்களை மட்டும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவந்தால் போதும் என்று நினைத்தனர். ஆனால், திடீர் மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்தது.

இன்னொரு பக்கம் பா.ஜ.க-வினர், மோடி நிகழ்ச்சிக்குக் கூட்டம் சேர்க்கத் தடுமாறினர். ‘ஐந்து லட்சம் பேரைத் திரட்டி, பஞ்சாப் வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பெரிய கூட்டத்தை நடத்துவோம்’ என்று அறிவித்திருந்தார், மாநில பா.ஜ.க தலைவர் அஸ்வினி சர்மா. இதற்காக 3,200 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், பிரதமர் கூட்டத்துக்கு மக்கள் போகவிடாதபடி மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் தடுத்தார்கள். ‘யாரும் பா.ஜ.க கூட்டத்துக்குப் போகக் கூடாது’ என்று குருத்வாரா ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு செய்தனர். ‘பா.ஜ.க கொடியுடன் ஃபெரோஸ்பூர் செல்லும் வாகனங்களை மறித்து, திருப்பி அனுப்புவோம்’ என்றும் விவசாயிகள் சொன்னார்கள். (அப்படி மறிக்கப்பட்ட சம்பவங்களும் நிறைய நடந்தன.) இதனால் பிரதமரின் கூட்டத்துக்கு வெறும் 5,000 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை பத்திண்டா விமான நிலையத்தில் வந்து இறங்கினார் மோடி. ஒரு மாநிலத்துக்குப் பிரதமர் வரும்போது முதல்வர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் வந்து அவரை வரவேற்க வேண்டும் என்பது மரபு. ஆனால், பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உட்பட முக்கிய அதிகாரிகள் யாருமே மோடியை வரவேற்க வரவில்லை.

அந்த நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்ததாலும், மழை பெய்ததாலும் உடனடியாகப் பிரதமரின் ஹெலிகாப்டர் கிளம்ப முடியவில்லை. சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்தில் காத்திருந்தார் அவர். மழை விடாது என்று தெரிந்ததால், காரிலேயே செல்ல முடிவெடுத்தார். மோகா-ஃபெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் 110 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். பிரதமரின் எஸ்.பி.ஜி பாதுகாப்புப் படையினர் முறைப்படி பஞ்சாப் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு இந்த இரண்டு மணி நேரப் பயணத்தை ஆரம்பித்தனர்.

ஹுசைனிவாலா நினைவிடத்துக்கு 30 கி.மீ முன்பாக பியாரியானா என்ற கிராமத்தில் ஒரு மேம்பாலத்தை, பிரதமரின் வாகன அணிவகுப்பு அடைந்தபோது, அங்கே நெடுஞ்சாலையை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். முன்னால் சென்ற வாகனங்கள் அங்கேயே நிற்க, பின்னால் வந்த கார்களும் பஸ்களும் பிரதமரின் காரை நெருங்க, பாதுகாப்பு அதிகாரிகள் சட்டென வாகனங்களிலிருந்து இறங்கிவந்து பிரதமரின் கார் அணிவகுப்பைச் சூழ்ந்தனர். பிரதமர் காருக்குச் சுமார் 20 மீட்டர் தூரத்தில் மற்ற வாகனங்கள் நெருங்கிவந்தது, சமீபகாலங்களில் எங்கும் நடக்காத அபாயச் சூழல். சுமார் 15 நிமிடங்கள் காரிலேயே காத்திருந்தார் மோடி. கும்பல் அதிகரிப்பதைப் பார்த்ததும், காரைத் திருப்பி அவரை விமான நிலையத்துக்கே அழைத்துச் சென்றனர் பாதுகாப்பு அதிகாரிகள். பிரதமர் கார் அணிவகுப்பு யூடர்ன் எடுத்துத் திரும்ப முடியாத அளவுக்கு வாகன நெரிசல் இருந்ததுதான் இன்னும் அதிர்ச்சி.

அந்த இடத்தில் பாரதிய கிசான் யூனியன் (கிராந்திகாரி) என்ற அமைப்புதான் சாலையை மறித்துப் போராடிக்கொண்டிருந்தது. பிரதமர் அந்த வழியாக வருவது தெரியாமலேயே, அவர்கள் போராட்டம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. “பிரதமர் கார் அணிவகுப்பு வரப்போகிறது. வழிவிடுங்கள்’’ என்று போலீஸார் சொன்னபோது அவர்கள் நம்பவில்லையாம். போலீஸார் அவர்களை அகற்ற முயன்றபோது, உள்ளூர் குருத்வாராவில் அறிவிப்பு செய்து இன்னும் நிறைய விவசாயிகளை வரவழைத்திருக்கிறார்கள். பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களில் மிகவும் தீவிரமான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்தச் சங்கத்தின் தலைவராக இருந்த சுர்ஜித் பால் என்பவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்.

பஞ்சாப்பில் பிரதமர் சந்தித்த ஆபத்து!

பாதுகாப்புக் குறைபாடுகளால் இரண்டு பிரதமர்களை இழந்த பிறகு, வி.ஐ.பி பாதுகாப்பு குறித்து விரிவான நெறிமுறைகளை வரையறுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். பிரதமரின் பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி படையினர்தான் பொறுப்பு என்றாலும், அவர் பயணம் செய்யும் மாநிலங்களில் ஒட்டுமொத்த பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும். பயணங்களில் கடைசி நேர மாறுதல் ஏற்படலாம் என்பதால், மாற்று ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்தச் சாலையில் தடையற்ற பயணத்தை உறுதி செய்திருக்கவேண்டியது பஞ்சாப் போலீஸின் பொறுப்பு.

“ஒரு பஞ்சாபியாக, பிரதமரைப் பாதுகாக்க நான் உயிரையும் கொடுப்பேன். அவருக்கு ஆபத்தோ, பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை’’ என்கிறார் பஞ்சாப் முதல்வர் சன்னி. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு அமைத்த கமிட்டியின் தலைவரான நீதிபதி மெஹ்தாப் கில், “கவனக்குறைவு நடந்தது உண்மை. இது மிகவும் தீவிரமான பிரச்னை’’ என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் யாருக்கு அரசியல் ஆதாயம் தரப்போகிறது என்பதைத் தாண்டி, இதனால் பல தலைகள் உருளப்போகின்றன என்பது நிஜம்!