Published:Updated:

``ஒரு மந்திரி ஆகணும்னு ஆசைப்பட்டதே இல்ல!” - முரசொலி மாறன் @1989

முரசொலி மாறன் ( vikatan Archives )

“மாதா, பிதா, குரு, தெய்வம்... எல்லாமே எனக்கு கலைஞர்தான்...” 1989ல் முரசொலி மாறனின் பேட்டி ஆனந்த விகடனிலிருந்து...

``ஒரு மந்திரி ஆகணும்னு ஆசைப்பட்டதே இல்ல!” - முரசொலி மாறன் @1989

“மாதா, பிதா, குரு, தெய்வம்... எல்லாமே எனக்கு கலைஞர்தான்...” 1989ல் முரசொலி மாறனின் பேட்டி ஆனந்த விகடனிலிருந்து...

Published:Updated:
முரசொலி மாறன் ( vikatan Archives )

“மாதா, பிதா, குரு, தெய்வம்... எல்லாமே எனக்கு கலைஞர்தான்...” என்று தன் பேட்டியை ஆரம்பித்தார், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  முரசொலி மாறன். இவர், கலைஞரைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் ‘மாமா’ என்றுதான் மரியாதையுடன் அழைக்கிறார். 

“சாதாரண விவசாயக் குடும்பத்துல பிறந்தவன் நான். எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடியிருந்தே அரசியல் கூட்டங்களுக்கெல்லாம் மாமா அழைச்சுக்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டார். மாமாவும் மத்தவங்களும் பேசற விஷயம் ஒண்ணுமே புரியாது.... ஆனாலும் மாமா சிரிக்கிறப்ப நானும் சிரிச்சி, மாமா  சிந்திக்கறப்ப நானும் மோவாயிலே கைவெச்சு சிந்திக்கற மாதிரி... இப்படி முழுக்க அவரோட உணர்வுகளே என்னுள் தங்கிவிட்டது...” என்று சொல்லிச் சிரித்தார். 

மாறனின் நிஜப்பெயர் தியாகராஜசுந்தரம். இந்தப் பெயரை ‘நெடுமாறன்’ என்று மாற்றியவர் கலைஞர். ஆனால், நெடுமாறன் என்ற பெயரில் ஏற்கெனவே இரண்டு பேர் இருந்ததால், ‘முரசொலி’ பத்திரிகையின் பெயரை தனக்கு முன்னால், சேர்த்துக் கொண்டு ‘முரசொலி மாறன்’ ஆனார். 

முரசொலி மாறன்
முரசொலி மாறன்
vikatan Archives

“நான் மாமா மாதிரி பெரிய எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வரணும்னு நெனைச்சேனே தவிர, மந்திரியாகணும்னெல்லாம் ஆசைப்பட்டதில்லே... அதிலேயும் எனக்கு சின்ன வயசிலே சரியா பேசக்கூட வராது. தொண்டையில் ஒரு கோளாறு. இதனால் வார்த்தைகளைச் சரியா உச்சரிக்க முடியாமல் கஷ்டப்படுவேன். இதனால் எழுத்துத் துறையிலும், படிப்பிலும் அதிகக் கவனம் செலுத்தினேன். அப்புறம் எனக்கு தொண்டையில் சின்ன ஆபரேஷன் செய்த பிறகு பேச்சுத் தெளிவானது..." என்றவர் தொடர்ந்து, "அப்போதெல்லாம் தி.மு.க-வில் படித்த இளைஞர்களே மிகக் குறைவு. அதனாலோ என்னவோ, நான் பி.ஏ. ஆனர்ஸ் டிகிரி முடித்த சமயம், இந்தச் செய்தியை 'நம்நாடு' பத்திரிகையில் ‘போட்டோ நியூஸ்’ ஆக வெளியிட்டார்கள்.” 

1967-ல் தென் சென்னை தொகுதி எம்.பி-யாக இருந்த அண்ணா தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியின் சார்பாக முரசொலி மாறன் தேர்தலில் நின்றபோது, வேட்புமனுவை முன்மொழிந்தவர் அண்ணா. இதை வழிமொழிந்தவர்கள் - அப்போது சுதந்திரா கட்சித் தலைவராக இருந்த ராஜாஜியும் முஸ்லிம் லீக் தலைவரான காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபும். 

“அதுவரை ஓரிரு மேடைகளில் மட்டுமே பேசிப்பழக்கப்பட்ட நான், அதிகம் பேசியது நாடாளுமன்றத்தில்தான். இதனாலேயே வட இந்திய அரசியல்  பிரமுகர்களின் நெருங்கிய நண்பனாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது நான் மந்திரியானதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள்கூட எனக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்...” என்று சொன்ன மாறன் பேசும்போது தொடர்ந்து இருகால்களையும் ஆட்டிக்கொண்டே இருந்தார். 

“76-ல் மிசா கைதியாக இருந்தபோது ஜெயிலிலுள்ள பாத்ரூமில் சோப்பை எடுக்க எத்தனித்தபோது இடுப்பில் ஒருவித பிடிப்பு ஏற்பட்டது... அதை சரியாக கவனிக்க முடியாமல் சுமார் ஒரு வருடம் படுக்கையில் கிடந்தேன்...” என்ற தகவலைக் கூறினார் அமைச்சர். 

பிடித்த விளையாட்டு என்றால் 'படிப்பு' என்றும் பொழுதுபோக்கு என்றால் 'படிப்பு' என்றும் கூறும் மாறன், "என்னிடமுள்ள லைப்ரரியில் இடம்பெறாத எழுத்தாளர்களே கிடையாது... நாடகம், கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த சமயம் எல்லாவிதமான புத்தகங்களையும் படிப்பேன்... ஆனால் இப்போது கட்டுரைகள் மட்டுமே படிக்கிறேன்” என்றார். 

டில்லியில் பதவியேற்பின்போது தமிழில் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்ட விஷயம் குறித்து விளக்கினார்: "தமிழ் மொழி அறிந்தவர் குடியரசுத் தலைவர். அதனால், நான் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள விரும்பி அனுமதி கேட்டேன்... ஆனால், தமிழில் உறுதிமொழியை தயார்செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. எனவேதான் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்தேன்...” 

மாறனின் மனைவி பெயர் மல்லிகா, 'கலைஞர்தான் பார்த்துக் கட்டிவைத்தார். மணமேடையில் வைத்துதான் அவளை முதன்முதலாகப் பார்த்தேன்... அப்போது போலவேதான் அவள் இப்போதும்." என்று சொல்லி அருகிலிருந்த மனைவியைப் பார்த்துச் சிரித்தார். மாறன்-மல்லிகா தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள், மூத்த மகன் கலாநிதி (கலைஞர் வைத்த பெயர்: 'புகழ்') எம்.பி.ஏ. முடித்து, முரசொலி  பத்திரிகை நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். இரண்டாவது மகன் தயாநிதி (கலைஞர் வைத்த பெயர்: 'அன்பு') இங்கிலாந்தில் எம்.எஸ்ஸி. படித்து வருகிறார். பெண் அன்புக்கரசி. 9-ம் வகுப்பு படிக்கிறார். 

தனது வாரிசுகளை அரசியலுக்கு அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று உறுதியாகக் கூறியதுடன், "அவர்களுக்கே ஆர்வம் இல்லை... அரசியலில், அதுவும் தி.மு.க-வில் வாரிசைத் திணிப்பது என்பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாதே..." என்று கூறியபடி பேட்டியை முடித்துக் கொண்டார்.  

பேட்டி. வி. குமார் 

படங்கள்: ஆர். விஜி

(17.12.1989 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)