``நடராசனை ஒதுக்கியே வைத்திருக்கிறேன்'' ஜெயலலிதா சொன்ன தினம் இன்று! #OnThisDay

தேர்தல் காலங்களில் நடராசன் முக்கிய ரோல் வகிப்பார். அப்படி 2001 தேர்தலில் அவர் மூக்கை நுழைத்தபோது, ``நடராசனிடம் கட்சியினர் ஏமாந்துவிட வேண்டாம்'' எனத் திடீரென அறிக்கை விட்டார் ஜெயலலிதா. அந்த அறிக்கை வெளியிட்ட தினம் இன்று. அதன் பின்னணியை அலசுகிறது கட்டுரை.
2001 சட்டசபைத் தேர்தல் நேரம் அது.
தேர்தல் நேரங்களில் சசிகலாவின் கணவர் நடராசன் பற்றிய பேச்சுகள் கிளம்பும். அப்படித்தான் 2001 சட்டசபைத் தேர்தலின் போதும் நடராசனின் பெயர் அடிபட்டது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலா, நடராசனின் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனிலேயே சசிகலாவும் நடராசனும் குடியேறினார்கள். 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் எல்லை மீறிப் போனது. சசிகலாவின் சகோதரர் திவாகரன், அக்காள் மகன் தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போயஸ் கார்டனுக்குள் கால் பதித்தார்கள். சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி, குடும்பத்தினர் அடுத்தடுத்து போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆக்கினார்கள். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தமிழகமே அதிரும் வகையில் நடைபெற்றது. சசிகலாவை `உடன்பிறவா சகோதரி'' என உரிமை பாராட்டினார் ஜெயலலிதா.
1996 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனார். ''அ.தி.மு.க தோல்விக்கு சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம்தான் காரணம்'' என விமர்சனம் எழுந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ''சசிகலாவுக்கும் எனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை. அவரை ஒதுக்கி வைத்துவிட்டேன்'' என்றார். ஆனால், அடுத்த சில மாதங்களில் மீண்டும் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா. ஆனால், நடராசனை மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை.

நடராசன் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருந்தார். 2001 சட்டசபைத் தேர்தல் நெருக்கத்தில், தன் ஆலோசனை கேட்டுதான், ஜெயலலிதா செயல்படுகிறார் என்பதுபோல நடராசனின் செயல்பாடுகள் அமைந்தன. அ.தி.மு.க கூட்டணி விஷயங்களை எல்லாம் தான்தான் கவனிப்பதுபோல பேச ஆரம்பித்தார் நடராசன். இது ஒவ்வொரு தேர்தலின்போதும் நடராசனிடம் வெளிப்படும். அப்படித்தான் 2001 சட்டசபைத் தேர்தலிலும் நடந்தது.
1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஜெயலலிதா ஐந்தாண்டுகள் தவம் கிடந்த நிலையில், 2001 சட்டசபைத் தேர்தல் வந்தது. எப்படியாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதற்காகக் கூட்டணியைப் பலப்படுத்தி வந்தார் ஜெயலலிதா. மூப்பனாரின் த.மா.கா, பா.ம.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், லத்தீப்பின் தேசிய லீக், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், சந்தானத்தின் பார்வார்டு ப்ளாக் கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தார் ஜெயலலிதா.

எப்படியாவது ஆட்சியில் அமர்வதற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை வாரி வழங்கியது அ.தி.மு.க. மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களுக்குச் சற்று அதிகமாகத்தான் போட்டியிட்டது.
அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள் தேர்வு நடந்துகொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுவதற்காக நடராசன் வீட்டில் கட்சியினர் தவம் கிடக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகின. இப்படியான நிலையில், ''நடராசனிடம் கட்சியினர் ஏமாந்துவிட வேண்டாம்'' எனத் திடீரென அறிக்கை விட்டார் ஜெயலலிதா.

2001 மே 10-ம் தேதி தேர்தல். அதற்கு ஒரு மாதம் முன்பு, அதாவது 2001 ஏப்ரல் 8-ம் தேதி ''நடராசனுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது'' என ஜெயலலிதாவிடம் இருந்து காட்டமான அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா என்ன சொல்லியிருந்தார்?
''இதுவரை நான் சந்தித்த ஒவ்வொரு தேர்தலின்போதும் நடராசன் குறித்து நான் அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். இப்போது அவர் திருந்தியிருப்பார் என நினைத்தேன். ஆனால், அவர் போக்கில் எந்தவித மாற்றமும் இல்லை. எனக்கு உறுதுணையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர் முயலுகிறார். அதன் மூலம் அ.தி.மு.க-வினரையும் தோழமைக் கட்சித் தலைவர்களையும் ஏமாற்ற முயன்று, மோசடி செய்வது அவரது வழக்கம்.

நடராசனுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்குத் தொகுதிகள் முடிவு செய்வதிலோ, வேட்பாளர் தேர்வு செய்வதிலோ எந்தப் பங்கும் இல்லை. அவரை நான் பார்த்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. அவரை நான் ஒதுக்கியே வைத்திருக்கிறேன். என்னை அவர் பார்க்கவும் முடியாது. பேசவும் முடியாது. தேர்தல் நெருங்கி வருவதால் மீண்டும் என்னுடனும் அ.தி.மு.க-வுடனும் தொடர்பு இருப்பதாக அவர் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.
புத்தக வெளியீட்டு விழா என்ற பெயரில் பலர் முன்னிலையில் என்னைப் பற்றிப் பேசி அ.தி.மு.க-வினரை குழப்ப முயல்கிறார். நடராசன் புத்தகம் வெளியிடுவதிலும், விழாக்களில் பங்கேற்பதிலும் எனக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால், என்னைப் பற்றி நடராசன் பேசுவது ஆட்சேபனைக்குரியது. என்னைப் பற்றிப் பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் விழாக்களே நடத்துகிறார். என்னைப் பற்றிப் பேசும் செய்திகள் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று விரும்புகிறார். அதன் மூலம் அ.தி.மு.க-வுடன் தொடர்பு உள்ளது என நடராசன் காட்டிக்கொள்ள முயல்கிறார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாக அவர் பலரை ஏமாற்றி வருகிறார். அதுபோல் யாராவது ஏமாந்தால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. எப்போதும் போல் 'ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பின்னால் நான் இருப்பேன்' என நடராசன் கூறுவது அ.தி.மு.க-வினரை ஏமாற்றும் முயற்சி. என் வெற்றிக்குப் பின்னால் பொது மக்களும் தொண்டர்களும்தான் இருக்கிறார்கள். நடராசனிடம் அ.தி.மு.க-வினரும் தோழமைக் கட்சியினரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நடராசனுடன் அ.தி.மு.க-வினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்''
இதுதான் ஜெயலலிதா அறிக்கையில் இடம்பெற்ற விஷயம். இந்த அறிக்கைக்கு நடராசனிடமிருந்து நோ ரியாக்ஷன். நடராசன் கை ஓங்குவதும் ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்வதும் வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும் சம்பிரதாயம். ஆனாலும்கூட நடராசனின் கை தேர்தலில் ஓங்கி இருக்கும் 2001 தேர்தலில் நடராசன் தயவில் சீட் வாங்கியவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ-க்களாக மட்டுமல்ல மந்திரிகளாகவும் ஆனார்கள்.

''நடராசனை ஒதுக்கியே வைத்திருக்கிறேன். என்னை அவர் பார்க்கவும் முடியாது. பேசவும் முடியாது'' என 2001-ல் சொன்ன ஜெயலலிதா, 2011 டிசம்பரில் சசிகலா உள்ளிட்டோரைக் கட்சியில் இருந்து கட்டம் கட்டியபோது நடராசன் பெயர் சசிகலாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. 2001-ல் ''ஒதுக்கியே வைத்திருக்கிறேன்'' எனச் சொன்ன நடராசன் எப்படி பத்தாண்டுகள் கழித்து 2011-ல் கட்சியில் சேர்ந்தார் என யாரும் கேள்வி எழுப்பவில்லை.
எல்லாம் காட்சிகளுமே போயஸ் கார்டனில் அரங்கேறிய நாடகம்.