Published:Updated:

சப்பாத்தி... மரப்படுக்கை.. உறக்கமில்லா தவிப்பு! ப.சிதம்பரத்தின் திகார் இரவு

ப.சிதம்பரம் சிறைக்குள் சென்றபோது, மகன் கார்த்தியும் வழக்கறிஞர்களுடன் திகார் வரை வந்திருந்தார். திகாரில் 7-ம் எண் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

P. Chidambaram
P. Chidambaram

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 19-ம் தேதி வரை அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திகாரில் 4-ம் எண் கதவு வழியாக அவர் சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்டார். மீடியாக்கள் சிதம்பரத்தைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது, சிறை அதிகாரிகள் அவரின் முகத்தை மூட முயன்றனர். ஆனால், சிதம்பரம் அலட்டிக்கொள்ளவில்லை.

Tihar Jail
Tihar Jail

ப.சிதம்பரம் சிறைக்குள் சென்றபோது, மகன் கார்த்தியும் வழக்கறிஞர்களுடன் திகார் வரை வந்திருந்தார். திகாரில் 7-ம் எண் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்தச் சிறையில் 600 முதல் 700 கைதிகள் உள்ளனர். பெரும்பாலானோர் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். அதேபோல், பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களும் இந்தச் சிறையில் அடைக்கப்படுவது காலம்காலமாக நடைமுறையில் உள்ளது.

திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள இதே சிறையில்தான் மகன் கார்த்தியும் அடைக்கப்பட்டிருந்தார். கார்த்தி இங்கே 12 நாள்கள் இருந்தார். நேற்று இரவு உணவாக 5 சப்பாத்தி, பருப்பு, கூட்டு, கொஞ்சம் சாதம் வழங்கப்பட்டன. சிதம்பரம் கொஞ்சமாகச் சாப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.

 Wooden Cot
Wooden Cot

சிறை விதிப்படி கைதிகள் தரையில்தான் உறங்க வேண்டும். சீனியர் சிட்டிசன் என்ற அடிப்படையில் ப.சிதம்பரத்துக்கு மரக்கட்டில் கொடுக்கப்பட்டது. உறங்காமல் நீண்டநேரம் கண் விழித்து இருந்துள்ளார். சிறையைப் பொறுத்தவரை, காலை 7 முதல் 8 மணிக்குள் காலை உணவு வழங்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சிறை வளாகத்தில் சுதந்திரமாகப் போகலாம்; வரலாம். பின்னர் தனியறையில் அடைக்கப்படுவார். கேன்டீனிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை இயக்குநர் சந்தீப் கோயல் கூறுகையில், ``சிறை என்பது சிறைதான். இங்கே சிதம்பரம் மற்ற கைதிகளைப்போலத்தான் நடத்தப்படுவார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்'' என்றார்.

P Chidambaram, Karthi
P Chidambaram, Karthi

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், மும்பைத் தாக்குதலின்போது, தீவிரவாதிகளைக் கைதுசெய்ய கடும் நடவடிக்கை எடுத்தவர். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, சிறை எண் 1-க்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்தச் சிறையில் 2ஜி வழக்கில் விடுதலையான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, எம்.பி கனிமாழி, சகாரா அதிபர் சுப்ரதா ராய், காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2004-ல் 17.79 கோடி, 2009-ல் 27.50 கோடி, 2016-ல் 95.66 கோடி! ப.சிதம்பரம் சிக்கிய கதை