Published:Updated:

மகாராஷ்டிராவில் மத வன்முறைக்கு வித்திடும் ‘மசூதி ஒலிபெருக்கி’ சர்ச்சை!

ராஜ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரேவை ரிமோட்டில் இயக்கும் பா.ஜ.க!

மகாராஷ்டிராவில் மத வன்முறைக்கு வித்திடும் ‘மசூதி ஒலிபெருக்கி’ சர்ச்சை!

ராஜ் தாக்கரேவை ரிமோட்டில் இயக்கும் பா.ஜ.க!

Published:Updated:
ராஜ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
ராஜ் தாக்கரே

‘ஹிஜாப் அணியத் தடை’ என்ற சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை... அதற்குள்ளாக ‘மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ என அடுத்த சர்ச்சையைக் கொளுத்திப் போட்டிருக்கிறது, பாரதிய ஜனதா. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ‘நவநிர்மாண் சேனா’தான் இந்த விவகாரத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது!

மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே. நவநிர்மாண் கட்சித் தலைவராக இருக்கும் அவர், தொடர் தோல்விகளால் துவண்டுபோனதால், தற்போது பா.ஜ.க ஆதரவுடன் இந்துத்துவா கொள்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 2-ம் தேதி, மும்பை தாதரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியவர், “மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகள் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே நாங்கள் `ஹனுமன் சாலிசா’ எனப்படும் பாராயணத்தைப் பாடுவோம்” என்று எச்சரித்தார்.

மகாராஷ்டிராவில் மத வன்முறைக்கு வித்திடும் ‘மசூதி ஒலிபெருக்கி’ சர்ச்சை!

‘சிவசேனா கட்சி, இந்துத்துவா கொள்கைகளைக் கைவிட்டுவிட்டது!’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டிவரும் பாரதிய ஜனதா கட்சியினர், ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சுக்கு ஆதரவு கொடுத்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ் தாக்கரேவின் வீடு தேடிச் சென்று பேசினார். இதையடுத்து, ராஜ் தாக்கரே பேச்சில் இன்னும் வேகம் கூடியது. “மகாராஷ்டிரா அரசு, மே 3-ம் தேதிக்குள் அனைத்து மசூதிகளிலுமிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், நாங்கள் மசூதிகள் முன்பாக ஹனுமான் பாடல்களைப் பாடுவோம். முன்னதாக, மே ஒன்றாம் தேதி அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம்” என்று அதிரடியாக அறிவித்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அவுரங்காபாத் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தெரிந்தே அவர் பேசியதாக விமர்சனம் எழுந்தது.

இதற்கிடையே, ஒலிபெருக்கி விவகாரத்தைப் பெரிதாக்கும் வகையில், சுயேச்சை எம்.பி-யான நவ்நீத் ராணா, அவரின் கணவரும் எம்.எல்.ஏ-வுமான ரவி ராணா ஆகியோரை பாரதிய ஜனதா களமிறக்கியது. இருவரும் முதல்வரின் இல்லத்துக்கு முன்பாக ஹனுமன் சாலிசா பாடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, முதல்வர் வீட்டுக்குச் சென்ற அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் சென்றார்கள். எதிர்த்தரப்பில் சிவசேனா தொண்டர்களும் அங்கு கூடியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘மத உணர்வு புண்படும் வகையில் நடந்துகொண்டதாக’ நவ்நீத் ராணா, ரவி ராணா இருவரையும் மும்பை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருக்கும் இருவரையும் பார்க்கச் சென்ற, பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரித் சோமையா வாகனத்தை சிவசேனா தொண்டர்கள் தாக்கினார்கள். ‘தொண்டர்களை ஏவிவிட்டு தன்னைக் கொல்ல முயல்கிறது சிவசேனா’ எனவும், ‘இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும்’ எனவும் டெல்லிக்குச் சென்று, மத்திய உள்துறைச் செயலாளரிடம் புகாராளித்தார் கிரித் சோமையா.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும், தன் பங்குக்கு சிவசேனா அரசைக் காட்டமாக விமர்சித்தார். ஆனால், ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கியை அகற்ற முடியாது’ என சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது.

இது பற்றிப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல், “ஒலிபெருக்கி விவகாரத்தில், தேசியக் கொள்கை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். இந்த நிலையில், யாராவது சட்டத்தைக் கையிலெடுக்க நினைத்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்திருக்கிறார்.

நிதின் கட்கரி, ராஜ் தாக்கரே
நிதின் கட்கரி, ராஜ் தாக்கரே

ஒலிபெருக்கி விவகாரத்தால், மும்பை நகரில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க போலீஸார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இது குறித்துப் பேசுகிற மும்பை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் ஹரி பாலாஜி, ‘‘குற்றப் பின்னணி கொண்டவர்களை அடையாளம் காணும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. மும்பையிலுள்ள 94 காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 56 ரிசர்வ் போலீஸ் படையும், ஆறு வன்முறைத் தடுப்புப் படையும் தயாராக இருக்கின்றன” என்றார்.

இதற்கிடையே, மாநிலத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு, மாநில அரசிடம் மே 3-ம் தேதிக்குள் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பற்றிப் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘‘யாருக்காவது ஹனுமான் பாடல்களைப் பாட வேண்டுமானால், என் வீட்டுக்கு வாருங்கள். அதேசமயம், இந்த விவகாரத்தை வைத்து தாதா கிரித்தனம் செய்ய நினைத்தால், அதை பால் தாக்கரே வழியில் நின்று ஒடுக்குவோம். எங்களை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு முயல்கிறார்கள். அதனால்தான், நாங்கள் இந்துத்துவா கொள்கையைக் கைவிட்டுவிட்டதாகப் புலம்புகிறார்கள். அவர்களின் முயற்சி பலிக்காது’’ என்றார் காட்டமாக.

அடுத்த சில மாதங்களில், மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் களம் இப்போதே தகிக்கத் தொடங்கிவிட்டது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism