``வாங்கித்தான் ஆக வேண்டும்!” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா? #DoubtOfCommonMan

நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்கும்போது இதர பொருள்களான சோப்பு, பவுடர் போன்ற பொருள்களைக் கட்டாயம் வாங்க வேண்டுமா?
அரசு அறிவிக்கும் திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடைவதில், தமிழகத்தின் நியாயவிலைக் கடைகளுக்கு பெரும் பங்குள்ளது. அது இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி, பொங்கல் சிறப்புப் பரிசுத் திட்டமாக இருந்தாலும் சரி, அவை தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் 33,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளின் மூலமாகத்தான் மக்களைச் சென்றடைகின்றன.


இந்த நியாயவிலைக் கடைகளுக்கும் தமிழக அரசியலுக்குமே பெரும் தொடர்பு உள்ளது. “ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்” என 1967 தேர்தல் பிரசார மேடைகளில் ஒலித்த அண்ணாவின் குரல்தான், தமிழகத்தின் ஆட்சி மாற்றத்துக்கான வழிகோலாக அமைந்தது. அதன்பிறகான காலங்களிலும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி முதல் இன்று இலவச அரிசி வரை அதன் பரிமாணங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் பொது விநியோக முறையில் நடந்தேறிவரும் சில முறைகேடுகள், நியாயவிலைக் கடைகளின் மீதான நம்பகத் தன்மையை அவ்வப்போது கேள்விக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், `நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்கும்போது இதர பொருள்களான சோப்பு, பவுடர் போன்ற பொருள்களை வாங்கக் கட்டாயப்படுத்துகின்றனர். ஏன் என்று கேட்டால் மேலிட அதிகாரிகள் சொல்கிறார்கள் என்கிறார்கள்… இந்த இதர பொருள்களைக் கட்டாயம் வாங்கியாக வேண்டுமா... இதற்குத் தீர்வு என்ன?' என்ற கேள்வியை #DoubtOfCommonMan பக்கத்தில் சிவசுப்பிரமணியன் என்ற வாசகர் எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரனிடம் பேசினோம். “நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் சோப்பு, பவுடர் என இதர பொருள்கள் வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பொருள்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது என்பதும் சட்டப்படி குற்றம். ஆனால், இந்தப் பொருள்களை வாங்க நியாயவிலைக் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மைத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. அதேவேளையில், இதற்குப் பின்னால் நடந்தேறிக் கொண்டிருக்கும் முறைகேடுகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
நியாயவிலைக் கடைகளைப் பொறுத்தவரை, இரண்டுவிதமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒன்று அரிசி, மண்ணெண்ணெய் போன்ற கட்டுப்பாட்டுப் பொருள்கள். மற்றொன்று சோப்பு, பெருங்காயம், தேங்காய் எண்ணெய், சிகைக்காய் போன்ற கட்டுப்பாடற்ற பொருள்களாகும்.

இந்தக் கட்டுப்பாடற்ற பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கென்று தனியாகக் கூட்டுக் கொள்முதல் குழு உள்ளது. இந்தக் குழுதான் எந்தெந்த பொருள்களை வாங்கலாம், அதை எந்த நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யலாம் போன்ற முடிவுகளை எடுக்கும்.
இந்தக் கமிட்டி, எந்த நிறுவனம் அதிக கமிஷனை வழங்குகின்றதோ, அவர்களிடம் பேரம்பேசி அந்தப் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும். உதாரணாமாக, ‘எங்களிடம், கோவை , ஈரோடு, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்கள் இருக்கின்றன. அங்கு இருக்கும் நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்தீர்கள் என்றால், ஆண்டுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும்’ என டீலர்களிடம் பேரம் பேசி கமிஷனைப் பெற்றுக்கொள்வார்கள். அதன் அடிப்படையில், தயாரிப்பாளர்களிடமிருந்து கமிஷன் தொகைகள் எல்லாம் அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்றால், அவர்களுடைய பொருள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரும்.

இந்த டீலர்ஷிப்பைப் பெறுவதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு அதிகமான கமிஷன் தொகையைத் தருவதால், இந்தப் பொருள்களுடைய விலையும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனைக்கு வரும்போது அதிகரித்துவிடுகிறது. ஒருவேளை, இந்தப் பொருள்கள் தரமானதாக இருந்தால் மக்களே அவற்றைக் கேட்டு வாங்குவார்கள்.
ஆனால், பல பொருள்கள் தரமற்ற முறையில் லாபநோக்கத்துடன் நியாயவிலைக் கடைகளுக்காகவே தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. இது, நியாயவிலைக் கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். அதேபோல், இன்னொரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேமியா தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால், நீங்கள் தனியாக அந்த நிறுவனத்துக்குப் போன் செய்து, 'உங்கள் பொருள்கள் தரமாக இருக்கிறது. நாங்கள் விற்பனை செய்ய டீலர்ஷிப் வழங்குங்கள்' எனக் கேட்டால். உங்களை ரேஷன் கடையில் வாங்கச் சொல்வார்களே தவிர, டீலர்ஷிப் தரமாட்டார்கள். காரணம், இந்தப் பொருள் எல்லாம் முழுக்க முழுக்க ரேஷன் கடைகளுக்காகத் தயாரிக்கப்படுபவைதான்.ba

அதனால்தான், இவற்றை வாங்க மறுத்து இலவச அரிசியை வாங்க வரும் பொதுமக்கள், ஏன் இந்தச் சோப்பு போன்ற பொருள்களை வாங்கச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறீர்கள் என நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் கேட்கிறார்கள். அதேவேளையில், உயர் அதிகாரிகள் இந்தப் பொருள்களை விற்றால்தான் உங்களுக்கு ஊதியம் என நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு அழுத்தத்தையும் கொடுக்கின்றனர். ஒருவேளை, இந்தப் பொருள்கள் கெட்டுப்போனாலும் அதற்கான தொகையை நியாயவிலைக் கடை ஊழியர்கள்தான் செலுத்த வேண்டும் என்ற நிலையுள்ளது. அதனால்தான் நியாயவிலைக் கடை ஊழியர்களும் பொதுமக்களைக் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆனால் அரசாங்கம், இந்தக் கட்டுப்பாடற்ற பொருள்களை வாங்கச்சொல்லி பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என எல்லா நியாயவிலைக் கடைகளிலும் பலகைகளை வைத்துள்ளது. அதேவேளையில், நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஏதாவது ஒரு மளிகைப் பொருளை விற்க மாட்டேன் என்றால், அவரைப் பணிமாற்றம் செய்துவிடுவார்கள். அதற்குப் பயந்தாவது நியாயவிலைக் கடை ஊழியர்கள் விற்பனை செய்துவிடுவார்கள்” என்றார்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை பதிவாளர் கோவிந்தராஜ் , “இதுமாதிரியான மளிகைப் பொருள்களைக் கட்டாயம் வாங்க வேண்டுமென்ற எந்த அவசியமும் கிடையாது. தேவைப்படுபவர்கள் ஒரே இடத்தில் வாங்கிக்கொள்வதற்காகத்தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம். அதேபோல், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளோம். ஒருவேளை, இது சம்பந்தமான புகார்கள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்களிடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக உள்ளோம்” என்றார்.
பெயரில் இருக்கும் நியாயம், நடைமுறையிலும் இருந்தால் அனைவருக்கும் நலம்தான்.
இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும். உங்களுக்குக் கேள்விகள் இருப்பின் கீழே பதிவு செய்யவும்.
